அரபி மொழியில் திருக்குறள்!
சென்னைப் பல்கலைக் கழக அரபி-பெர்ஷியன்-உருது மொழிகள் துறையின் பேராசிரியர், டாக்டர் ஜாஹிர் ஹுசேன், அரபி மொழித் துறையின் தலைவரும்கூட.
சென்னைப் பல்கலைக் கழக அரபி-பெர்ஷியன்-உருது மொழிகள் துறையின் பேராசிரியர், டாக்டர் ஜாஹிர் ஹுசேன், அரபி மொழித் துறையின் தலைவரும்கூட. அவர் இப்போது ஒரு பெரிய சாதனையை நிகழ்த்திய சந்தோஷத்தில் இருக்கிறார். (1927ஆம் ஆண்டு, அராபிய மொழித் துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் முதல் முதலாக அமைக்கப்பட்டது)
""தமிழ் நாடு அரசு 2011 இல் திருக்குறளை அரபி மற்றும் சீன மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று முதல் சட்டசபைக் கூட்டத்தில் அறிவித்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அவர்கள் கொடுத்த வாய்ப்பைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன்'' என்றார் ஜாஹிர் ஹுசேன்.
"புனிதமான கவிதைகள்' என்ற தலைப்பில், 1980இல், முதன் முதலாக, பேராசிரியர் யூசுஃப் போக்கன் ஆங்கில வழி மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார். ஆனால், தமிழிலிருந்து நேரடியாக அரபி மொழியில் திருக்குறள் வருவது இதுவே முதல் தடவை.
""திருக்குறள் போல் ஒன்றரை அடியில் அல்லாமல், நான் இதை இரண்டு வரிகளில் புதுக்கவிதை வடிவத்தில் உருவாக்கியிருக்கிறேன்'' என்றார் ஜாஹிர். 2012 இல் தொடங்கி, 2014 இல் மொத்தம் 1330 திருக்குறளையும் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளில் மொழிபெயர்ப்புப் பணிகளை முடித்துவிட்டு, டிடிபி, எடிடிங், லே அவுட் என்று ஒவ்வொரு பகுதியையும் ரசித்து, அக்கறையோடு செய்தாராம்.
இது அரங்கேறியது எங்கே? என்று தெரிந்தால் வியப்பாக இருக்கும். மார்ச் மாதம் 28 முதல் 31 வரை, சௌதி அராபியாவில் அரசின் கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பில் அரபிக் கவிஞர்கள் மாநாடு நடந்தது. இதை அங்கே பங்குகொள்ள வந்திருந்த "தமிழ்நாடு சோஷியல் அன்ட் வெல்பேர் சங்கம்' கேள்விப்பட்டு, அரபியில் உள்ள திருக்குறளை அங்கே அரங்கேற்றம் போல் அறிமுகம் செய்தால் என்ன என்று தீர்மானித்தார்கள். ""2440 வருடங்கள் பழைமையான ஓர் இலக்கியத்தை ஏன் இத்தனை தாமதமாக அரபிக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? தாமதம் செய்யாமல் உடனே வரச் சொல்லுங்கள்'' என்றார்கள். அங்கு வந்திருந்த அரபிக் கவிஞர்கள் முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு, கருத்து, மொழிபெயர்ப்பு எல்லாம் அற்புதமாக இருப்பதாகப் பாராட்டி, ஏற்றுக்கொண்டார்கள்.
""எனக்கு இந்த விஷயம் 27ஆம் தேதிதான் தெரியும். அன்று இரவுதான் விசா கிடைத்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு விமானம் பிடித்து சௌதி போனேன். மார்ச் 31ஆம் தேதி திருக்குறள் - திருக்குரான் பற்றி அரபி மொழியில் ஓர் அறிமுகம் செய்தேன். அவர்கள் இன்பத்துப் பாலில் இருந்து 40 குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். நான் தமிழில் குறளைச் சொல்ல, அலி அத்தாவா என்ற கவிஞர் அதன் அராபிய மொழிபெயர்ப்பைப் படித்தார்.
திருக்குறள் உலகப் பொதுமறை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமிழ் இலக்கணம், தமிழ்க் கவிதைகள், இன்றுள்ள சமூகப்பணி, தமிழ்ப்பணி பற்றி எல்லாம் சௌதி பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தன.
""இங்கே கேரளாவில் இருக்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஜூன் 10-11 தேதிகளில் இன்டர்நேஷனல் "கான்ஃபரன்ஸ் ஆஃப் அராபிக் கல்ச்சர் அண்ட் யு.ஏ.இ. ஹெரிடேஜ் சார்பாக வந்தவர்கள், "ஜாஹிரைக் கூப்பிடுங்க' என்று சொல்லவே, என்னை அங்கே பேச அழைத்தார்கள். எனக்குக் கொடுக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் பிட்வீன் இந்தியா அன்ட் யு.ஏ.இ.' என்ற தலைப்பை மாற்றி, ""திருக்குறள் பற்றிப் பேசுங்கள்'' என்று சொன்னார்கள்.
நிறையக் கவிஞர்கள் அங்கே வந்திருந்தார்கள். நான் தான் தலைமை தாங்கினேன். அறம்-பொருள் இரு தலைப்பிலும் குறளிலிருந்து 20 குறள்கள் பற்றிப்
பேசினேன். யாருக்குமே கிடைக்காத மிகப் பெரிய கைதட்டல் எனக்குக் கிடைத்தது. அது குறளுக்குக் கிடைத்தது என்று சொல்வேன். ஏனென்றால் அங்கே அரபிகளும், சிரியா, மொரோக்கோ கவிஞர்களும், மலையாளிகளும் எனது திருக்குறள் மொழி பெயர்ப்பை ரசித்து மகிழ்ந்தார்கள். குறள் என்று சொல்லவில்லை என்றால், குரான் மாதிரியே தெரியும் என்றார்கள். வாழ்க்கை நெறிகள், பொதுவான அம்சங்கள் குறித்துப் பேசினேன். இம்மாதிரி நிகழ்வுகள் கலாசார, வாணிபத் தொடர்புகளை வலுவாக்கும் என்றார்கள்''
பேராசிரியர் ஜாஹிர் ஹுசேன் திருக்குறளை முதலில் எடுத்துக்கொண்டபோது, சாதாரணமாகத்தான் ஆரம்பித்தாராம். உள்ளே போகப் போக வெகு உற்சாகமாக உணர்ந்தாராம். அரபிக் கவிஞர்கள் நல்ல தரமாக இருக்கிறது என்று பாராட்டிய போது மகிழ்ந்து போனாராம்.
உங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்டபோது, ""அரபு நாடுகள் முழுக்க திருக்குறளை எடுத்துச் செல்வதுதான் என் திட்டம்'' என்றார். தமிழ் மொழியிலுள்ள நல்ல இலக்கியங்களை அரபிக்குக் கொண்டு செல்லவும் திட்டம் வைத்திருக்கிறார்.
சமகாலக் கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரகுமான், மு. மேத்தா, இன்குலாப் ஆகியோரின் கவிதைகளை மொழிபெயர்க்க விரும்புகிறார். அதே போல அராபிய இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமும் ஜாஹிருக்கு இருக்கிறது. தமிழ் நாவல்களை மொழியாக்கம் செய்வதும் இந்த 44 வயதுக்காரரின் கனவுகளில் ஒன்று. மஹ்மூத் தர்வீஷ் என்ற கவிஞரின் அரபிக் கவிதைகளைத் தமிழில் "கவிதையை நம்பாதே' என்று மொழி பெயர்த்திருக்கிறார் ஜாஹிர்.
இந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அரபி நாடக விழா நடத்தி வெற்றி கண்டிருக்கிறார். ஆறு அரபி மொழி நாடகங்கள். அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நாடகம் ஒன்று. பிரளயன், மு. ராமசாமி, நாசர், இயக்குநர் அமீர் ஆகியோர் என்று நாடக, திரையுலகினர் வந்திருந்தார்களாம். எல்லோருமே பாராட்டியதுதான் ஜாஹிருக்குக் கிடைத்த மகிழ்ச்சி.
""தமிழுக்கு "ழ' எத்தனை முக்கியமோ, அதே போல அரபிக்கு "ள' முக்கியம் என்று தெரிந்து கொண்டேன்'' என்கிறார் பேராசிரியர் ஜாஹிர்.
இவர் அறையிலிருந்து சன்னல் வழியே பார்த்தால் பளிச்சென்று தெரிகிறார் திருவள்ளுவர், சிலையாக.