முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நான்  சீதை!

சவாலான சம்பவங்களைத் தொகுத்து, நடனமும் இசையும் இழைய வழங்குவதில் சற்றும் சளைக்காதவர் கௌரி ராம்நாராயண்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சவாலான சம்பவங்களைத் தொகுத்து, நடனமும் இசையும் இழைய வழங்குவதில் சற்றும் சளைக்காதவர் கௌரி ராம்நாராயண். ஆனால் கௌரி இப்போது மேடையேற்றியிருப்பது சாதுவான சீதையாக அறியப்பட்ட பாத்திரத்தைக் கொஞ்சம் சீண்டிவிட்டு, அவளை ஒரு புரட்சிப் பெண்ணாகக் காண்பித்திருக்கிறார். எனவே நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
 சீதை மட்டுமல்ல, ஊர்மிளை, அகல்யா, மண்டோதரி, சூர்ப்பனகை என்று மேலும் நான்கு ராமாயணப் பாத்திரங்கள் வாயிலாக சீதையைப் பார்க்க  வைத்திருக்கிறார்.

 இவள் உன்னை எப்போதும் நிழல் போலத் தொடருவாள் என்று ஜனகர் தன் மகள் சீதையை ராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்கையில் கூறுகிறார். அப்படித்தான் சீதையும் இருந்திருக்கிறாள். ஆனால் ராமர் அவள் கற்பைச் சந்தேகிக்க, ""ஒரு சாதாரண மனிதன்கூடச் சொல்லக் கூசும் வார்த்தைகளை எப்படி நீங்கள் உங்கள் மனைவியான என்னிடம் கூறுகிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்கிறாள் சீதை.

 ""என்னை ராவணன் கடத்திச் சென்றதை என்னால் தடுக்க இயலவில்லை. ஆனால் என் மனசுக்குள் நீங்கள் மட்டுமே நிறைந்திருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? சீதா என்பவள் வெறும் உடலா அல்லது அவள் மனமா என்று கேள்வி எழுப்புகிறாள்.

 சீதை தன் தவிப்பைக் காட்டவில்லை. எதிர்ப்பைக் காட்டுகிறாள். அவளுக்குக் கருணை உள்ளம்தான். ஆனால் அநீதியை அவள் ஏற்பதில்லை. பழையதும், புதியதுமான கீர்த்தனைகளை, பாடல்களை, பஜன் பாடலை சீதையின் வாழ்க்கைத் தளத்தில் நிறைய இடம் பெற வைத்திருக்கிறேன். அந்தப் பாடலாசிரியர்கள் சீதையை எப்படிப் பார்த்தார்கள் என்று காண்பித்திருக்கிறேன். புதிய உருவில் சீதையைப் புரிந்து கொள்ள இது ஒரு வித்தியாசமான முயற்சி'' என்கிறார் கௌரி ராம்நாராயண். ""நடனக் கலைஞர் வித்யா சுப்பிரமணியன் பரதநாட்டியம் மட்டும் கற்றவர் அல்ல. தியேட்டர் ஆர்ட்ஸிலும் பட்டம் பெற்றவர். அதனால் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமான ஒரு கலைஞரை நான் மேடையில் அறிமுகப்படுத்த முடிந்தது'' என்கிறார்.

 ""சுவாமிமலை ராஜரத்தினத்தின் நட்சத்திர மாணவி வித்யா சுப்பிரமணியன், அபிநயத்தைச் சிறப்பாக கலாநிதி நாராயணனிடம் கற்றவர். ஒவ்வொரு முறை பாவயாமி ரகுராமம் கீர்த்தனைக்கு நடனம் ஆடும்போதும் ராமருடைய கண்ணியத்தின் முழுமையை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ராமர் என்ற மனிதன் மனது எப்படிப்பட்டது என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு, தன் ராஜரீகக் கடமைக்காக மனைவியைத் துச்சமாக மதித்து ஒதுக்கி வைத்தது மனசில் நெருடலாக இருந்தது. சீதையின் பார்வையிலேயே இந்தப் பாத்திரத்தை ஏற்றுச் செய்திருக்கிறேன். ஒரு தேர்ந்த மேடைப் படைப்பாளியான கௌரி ராம்நாராயணுடன் இணைந்து அவருடைய ஜஸ்டஸ் ரெப்பர்ட்டரி வாயிலாக இதை வழங்க முடிந்ததை என்னால் மறக்க முடியாது'' என்றார் வித்யா சுப்பிரமணியன்.

 ""இது ஒரு கூட்டு முயற்சி. ஷீஜித் கிருஷ்ணா, சவீதா நரசிம்மன், ஆதித்ய பிரகாஷ், ஜ்யோத்ஸ்னா ஜகன்னாதன், சாய் ஷ்ரவண், ஈசுவர் ராமகிருஷ்ணன், ஜே.பி. சுருதிசாகர், வெங்கடேஷ் கிருஷ்ணன் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும் இதில் இருக்கிறது'' என்கிறார் கௌரி.
 மேடை நாடக-நாட்டியத்துக்குப் பாடுவது என்பது நிஷா ராஜகோபாலனுக்கு எளிதாக இருக்கக் காரணம், அவர் முன்பே கெüரியின் சர்ப்ப சூத்ரா, யசோதரா, மீராதாசி போன்ற படைப்புகளில் பாடியிருக்கிறார். அதனால் சூழலுக்கும், பாத்திரத்துக்கும் ஏற்றவாறு குழைவாகவும், உருக்கமாகவும், மிருதுவாகவும் அவரால் தன் குரலை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. ""பரதநாட்டியக் கலைஞர் என்றாலும் வித்யா ஏற்கெனவே தமிழ், ஆங்கில நாடகங்களில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பங்குகொண்டவர் என்பதால், அவருக்கு ஏற்றவாறு என்னால் பாட முடிந்தது. லயத்தில் அவர் கெட்டிக்காரர். அதனால் அதுவும் எனக்கு ஒருவகையில் உதவியது'' என்றார் நிஷா ராஜகோபாலன்.

 இதில் கம்பரின் கவிதை இருக்கிறது. (அண்ணலும் நோக்கினான்) அருணாசலக்கவியின் பாடல் இருக்கிறது (எப்படி மனம் துணிந்ததோ?) துளசிதாஸ் வரிகள் இருக்கின்றன (கஹான் கே பதாக் - இதை மகாத்மாவின் மகன் தேவ்தாஸ் காந்தி எம்.எஸ். பாட, பதிவு செய்து வைத்திருந்தார்), நாட்டுப்புறப் பாடலாக நார்லா வேங்கடேசுவர ராவின் சீதா ஜோஸ்யம் இருக்கிறது. வால்மீகி ராமாயண சுலோகம் இருக்கிறது. இந்துமதி கெüஷ்க்கின் "அஸ்வீகார்'லிருந்து ஒரு நவீன பாடல் இருக்கிறது. "நதியைக் கடக்கையில்' என்ற அம்பையின் ஆங்கிலக் கவிதை இருக்கிறது.

 சீதையை ஒரு வித்தியாசமான கோணத்தில், திறந்த மனத்தோடு பார்க்க, "அஹம் சீதா' என்ற "நான் சீதை' - ராமனைக் கேள்வி கேட்கிற சீதை.

 

முழு கட்டுரையைப் படிக்க →