சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத காலணிகள்!
இப்போது செருப்பைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். செருப்பைத் தயாரிக்கப் பயன்படும் தோல் பொருள்களும் அதிகம்.
இப்போது செருப்பைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். செருப்பைத் தயாரிக்கப் பயன்படும் தோல் பொருள்களும் அதிகம். அந்தத் தோல் பொருள்களை உருவாக்கத் தோலைப் பதப்படுத்த வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம் பூ, மரப்பட்டை போன்ற தாவரப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். அதனால் தோல் பொருள் கழிவுகள் நிலத்துக்கு உரமாகப் பயன்பட்டன.
ஆனால், அதற்குப் பிறகு, குரோமியம், நிக்கல் போன்ற வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி தோலைப் பதப்படுத்தத் தொடங்கினார்கள். முன்பை விட அதிக அளவில், குறைந்த நாட்களில் தோல் பதப்படுத்தப்பட்டது. ஆனால் பதப்படுத்தப்படும்போது வெளிவந்த கழிவுப் பொருட்கள் மண்ணை, நிலத்தடி நீரை மாசுபடுத்தியது. ஆற்றுநீரை நஞ்சாக்கியது. புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களை மனிதர்களுக்குக் கொடுத்தது. விவசாயமே செய்ய முடியாத நிலையை சில இடங்களில் அது உருவாக்கிவிட்டது.
இத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சியாக சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பொருட்களால் தயாரிக்கப்பட்ட செருப்பின் அடிப்பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். விஞ்ஞானிகளில் ஒருவரான நிசாத் ஃபாத்திமா அதைப் பற்றி
நம்மிடம் பேசியதிலிருந்து...
""நிறையச் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தோல் பதனிடும் தொழில் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு கிலோ தோலைப் பதப்படுத்தினால் அதில் 700 கிராம் அளவுக்கு கழிவுப் பொருளாகிவிடும். அதாவது தோலைச் சுற்றியுள்ள சதை, கொழுப்பு, முடி போன்றவை 700 கிராம் அளவுக்கு இருக்கும்.
இந்தக் கழிவுப் பொருளை பல்வேறுவிதங்களில் பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்தியது போக மீதமுள்ளவற்றை நிலத்தில் கொட்டிவிடுவார்கள். நாளடைவில் அது கெட்டு, தொற்றுநோய்கள் உட்பட பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகிவிடும்.
இந்நிலையில் இந்தக் கழிவுப் பொருள்களின் அளவைக் குறைப்பது, அவற்றின் பாதிப்புகளைக் குறைப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். கழிவுப் பொருளாக நிலத்தில் கொட்டப்படும் சதை, கொழுப்புப் பொருள்களை எடுத்து அதை ஆக்டிவேட்டடு கார்பனாக மாற்றினோம். அந்த கார்பனைக் கொண்டு செருப்பின் அடிப்பகுதியைத் தயாரிக்க முடியும். இதனால் கழிவுப் பொருள்களைப் பயன்படும் பொருளாக மாற்ற முடியும். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைக்கவும் முடியும்.
ஏற்கெனவே செருப்பின் அடிப்பகுதி, டயர்கள் எல்லாவற்றையும் தயாரிக்க கார்பன் பிளாக் என்ற பொருள் பயன்பட்டது. இப்போதும் கூட டயர்கள் தயாரிக்க 100 சதவீதம் ரப்பருக்கு 50 சதவீதம் கார்பன் பிளாக் பயன் படுத்தப்படுகிறது.
பெட்ரோலை எரிக்கும்போது படியும் கரிதான் இந்த கார்பன் பிளாக். இந்தக் கரியைச் சுவாசித்தால் புற்றுநோய் வந்துவிடும். கார்பன் பிளாக்கைப் பயன்படுத்தி செருப்பின் அடிப்பகுதியைச் செய்தால், அதைப் போட்டு நடப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புண்டு. அதனால்தான் கார்பன் பிளாக்குக்குப் பதிலாகச் சிலிக்கானைப் பயன்படுத்தினார்கள். என்றாலும் இப்போதும் கூட செருப்பின் அடிப்பகுதியைத் தயாரிக்க கார்பன் பிளாக் பயன்படவே செய்கிறது. கார்பன் பிளாக்கைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட செருப்பைப் போட்டுக் கொண்டு கம்பளம் போன்ற விரிப்புகளில் நடந்தால், நடந்த தடம் கம்பள விரிப்பில் கறுப்பாகத் தெரியும்.
கார்பன் பிளாக்குகளினால் செய்யப்பட்ட செருப்புகள், டயர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி விட்டுத் தூக்கியெறியும்போது, அது மண்ணில் புதையுண்டு பல சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தும். இந்த கார்பன் பிளாக்குகளுக்குப் பதிலாக நாங்கள் உருவாக்கியுள்ள ஆக்டிவேட்டடு கார்பனை செருப்பின் அடிப்பகுதிக்கும், டயர்களுக்கும் பயன்படுத்தினால் இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுக்க முடியும்.
இவ்வாறு இரண்டுவிதங்களில் நாங்கள் உருவாக்கியுள்ள ஆக்டிவேட்டடு கார்பன் பயன்படுகிறது. ஒன்று, தோல் கழிவுப் பொருள்களைப் பயன்படுத்துவதால், மண்ணில் போடப்படும் அந்தக் கழிவுகளின் அளவு குறைந்துவிடுகிறது. இரண்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கார்பன் பிளாக்கின் அளவும் குறைந்துவிடுகிறது.
ஓராண்டில் நம்நாட்டில் தயாரிக்கப்படும் லட்சக்கணக்கான காலணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் எவ்வளவு என்பதை உணர முடியும்.
இப்போது இன்னொரு கேள்வி எழலாம்.
ஆக்டிவேட்டடு கார்பனை உருவாக்கும்போது மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா? என்ற கேள்விதான் அது. தோல் கழிவுப்பொருட்களான சதை, கொழுப்பு போன்றவற்றை நைட்ரஜனைக் கொண்டு வெப்பப்படுத்தி ஆக்டிவேட்டடு கார்பனாக உருவாக்குகிறோம். அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை.
தோல் கழிவுப் பொருட்கள் என்றில்லை, மரம், செடி என்ற எந்தப் பொருளையும் இம்முறையில் ஆக்டிவேட்டடு கார்பனாக உருவாக்கலாம். ஆனால் அவை செருப்பின் அடிப்பகுதியைத் தயாரிக்கப் பயன்படுவதில்லை. ஏனென்றால் தோலின் கழிவுப் பொருட்கள் ஆக்டிவேட்டடு கார்பனாக மாற்றப்படும்போது அது ரப்பருடன் எளிதில் இணைந்துவிடுகிறது. அதுபோன்று பிற பொருட்களால் செய்யப்பட்ட ஆக்டிவேட்டடு கார்பன்கள் ரப்பருடன் இணைவதில்லை.
இந்த ஆக்டிவேட்டடு கார்பனை உருவாக்கும் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் நான், முதன்மை அதிகாரிகளான பி.சரவணன், ஜெ.ராகவராவ், ஆராய்ச்சி மாணவர் பி.யுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தோம்'' என்கிறார் மகிழ்ச்சியாக.