முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அள்ளிக் கொடுக்கும் அருண்!

கர்னாடக இசைப் பாடகர் ஓ.எஸ். அருண் பாடுவார் என்று தெரியும். ஓடுவார் என்று தெரியுமா? ஓடுவது என்றால் மாரத்தான் ஓட்டம் அல்ல. அனாதை இல்லங்களை நோக்கி. அன்னை இல்லங்களை நோக்கி.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கர்னாடக இசைப் பாடகர் ஓ.எஸ். அருண் பாடுவார் என்று தெரியும். ஓடுவார் என்று தெரியுமா? ஓடுவது என்றால் மாரத்தான் ஓட்டம் அல்ல. அனாதை இல்லங்களை நோக்கி. அன்னை இல்லங்களை நோக்கி. கண் பார்வையற்றோரை நோக்கி. நமக்கு யாராவது உதவுவார்களா? என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கரம் நீட்டும் ஆதரவற்றோர்களை நோக்கி.

அருணின் குடும்பமே இசைக் குடும்பம். இசையை வழிய வழிய வாரி வழங்கும் குடும்பம். ஓ.எஸ். அருண் தன் ரசிகர்களுக்குப் பாட்டைக் காது குளிர வழங்குவதோடு நின்றுவிடவில்லை. சமுதாயம் தனக்கு அளித்து வருவதில் ஒரு பகுதியை, அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட மக்களிடம் கருணையோடு ஓடி ஓடிக் கொண்டு போய்க் கொடுக்கிறார்.

""நாங்கள் இறைவன் புண்ணியத்தில் திருப்தியாக வாழ்கிறோம். அதனால்தான் இல்லாதவர்களை நினைத்து அவர்களுக்கு உதவுவதற்காக "ஆலாபனா அறக்கட்டளை'யை ஆரம்பித்தேன்'' என்றார் ஓ.எஸ். அருண்.

சென்ற வாரம் ஓ.எஸ். அருணின் ஆலாபனா டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், எஸ்.பி. காந்தன் தயாரித்த குறும்படத்தில் ஓ.எஸ். அருணின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைக் குறும்படமாக ஆவணப்படுத்துவதில் காந்தன் கைதேர்ந்தவர். ஓகோ என்று நீட்டி முழக்காமல், ஓர் இசைக் கலைஞனின் திறமையையும், வாழ்க்கையையும் கச்சிதமாக ரசிகர்களுக்கு வழங்குவதில் காந்தன் மாதிரி

வெகு சிலரே இருக்கிறார்கள். எஸ்.பி. காந்தனின் "ரத்ன சங்கமம்' ஓ.எஸ். அருணின் பணியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

""இந்தக் குறும்படத்தை எத்தனை நாட்கள் தயாரித்தீர்கள்?'' என்று காந்தனைக் கேட்டதும், ""அவர் ஒரே ஒரு நாள்'' என்று சொன்ன போது தூக்கிவாரிப் போட்டது.

""ஆமாம். காலையில் எட்டு மணிக்கு ஓ.எஸ். அருண் வீட்டுக்குப் போய் ஷூட் பண்ண ஆரம்பித்தேன். அவர் "சுந்தர தே த்யான' என்ற அபங் பாடலைப் பாடுவதில் இருந்து தொடங்கி, அவர்கள் குடும்பத்தாரிடம் பேசிப் பதிவு செய்துகொண்டு, பிற்பகல் நேரே உமையாள்புரம் சிவராமன் சார் வீட்டுக்குப் போய் அவர் சொல்வதை ரெக்கார்டு பண்ணினேன். அப்புறம் கிரேஸி மோகன். அவர் அருணை வைத்து எழுதின வெண்பாவை அவரே சொல்லப் பதிவு செய்துகொண்டேன். பிறகு அன்னை இல்லம், லோட்டஸ் பவுண்டேஷன் என்று அருண் புடவைகளும், ஜமக்காளங்களும், போர்வைகளும், உணவும், பொருள்களும் வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசிப் பதிவு செய்தேன். அவர் இது போன்ற இடங்களில் எல்லாம் போய் இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு வந்த சிறு சிறு பதிவுகளை ஒட்டுமொத்தமாக இணைத்து, டாகுமென்டரியைத் தயாரித்தேன்'' என்றார் எஸ்.பி. காந்தன்.

அருண் தமக்கு உறுதுணையாக இருந்தவர்களை எல்லாம் அரங்கத்தில் திரளாகக் கூடியிருந்த ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பயனாளிகளில் சிலரும் அரங்கத்தில் இருந்தனர்.

மாற்றுத் திறனாளிக் குழந்தை ஒன்றை பெராம்புலேட்டரில் கொண்டு வந்து, நிகழ்ச்சி முடியும் வரை வைத்திருந்தது வியப்பளித்தது. வளர்ச்சி குன்றிய இன்னொரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நிலைமையை ஓ.எஸ். அருண் வருணித்துவிட்டு, அவரைப் பாடச் செய்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது.. குழந்தைகளிடையே குழந்தையாக அருண் பாட்டுக்களால் அவர்களை வளைத்துக் கட்டுவதைத் திரையில் காண முடிந்தது.

குறும்படத்தோடு நிகழ்ச்சி முடியவில்லை. கச்சேரி கேட்க வந்திருக்கும் தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார் அருண். ""நான் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மிருதங்கக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம். அதனால் பாடாமல் போக மாட்டேன்'' என்று இசை விருந்து அளித்தார் அருண்.

முல்லைவாசல் சந்திரமௌலி வயலின். வைக்கம் கோபாலகிருஷ்ணன் கடம். பி.எஸ். புருஷோத்தமன் கஞ்சிரா. பாலாஜி சாய்ராம் மோர்சிங் என்று மேடை நிறைந்த பக்கவாத்தியம்.

""இதை நான் ஒருவனே செய்தேன் என்று சொல்ல மாட்டேன். நாம் செய்தோம் என்றுதான் சொல்வேன். அதனால், வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து இந்த சேவையைச் செய்வோம்'' என்று பொதுவாக ஒரு விண்ணப்பம் வைத்தார் அருண்.

சென்னை மட்டுமல்ல, அருணின் சேவை தஞ்சாவூர் மண்ணுக்கும் கிடைத்திருக்கிறது. கருணைக்கு எல்லைக் கோடு எல்லாம் ஒன்றும் கிடையாதே.

முழு கட்டுரையைப் படிக்க →