வெகு கச்சிதம்!
கலப்புத் திருமணத்தை ஆதரிக்கிறவர்களும், எதிர்க்கிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடகம் "நிதர்சனம்'. முன்னேறாத சமூகங்கள் இன்னும் ரிசர்வேஷன் தொடர்வதை ஆதரிக்க, முன்னேறிய சமூகங்கள் தங்கள் எதிர்காலம் முடங்கிப் போய்விட்டது போல் உணர, வசனங்களில் கூர்மையை வாளின் நுனி போல் வார்த்தெடுத்திருக்கிறார் நாடகாசிரியர் கே..எஸ்.என். சுந்தர்.
கலப்புத் திருமணத்தை ஆதரிக்கிறவர்களும், எதிர்க்கிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடகம் "நிதர்சனம்'. முன்னேறாத சமூகங்கள் இன்னும் ரிசர்வேஷன் தொடர்வதை ஆதரிக்க, முன்னேறிய சமூகங்கள் தங்கள் எதிர்காலம் முடங்கிப் போய்விட்டது போல் உணர, வசனங்களில் கூர்மையை வாளின் நுனி போல் வார்த்தெடுத்திருக்கிறார் நாடகாசிரியர் கே..எஸ்.என். சுந்தர்.
சுருக்கமாக, கதை இதுதான்:
வைதீக பிராமணர் மணி சாஸ்திரிகள். அவருடைய மகள் லக்ஷ்மி. அவருக்கு உதவியாக இருக்கும் மருத்துவக் கல்வி கற்ற ஜெயராமன். லக்ஷ்மி வேலை பார்க்கும் அரசு அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஈசுவரன், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். லக்ஷ்மியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். ஈசுவரன் லக்ஷ்மியிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்காத நிலையில், ஈசுவரனின் தந்தை செல்லக்கண்ணு மணி சாஸ்திரிகளைக் கோயில் வாசலில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார். அதிர்ச்சி அடைகிறார் மணி சாஸ்திரிகள். தன் பெண்ணைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்கிறார். மகளோ அப்பாவின் முடிவுதான் தன் முடிவு என்று கூறிவிடுகிறாள் இங்கேதான் சிக்கல் என்கிற முடிச்சு விழத் தொடங்குகிறது.
சொந்தத்தில் பெண்கள் இருக்கையில், வேறு குடும்பத்துப் பெண்ணை மணக்கக் காரணம், சொந்தத்தில் செய்து கொண்டால், குழந்தை குறை உள்ளதாகப் பிறக்கும் என்பது ஈசுவரனின் வாதம் என்கிறார் செல்லக்கண்ணு. அதை ஏற்க மறுக்கிறார் மணி சாஸ்திரிகள்.
பாசம் காட்டி, படிக்க வைத்து, உயர்வான உத்தியோகம் கிடைக்கச் செய்த தந்தையை விட, தன் காதலும், வருங்காலமுமே பொது என்பது போல் மணி சாஸ்திரிகளிடம் பேசுகிறான் ஈசுவரன். தந்தை சம்மதம் தரவில்லை என்றால், அவரையே தலை முழுகிவிடவும் சம்மதம் என்கிறான். இப்போது செல்லக்கண்ணுவுக்கு அதிர்ச்சி. இறுதியில், இருவரும் இணையாமலே நாடகம் முடிகிறது.
காரசாரமான வசனங்கள். ஆசியரின் கோணத்தில் அவை நியாயமாகவும் இருக்கலாம். இயக்குநர் குடந்தை மாலி ஏராளமான சமூக நாடகங்களை மேடையேற்றியவர். ரசிகர்களை வெறுமனே பொம்மைகளாகப் பார்க்காதவர். நான் சொல்வதை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். சாதி வேறுபாடுகள், கலப்புத் திருமணத்தின் மூலம் ஒழியுமா என்பதுதான் என் நாடகம் எழுப்பும் கேள்வி. ஒழியப் போவதில்லை என்பது எங்கள்முடிவு என்கிறார் கொஞ்சம் அழுத்தமாகவே. வளைவான மேம்பாலத்தின் விளிம்பில் வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர் போல, வசனங்களை லாகவமாக வார்த்திருக்கிறார் கே.எஸ்.என். சுந்தர்.
சாஸ்திரிகளாக அனுபவம் மிக்க கரூர் ரங்கராஜ் அதிகம் உணர்ச்சிவசப்படாமல், இயற்கையாக நடித்திருக்கிறார். ஆனால், நடிப்பில் அவரை முந்தப் பார்க்கிறார் செல்லக்கண்ணு பாகம் ஏற்ற சண்டிகார் ரமணி. தன் வாதத்தை எடுத்து வைப்பதில் ஆகட்டும், நடிப்பில் ஆகட்டும், மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஈஸ்வர் பாத்திரத்தில் டாக்டர் சுந்தரராமனும் சரி, லக்ஷ்மியாக நடித்திருக்கும் செüம்யா ராம்நாராயணும் சரி, வெகு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். இடையே வரும் சிறு பாத்திரங்கள்கூட நாடகத்தோடு ஒட்டி அமைந்திருக்கின்றன.
பெரம்பூர் குமாரின் ஒப்பனையும் சரி, கலைவாணர் கிச்சாவின் ஒளி-இசையும் சரி தேவைக்கு மேல் சற்றும் கூடுதலாக இல்லை.