கலைமாமணி விருது பெற்றபோது எடுத்த படம் 
ஞாயிறு கொண்டாட்டம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -26: தமிழக வரலாற்றில் அரசவைக் கவிஞர்கள்!

கவிஞர் முத்துலிங்கம்

வையக வாழ்க்கை 
ஒரு சாலையல்லவா
பள்ளமும் மேடும் ஒரு பாடம் அல்லவா
விழுகிற அடிகூட விழுப்புண் ஆகலாம்
வியர்வைகள் விதையானால் 
பலன் சிறக்கலாம்!

சத்தியப் பயணத்தில் குறுக்கீடு செய்வார்
துணிவுடன் நாம் சென்றால் 
தோற்றோடிப் போவார்
கொள்கையில் மலைபோல
நிலையாக இருப்போம் } வெற்றிக்
கொடியேற்றி புகழ் நாட்டி 
வரலாறு படைப்போம்!

- என்று இரண்டு சரணங்களை எழுதி, ஏற்கெனவே எம்.ஜி.ஆர் ஓ.கே. செய்திருந்த "வளைவுகள் திருப்பங்கள் வழியை மாற்றலாம்' என்ற சரணத்தையும் சேர்த்து வாசித்துக் காட்டினேன். அப்போது இரவு ஒன்றரை மணி. அவரும் "ஓ.கே.' என்றார். பிறகு நானும் என்.எஸ். ராம்தாசும் வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.
மறுநாள் ஒலிப்பதிவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். டியூனோடு விசுவநாதனைப் பாடிக்காட்டச் சொல்லிக் கேட்டு விட்டுச் சென்றார். டைரக்டர் ப.நீலகண்டன் மட்டும் கூட இருந்தார்.
அவரிடம் நான், ""இந்தப் பாட்டை ரிக்கார்டிங் செய்து தலைவர் என்ன செய்யப் போகிறார்? படப்பிடிப்பே நடக்கப் போவதில்லை!'' என்றேன். அவர் அதிர்ச்சியடைந்து ""என்ன சொல்கிறாய்?'' என்றார்.
""இன்னும் ஐந்தாறு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. தலைவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போய்விடப் போகிறார். மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப்போகிறார். அப்படி இருக்கும்போது ஏன் இந்த வீண்வேலை?'' என்றேன்.
""அப்படியா சொல்கிறீர்கள்! நீங்கள் சொன்னதை அப்படியே நான் சின்னவரிடம் சொல்லட்டுமா?'' என்றார். ""சொல்லுங்கள்'' என்றேன்.
""எங்கே நீங்கள் சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள்'' என்றார். நான் திரும்பவும் அதே கருத்தைச் சொன்னேன்.
எப்போதும் டைரக்டர் ப.நீலகண்டன் அப்படித்தான். ஒரு கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் சொன்ன கருத்தை மீண்டும் சொல்லச் சொல்வார்.
நான் சொன்னதை எம்.ஜி.ஆரிடம் அப்படியே அவரும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டு, ""முத்துலிங்கம் அப்படியா சொன்னார்...? தேர்தல் வரும்போது வரட்டும். நாம் திரைக்கதை அமைக்கும் வேலையைத் தொடங்கலாம். நாளை வாருங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. நான் மறுநாள் நீலகண்டனைப் பார்த்தபோது, ""நீ சொன்னதுபோல் தேர்தல் வந்துவிட்டதய்யா. இந்த முறை ஆட்சிக்கு வந்தால் சின்னவர் உனக்கு ஏதேனும் பொறுப்புக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்'' என்றார்.
அதுபோல் தேர்தலில் வென்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகுதான் 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது; பாவேந்தர் விருது போன்ற பலவிருதுகளை எனக்கு வழங்கினார்.
அதற்குப் பிறகுதான் என்னை சட்டமேலவை உறுப்பிராக்கினார். என்னை மேலவை உறுப்பினராக ஆக்கியபோதுதான் ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
மேலவை கலைக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கிருந்தபடியே என்னை "அரசவைக் கவிஞர்' ஆக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
எம்.ஜி.ஆர். எனக்குப் பணம் தரவில்லையே தவிர பதவிகள் வழங்கினார்.
தமிழ்நாட்டில் இதுவரை அரசவைக் கவிஞர்களாக இருந்தவர்கள் நால்வர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசவைக்கவிஞராக இருந்தார். குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தபோது அரசவைக் கவிஞராக அவர் நியமிக்கப்பட்டார். ராஜாஜி இரண்டாவது முறையாக 1952-இல் முதலமைச்சர் ஆனபோது இந்தப் பதவி தேவையில்லையென்று நீக்கிவிட்டார்.
அதன்பிறகு அமைந்த காங்கிரஸ் அரசோ அதற்குப் பின் வந்த தி.மு.க. அரசோ யாரையும் அந்தப் பதவிக்கு 
நியமிக்கவில்லை. எம்.ஜி.ஆர். முதன்முதல் ஆட்சிக்கு வந்தபோதுதான் "கண்ணதாசனைச் சிறப்பிக்க வேண்டும்; அவரால் திரைத்தமிழ் செழுமையடைந்தது. இலக்கியத் தமிழ் ஏற்றமடைந்தது; ஆகவே அவரைச் சிறப்பிப்போம்' என்று அரசவைக் கவிஞர் ஆக்கினார்.
அவர் மறைவிற்குப் பின்னர் புலவர் புலமைப்பித்தனை அந்தப் பதவியில் அமர்த்தினார். அவர் பதவிக்காலம் முடிந்ததும் என்னை அந்தப் பதவியில் நியமித்தார். என்னுடன் அரசவைக் கவிஞர் பதவி முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு எந்த அரசும் எந்தக் கவிஞரையும் அந்தப் பதவியில் நியமிக்கவில்லை. ஆக தமிழக அரசியல் வரலாற்றில் அரசவைக் கவிஞர்களாக இருந்த பெருமை சுதந்திர இந்தியாவில் எங்கள் நான்கு பேருக்கு மட்டுமே உண்டு.
அதைப் போல சட்ட மேலவை உறுப்பினராக இருந்த பெருமை தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கவிஞர்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் நாமக்கல் கவிஞர்தான் முதலில் வருகிறார். அடுத்து எஸ்.டி. சுந்தரம், கு.மா. பாலசுப்ரமணியன், புலமைப்பித்தன், நான் ஆகிய ஐவர் மட்டுமே மேலவை உறுப்பினராக இருந்த கவிஞர்கள். கண்ணதாசனுக்குக்கூட இந்தப் பெருமை கிடைக்கவில்லை.
கண்ணதாசன் கடைசிக் காலத்தில் எந்தக் கட்சிக்குப் பாடுபட்டாரோ அந்தக் கட்சி அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால்தான் மக்களும் 1967-க்குப் பிறகு அந்தக் கட்சியைக் கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்தான் அவருக்குச் சிறப்பளித்தார்.
அப்போதுகூட எதிர்க்கட்சியினர் என்ன சொன்னார்கள்? கண்ணதாசன் எம்.ஜி.ஆரை எதிர்த்து எழுதுகிறார் பேசுகிறார். ஆகவே அவர் வாயை அடைப்பதற்கும் கையைக் கட்டுவதற்கும் எம்.ஜி.ஆர் இந்தப் பதவியைக் கொடுக்கிறார் என்று சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர். குணங்களை அறியாதவர்கள்தாம் அப்படிச் சொன்னார்கள். அவரைப் போலப் பெருந்தன்மை மிக்க மனிதர்களைப் பார்ப்பதரிது. அவர் முதலமைச்சர். நினைத்தால் தன்னை எதிர்த்து எழுதுபவரைப் பேசுபவரைப் பழிவாங்கியிருக்கலாம். மற்ற முதலமைச்சராக இருந்தால் அதைத்தான் செய்வார்கள்; அதைத்தான் செய்தார்கள். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பழிவாங்கும் குணம் கிடையாது. பகைவர்களையும், நண்பர்களாக மாற்றிக் கொள்ளக்கூடிய பண்பு எம்.ஜி.ஆரின் பண்பு. சில தலைவர்கள் தங்கள் சொல்லாலும், செயலாலும் நண்பர்களைக் கூடப் பகைவர்களாக மாற்றிவிடுவார்கள். எம்.ஜி.ஆர். அப்படிப்பட்டரவல்ல.
"பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளர் தகைமைக்கீழ் தங்கும் உலகு'
என்பார் வள்ளுவர். அதாவது பகைவர்களையும் நண்பர்களாக மாற்றிக் கொள்ளக்கூடிய பண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் தலைமையின் கீழ்தான் இந்த உலகம் இருக்கும். நாடும் இருக்கும். இதுதான் இந்தக் குறளின் பொருள்.
அத்தகைய பண்பு எம்.ஜி.ஆரிடம் இருந்த காரணத்தால்தான் அவர் இருக்கும் வரை அவரை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலை இருந்தது. இருக்கும் வரையிலும் ஏறுமுகமாக இருந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவர் ஒரு "அஜாத சத்ரு'. அஜாதசத்ரு என்றால் யாராலும் வெல்ல முடியாதவன். 
எதிர்ப்பே இல்லாதவன் என்று பொருள். பாரதத்தில் அஜாத சத்ரு என்று புகழைப் பெற்றவன் தருமன். வரலாற்றிலும் "அஜாத சத்ரு' என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்திருக்கிறான். இவன் அசோகர் காலத்திற்கு முற்பட்டவன். பெயருக்கேற்றாற்போல் வீரனாக விளங்கியவன்.
அத்தகைய சிறப்புப் பெற்ற எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்குவதாக இருந்த "இது தான் பதில்' என்ற படம் வெளிவரவில்லையே தவிர, நான் எழுதிய அந்தப்பாடலும், வாலி எழுதிய ஒரு பாடலும் இசைத் தட்டாக வெளிவந்தது. அதில் என்பாடல்தான் பிரபலமானது.

(இன்னும் தவழும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT