ஞாயிறு கொண்டாட்டம்

புதிய அண்ணன்-தங்கை கதை!

""என் முந்தைய படங்களுக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல. ஒரு படம் எந்த மாதிரி வரும் என்பதை இயக்குநரே முடிவு செய்து விட முடியாது.

தினமணி

""என் முந்தைய படங்களுக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல. ஒரு படம் எந்த மாதிரி வரும் என்பதை இயக்குநரே முடிவு செய்து விட முடியாது. தயாரிப்பாளர், நடிகர் என எல்லோருக்கும் வளைந்து கொடுத்து படம் எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி வந்து சேருகிற ஒரு வெற்றிக்கு பங்கு போட மட்டுமே நிறைய பேர் இருக்கிறார்கள். தோல்வி என்றால் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். இனி எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் 4 வருடங்கள் கழித்து நான் எடுத்து வைக்கும் அடி இது. வந்து சேர்ந்திருக்கிற நிதானமும், பக்குவமும் இனி எல்லாவற்றையும் மாற்றும். சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இந்த "கங்காரு' இருக்கும்.'' ஏடா கூட இயக்குநர் என்ற பெயரை மாற்ற ஒவ்வொரு வார்த்தைகளிலும் நம்பிக்கை தெளிக்கிறார் இயக்குநர் சாமி.
 ஆயிரம் சமரசங்கள் இருந்தாலும், ஒரு சினிமாவுக்கு இயக்குநர்தானே பொறுப்பு...? உங்களைத்தானே கேள்விக் கேட்க முடியும்...?
 திருவாரூர் பக்கம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவன் நான். கண்களில் கனவையும், நெஞ்சில் நம்பிக்கையும் சுமந்து தமிழ் சினிமாவுக்கு பயணமானவன். ஆயிரம் கதைகள் என்னிடம் உண்டு. ஆனால், கேட்பதற்கு யாருமில்லை. "வேறு மாதிரி ஏதாவது இருந்தால்....' என தலை சொறிந்த தயாரிப்பாளர்கள்தான் இருந்தார்கள். நான் சொன்ன கதையை "இப்படி இருந்தால் எப்படியிருக்கும்...' என எனக்கே மாற்றி சொன்னார்கள்.
 உறவுகளின் உன்னதத்தை போதித்திருக்க வேண்டிய சினிமா "உயிர்.' ஆனால் அது வேறு மாதிரி ஆகி விட்டது. அது ஹிட்டானதும், தேடி வந்த தயாரிப்பாளர்கள் "அது மாதிரி கதை இருக்கா?' என்றுதான் கேட்டார்கள்.
 இப்போது எனக்குள் வந்து சேர்ந்திருக்கிற பக்குவம் அப்போது இருந்திருந்தால், "மிருகம்' இன்னும் ஒரு மேன்மை படமாக வந்து சேர்ந்திருக்கும். "சிந்து சமவெளி' என் கதை அல்ல. இப்படி ஒரு படம் எடுங்கள் என நான் வலியுறுத்தப்பட்டதால் எடுக்கப்பட்ட படம்.
 இதற்கிடையில் "சதம்', "சரித்திரம்', "சித்திரம்' இவையெல்லாம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நின்று போன படங்கள். அந்தப் படங்கள் ஒரு வேளை வந்திருந்தால் என் அடையாளம் மாறியிருக்கும். அங்கீகாரங்கள் தேடி வந்திருக்கும். கலையாகவும், ஆயுதமாகவும் இருக்க வேண்டிய சினிமா, வெறும் வியாபாரமாக மாறிப் போனதால் பாதிக்கப்பட்டவன் நான்.
 ஆனால் இந்த முறை வேறு மாதிரி வந்திருக்கிறேன். ரசிகர்கள் ஆதரித்தால் என் சினிமா பயணம் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போகும்.
 இப்படியொரு நம்பிக்கைக்கு எந்த விதத்தில் கைக் கொடுக்கும் இந்த "கங்காரு'...?
 என் உதவியாளர் சாய் பிரசாத் ஒரு பயணத்தின் போது இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கேட்ட நிமிடத்திலேயே அதற்கு "கங்காரு' என பெயர் வைத்தேன். தமிழ் சினிமாவுக்கு புதுக் கதை அல்ல. தலைமுறைகளாய் பார்த்து வந்த கதைதான். "பாச மலர்', "முள்ளு மலரும்', "கிழக்கு சீமையிலே' இவையெல்லாம் அண்ணன் - தங்கை உறவுக்கு புது இலக்கணம் வகுத்து தந்தன. அந்த பின்னணிதான் இதன் சாராம்சம். ஆனால், அதை தந்திருக்கும் விதம் முற்றிலுமாக சினிமாவுக்கு புதிது. உறவுகளின் பின்னணியில் சொல்லப்படும் கதைகளில் இருக்கும் நாடகத்தனத்தை தவிர்க்க முடியாது. ஆனால் இது எதார்த்தம் ஒருங்கே சேர்ந்த கதை.
 இது மாதிரியான கதைகளுக்கு இப்போது இடமிருக்கா...? சினிமாக்களைப் போல் ரசிகனின் ரசனையும் மாறி விட்டதல்லவா...?
 தற்கால சினிமாக்கள் அப்படி புரிந்து வைத்திருக்கின்றன. நல்ல சினிமாக்களுக்கு என்றைக்கும் காலம் உண்டு. என்ன... அது சினிமாவாக மட்டுமே அல்லாமல், உணர்வுகளை வருடி விடுகிற விஷயமாக இருக்க வேண்டும். அதற்காக நமக்கு அந்நியமான, நம் வாழாத கலாசாரங்களை எடுத்து வைத்து விட்டு வருத்தப்பட்டால் யார் என்ன செய்வது? விதவிதமாக, ரகரகமாக இவ்வளவு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிற இந்த மாநகரத்தில் இருந்து, இன்னமும் எங்கோ கிராமத்தில் வாழ்கிற தன் தங்கைக்கு பொங்கல் சீராக சில ரூபாய்களை மணியார்டரில் அனுப்பி வைக்கிற அண்ணன்கள் நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நாகரீக வளர்ச்சி விகிதம் வளர்ந்து நம் வாழ்க்கையை மாற்றி போட்டாலும், சில அம்சங்கள் நம்மை விட்டு என்றைக்கும் பிரிந்து விடாது. ரசனை வேறு, உணர்வுகள் வேறு.
 பாடல்கள் ஹிட்டாகி விட்டதல்லவா...?
 என் முந்தைய படங்களுக்கு வைரமுத்து சார் எழுதியிருக்க வேண்டும். ஆனால், என்ன காரணத்தினாலோ அது தள்ளித் தள்ளி போனது. இந்தப் படத்துக்கு அவரின் வரிகள்தான் பலம். இன்னுமொரு தேசிய விருதுக்கான வரிகள் இதில் உண்டு. இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகிறார். பெரிய இசை ஞானம் உள்ளவர். அப்படியொரு இசை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ஒத்துழைப்பு இங்கே முக்கியமானது. என் ஞானத் தந்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அர்ஜுனா, கோமல் ஷர்மா, பிரியங்கா, தம்பி ராமையா என நடிகர்களின் பங்களிப்பில் தயாராக இருக்கிறது இந்த "கங்காரு.'
 - ஜி.அசோக்
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

SCROLL FOR NEXT