1895 இலிருந்து... இன்று வரை!
ஒரு பொருள் பழையதாகி விட்டால் - பயனில்லாமற் போனால் என்ன செய்வோம்? தூக்கியெறிந்துவிடுவோம்.
ஒரு பொருள் பழையதாகி விட்டால் - பயனில்லாமற் போனால் என்ன செய்வோம்? தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் பழைய கேமராக்களைத் தூக்கியெறிந்துவிடாமல் சேகரித்து வருகிறார் ஒருவர். யாராவது பழைய கேமராக்கள் வைத்திருந்தாலும் அவற்றைத் தேடிப் பிடித்து வாங்கி சேகரிக்கிறார். இப்போது அவரிடம் இருப்பது 1200 கேமராக்கள். அவற்றை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் சர்வதேச கேமரா கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருக்கிறார். அவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஏ.வி.அருண்.
உங்களுக்கு கேமராக்களைச் சேகரிக்கும் பழக்கம் எப்படி வந்தது? எத்தனை வகையான கேமராக்கள் உங்களிடம் உள்ளன? அவற்றை எப்படிப் பராமரிக்கிறீர்கள்? இப்படிச் சேகரிப்பதால் என்ன பயன்? வீட்டில் உங்களை இதற்காகத் திட்டவில்லையா? என்று கேள்விகளால் அவரைத் திணறடித்தோம்:
""என் அப்பா புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவர். அவர் மூலமாக எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த எனக்கு, யாரிடமும் இல்லாத அபூர்வமான கேமராக்களைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
இப்போது என்னிடம் 1200 கேமராக்கள் உள்ளன. அதில் மிகப் பழைய கேமரா 1895 இல் செய்யப்பட்டது. அந்த கேமரா மைசூரில் உள்ள பரம்பரை புகைப்படக் கலைஞர்களின் வீட்டில் அது இருந்தது. நான் பழைய கேமராக்களைச் சேகரிக்கிறேன் என்பதைக் கேள்விப்பட்டு என்னைத் தொடர்பு கொண்டார்கள்.
அந்தக் கேமரா 7 அடி அகலம் 4 அடி உயரம் உடையது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்டது. அதை பழைய பாக்ஸ் கேமரா அல்லது ஸ்டுடியோ கேமரா என்பார்கள். அதை வெளியில் எடுத்துச் செல்ல முடியாது. 200 கிலோ எடை இருக்கும்.
இந்தக் கேமரா போலவே இன்னொரு பழைய கேமரா என்னிடம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட கேமரா. அதை விமானத்தில் பொருத்தி படம் எடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் யாரோ ஒருவர் இந்தக் கேமராவை ஏலத்தில் எடுத்திருக்கிறார். அவரிடம் இருந்து பல கைகள் மாறி, என்னிடம் அந்தக் கேமரா வந்து சேர்ந்திருக்கிறது.
அபூர்வமான கேமரா எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிடுவேன். விஜயவாடாவில் 80 ஆண்டு பழைமை வாய்ந்த கேமரா ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்டேன். விஜயவாடாவுக்குச் சென்று அந்தக் கேமராவை வாங்கி வந்தேன். இப்படிப்பட்ட பழைய கேமராக்களை அனுப்பி வைக்கச் சொல்ல முடியாது. கேமராவை பேக் பண்ணும்போதோ, வரும் வழியில் கவனமாக அதைக் கையாளாததாலோ உடைந்து போகக் கூடும். எனவே நானே நேரில் சென்று அதை வாங்கி வந்தேன். சில கேமராக்கள் ரொம்பவும் அபூர்வமானவை. எவ்வளவு காசு கொடுத்தாலும் கொடுக்க மாட்டார்கள். எனவேதான் கேமராக்களைச் சேகரிக்கிறவர்கள் மிகவும் குறைவு. நிறையப் பணம் செலவாவதே இதற்குக் காரணம்.
என்னிடம் பலவிதமான கேமராக்கள் இருக்கின்றன. பழைய காலத்தின் 3 அடி, 4 அடி உயரமுள்ள ஃபீல்டு கேமரா அல்லது ஸ்டுடியோ கேமராக்கள் உள்ளன. அதற்கு அடுத்து வந்த அதைவிடச் சிறிய பாக்ஸ் கேமராக்களும் உள்ளன. இந்தக் கேமராக்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்வதே சிரமம். எனவே இந்தக் குறையைப் போக்கும்விதமாக மடக்கி வைக்கக் கூடிய (ஊஞகஈஐசஎ
ஆஉககஞரந இஅஙஉதஅ) வந்தன. அதுவும் என்னிடம் உள்ளது. அதற்குப் பிறகு இரண்டு லென்ஸ் உள்ள ட்வின் லென்ஸ் கேமராக்கள் வந்தன. புகைப்படம் எடுப்பதற்கு முன்பு எதை, யாரை புகைப்படம் எடுக்கப் போகிறோமோ அதை நாம் ஒரு லென்ஸில் பார்ப்போம். கேமராவை க்ளிக் பண்ணியதும் காட்சிகள் இன்னொரு லென்ஸ் வழியாகச் சென்று பதிவாகும்.
ட்வின் லென்ஸ் கேமராவுக்குப் பிறகு வந்த சிங்கிள் லென்ஸ் கேமராக்களும் என்னிடம் உள்ளன. படம் எடுக்கும் முன் யஐஉர ஊஐசஈஉத இன் மூலம் நாம் பார்க்கிற லென்சின் வழியாகத்தான் காட்சிகளும் இந்தக் கேமராவில் பதிவாகும்.
கேமராவைச் சேகரிப்பது சிரமம் என்றால், நம்மிடம் உள்ள கேமராவைப் பாதுகாப்பது அதைவிடச் சிரமம்.
நான் ஒரு கேமராவை வாங்கி வந்த உடனேயே அதைக் கழற்றி, கேமராவின் உள்ளேயும், வெளியேயும் நன்றாகச் சுத்தம் செய்வேன். துருப்பிடித்தவற்றை எல்லாம் நீக்குவேன். பளபளப்பாக்குவேன். இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்து பார்ப்பேன். அப்படி க்ளிக் செய்யாவிட்டால், அது வேலை செய்யாமல் போய்விடும். அதற்குப் பிறகு காற்றுப் புகாத அலமாரியில் வைப்பேன். மீண்டும் துருப்பிடிக்காமல் இருக்கும்.
சுத்தம் செய்யும்போது அதற்கென்றே விற்கப்படும் மென்மையான பிரஷ்ஷால் சுத்தம் செய்வேன். இல்லையென்றால் கேமரா கெட்டுப் போய்விடும். இந்தக் கேமரா சேகரிப்பால் யாருக்கு? என்ன லாபம்? என்று நினைக்கத் தோன்றும். வாழ்க்கையில் செய்யக் கூடிய எல்லாச் செயல்களையும் லாபம் பார்த்துச் செய்யக் கூடாது; செய்யவும் முடியாது.
புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், திரைப்படக் கலை மாணவர்கள் எல்லாருக்கும் கேமராக்களைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட கேமராக்கள் முதலில் இருந்தன? இப்போதுள்ள கேமராக்கள் எந்த அளவு மாறுதல் அடைந்துள்ளன? அவற்றின் தரம் போன்றவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நான் சேகரித்து வைத்திருக்கும் கேமராக்கள் நிச்சயம் உதவும்.
பழைய கால வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து இப்போது திரைப்படம் எடுக்க விரும்புகிறவர்கள், பழைய கால கேமராக்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். திரைப்படம் எடுக்கும் காலத்தில் என்ன மாதிரியான கேமராக்கள் இருந்தன என்று அவர்களுக்குத் தெரியாது. என்னிடம் உள்ள பழைய கேமராக்களைப் பார்த்து அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். சென்ற ஆண்டு நடைபெற்ற கேமரா கண்காட்சியில் நானும் என் கேமராக்களைக் காட்சிக்கு வைத்தேன். எதிர்பார்த்ததை விட நிறைய கூட்டம் மொய்த்தது. இடம் போதவில்லை. நெரிசலாக இருந்தது.
இந்த ஆண்டு என்னுடைய கேமராக்களை காட்சியில் வைக்க பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் செலவு பிடிக்கக் கூடிய இந்த கேமரா சேகரிப்பில் நான் இறங்கியதற்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் எனக்கு வேறு எந்த கெட்ட பழக்கங்களோ, வீண் செலவுகளோ இல்லை. அப்புறம் ஏன் எதிர்க்கப் போகிறார்கள்?'' என்கிறார் சிரித்துக் கொண்டே.