முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிப்புக் கலையைக் கற்றுத் தருகிறேன்!

நாடகம், திரைப்படம் இரண்டுமே காட்சி ஊடகங்கள் என்றாலும் இரண்டும் வேறு, வேறு. மேடை நாடகங்களைப் படம் பிடித்துத் திரைப்படங்கள் என்று நமக்குக் காட்டி வந்தது அதிகம். இப்போதுதான் நாடக மண்ணில் இருந்து திரைப்படங்கள் சற்று விலகி வந்து கொண்டிருக்கின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

நாடகம், திரைப்படம் இரண்டுமே காட்சி ஊடகங்கள் என்றாலும் இரண்டும் வேறு, வேறு. மேடை நாடகங்களைப் படம் பிடித்துத் திரைப்படங்கள் என்று நமக்குக் காட்டி வந்தது அதிகம். இப்போதுதான் நாடக மண்ணில் இருந்து திரைப்படங்கள் சற்று விலகி வந்து கொண்டிருக்கின்றன.

""ஆனால் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் நடிப்புக் கலை பொதுதானே? அதனால்தான் நடிப்புக் கலையைக் கற்றுத் தருகிறோம்'' என்கிறார் ஸ்ரீ தேவி. சென்னை சின்மயா நகரில் ஆனந்தக் கூத்து ட்ரஸ்ட் என்ற நடிப்புத் தரும் அமைப்பை நடத்தி வருகிறார் அவர்.

பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டாத இந்தத் துறையில் சாதனை நிகழ்த்தும் ஆர்வத்துடன் இருக்கும் அவரிடம் பேசினோம்:

""நான் பிளஸ் டூ வரை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் படித்தேன். அதற்குப் பிறகு அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்தேன். பின்பு வளர் கல்வி இயக்கத்தில் இணைந்தேன். அப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகங்களில் நடிக்கச் சொன்னார்கள். நடிப்பதைப் பற்றி நினைக்கும்போதே பயமாக இருந்தது. பயந்து கொண்டே ஒத்திகைக்குப் போனேன். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். ஆனால் சிறிது நாளிலேயே எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்களில் நடித்தேன். 2001 இல் ந.முத்துசாமி நடத்தி வந்த கூத்துப்பட்டறையில் இணைந்தேன்.

என் வீட்டில் பிரச்னை பண்ணி நடிக்கக் கூடாது என்றார்கள். நான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். கூத்துப்பட்டறைக்கு நிறைய வெளிநாட்டுக்காரர்கள் வருவார்கள். பயிற்சிப் பட்டறை நடத்துவார்கள். அவற்றிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.

2010 இல் ஆனந்தக் கூத்து ட்ரஸ்ட்டைத் தொடங்கினேன். முதல் நாடகமாக விக்ரமாதித்தன் கதையை நடத்தினோம். கீசக வதம், சந்திரஹரி, பரமார்த்த குரு, பாஞ்சாலி சபதம், சீவக சிந்தாமணி, அல்லி சரித்திரம், கர்ணன், தேரோட்டி மகன், ஊர்வசியின் சாபம் ஆகிய 10 நாடகங்களை நடத்தியிருக்கிறோம். இது தவிர புற்றுநோய் விழிப்புணர்வு நாடகங்கள், கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகங்கள் என நிறைய நாடகங்களைச் சென்னையில் நடத்தியிருக்கிறோம்.

நடிப்புக்கலையைக் கற்றுக் கொடுக்க 6 மாத கால வகுப்புகளையும் நடத்துகிறோம். இதில் நடிப்பு, நடனம், சண்டை, டப்பிங் பேசுதல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம். கராத்தே, சிலம்பம் கற்றுத் தரும் ஆசிரியர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். யோகாசனமும் கற்றுத் தருகிறோம். தெருநாடகம், மேடை நாடகத்தில் நடிக்க இங்கே கற்றுத் தருகிறோம். இதனால் மாணவர்களுக்கு முதலில் பயம் போய் விடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எங்களிடம் கற்றுக் கொண்டவர்கள் பங்கேற்கும் நாடகங்களை நடத்துகிறோம். அப்போது திரையுலக, சின்னத்திரை பிரபலங்களை அழைக்கிறோம். அவர்கள் மூலமாக எங்கள் மாணவர்களுக்குத் திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் வாய்ப்புக் கிடைக்கிறது.

எங்களிடம் நடிப்புக் கற்றுக் கொண்டவர்கள் "சுந்தரபாண்டி', "போராளி', "கோ', "உத்தமவில்லன்', "கடல்', "நண்பன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து எங்களிடம் கற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

பெண்கள் இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி நினைப்பது தவறு, பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டவே விரும்புகிறேன்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →