உலகின் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறேன். பல வகையான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். மிகச் சுவையாக உள்ளது என்று நான் கணித்த உணவுகளில் எல்லாம் கட்டாயமாக தக்காளிகள் சேர்க்கப்பட்டிருக்கும். நம் நாட்டிலும் தக்காளி சேர்க்காத உணவு வகைகளே இல்லை என்று
சொல்லலாம்.
"நான் தொட்டதும் தக்காளியாய் சிவந்துவிட்டதே உன் கன்னங்கள்' என்று ஆண்கள் சிலாகிக்க, தக்காளிச் சட்டினி, தக்காளி குழம்பு, தக்காளி சாதம், கெச்சப் என்று பெண்கள் கணவர்களுக்கு ஆக்கிப் பரிமாற, தக்காளியின் ஆதிக்கம் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது. தக்காளி இல்லாத உணவு எனக்கு சுவைப்பதே இல்லை.
தக்காளிகள் பிறந்த இடம் தென் அமெரிக்காவாக இருக்கிறது. பிப்லாஸ் என்கிற அமெரிக்க இந்தியர்கள் கி.மு.500-இல் முதல்முதலாக தக்காளியை அறுவடை செய்திருக்கிறார்கள். தக்காளியின் பளபளப்பையும், ஆழ்ந்த சிகப்பு நிறத்தையும் பார்த்து அதில் விஷத்தன்மை இருக்குமோ என்று பயந்து சாப்பிட மறுத்தவர்கள் பின்பு அதன் சுவை உணர்ந்து பயிரிட ஆரம்பித்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீஸியர்கள் தக்காளியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினர்.
இவ்வளவு பாரம்பரியம் மிக்க தக்காளிகளைக் கொண்டு ஒரு பெரிய திருவிழாவே நடக்கிறது. இந்த உலகப் புகழ் வாய்ந்த தக்காளி திருவிழா எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு, ஸ்பெயின் நாடு என்பது பதிலாக இருக்கிறது. மொத்தம் 100 டன் எடையுள்ள தக்காளிகள் நசுக்கப்பட்டு உலகெங்கிலும் வந்து கூடியிருக்கும் சுமார் 75,000 மக்கள் மீது வீசி எறியப்படுகிறது. தக்காளி திருவிழாவை நேரில் கண்டுகளிக்க விரும்புவர்கள் வாருங்கள் போவோம், ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியா நகரத்தில் சிறிய ஊரான பூனலுக்கு (ஆன்ய்ர்ப்). ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமையில் பூனல் நகரம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும், ஏனெனில் அன்றுதான் தக்காளி திருவிழா அரங்கேறும்.
இந்த திருவிழாவுக்கு போவதற்கு முன் அதனுடைய தோற்றம் ஏற்பட காரணமாக இருந்தது எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறதுதானே!
1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை பூனல் ஊரை சார்ந்த மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உரிய கடமைகளை ஆற்றுவதில் ஆழ்ந்திருந்தார்கள். ஒரு இடத்தில் ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜைஜான்டஸ் (Gigantes), கேபிஜூடோ (Cabezudo) என்ன முழிக்கிறீங்க? நம்ம ஊரு திருவிழாக்களிலே ஆண் பூதம், பெண் பூதம் என்று வேடம் கட்டி செல்வார்களே அப்படித்தான் சிலர் சென்று கொண்டிருந்தார்கள்.
அங்கே தெருவோரமாக கூடி இருந்த இளைஞர்களுக்கு இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஆசை. அவர்கள் அப்படி செய்ய முயன்றபொழுது ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் பக்கத்தில் இருந்த காய்கறி கடைகளில் இருந்து, பழங்களை எடுத்து வீசி இருக்கிறார்கள். இதில் தக்காளிப் பழங்களே பிரதானமாக விளங்கி இருக்கிறது.
இளைஞர்கள் வீசிய தக்காளிகளைக் கேச் பிடித்து ஊர்வலக்காரர்கள் அதை இளைஞர்கள் மீது வீச, கைகலப்பு ஏற்பட்டு பிறகு காவல்துறையினர் வந்து எல்லோரையும் கைது செய்து அமைதியை நிலைநிறுத்தி இருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்த வருடம் அதே நாளில் கிராமத்து இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்கள் வீடுகளிலிருந்து கூடைகளில் தக்காளிப் பழங்களைக் கொண்டு வந்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்ள, முதலில் கோபப்பட்ட ஊர் ஜனங்கள் பிறகு அதையே ஒரு விழாவாக்கி ஆனந்தப்பட்டனர்.
இதுதான் (கஹ பர்ம்ஹற்ண்ய்ஹ) "லா டொமடீனா' என்று அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டின் இந்த தக்காளி திருவிழா பிறந்த கதை.
ஸ்பெயின் நாட்டின் இந்த தக்காளி திருவிழாவை நேரில் காணவேண்டும் என்ற ஆசை நீரு பூத்த நெருப்பாக என் நெஞ்சில் இருந்தது. "ஜிந்தகி நா மிலிகி தோபாரா' என்ற படத்தில், ஹிர்த்திக் ரோஷனும், கைத்ரீனா கைய்ஃப்பும், தக்காளி திருவிழாவில் கலந்துகொண்டு, கூழாக்கப்பட்டு ஆறாக ஓடும் தக்காளிச் சாற்றில் உருண்டு, புரண்டு டூயட் பாடியதைப் பார்த்தபொழுது என்னுள் துளிர்விட்ட ஆசை அது!
ஒருமுறை, ஐரோப்பிய இருதய கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக என் கணவர் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணப்பட்டார். பார்சிலோனா நகரத்தில் அந்த கருத்தரங்கு நடக்க இருந்தது. நானும் என் கணவருடன் சென்றேன். கருத்தரங்கம் முடிந்தவுடன் நானும் என் கணவரும் ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான வெலன்ஸியாவுக்கு (யஹப்ங்ய்ஸ்ரீண்ஹ) சென்றோம். அந்த நகரத்திற்கு அருகேதான் பூனல் கிராமம் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு இரண்டு தினத்திற்கு முன்னால் வெலன்சியாவுக்கு செல்ல முடிந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கருத்தரங்கம் நடந்த மாதம் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரமாக இருந்ததால் என்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேற ஏதுவாக இருந்தது.
அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு பூனல் செல்லும் பேருந்தில் ஏறினோம். பேருந்து நிலையத்தில் கூட்டம் பொங்கி வழிந்துக் கொண்டிருந்தது. வயது வித்தியாசம் இல்லாமல் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை தக்காளி திருவிழாவுக்கு வந்திருந்தனர். என் கண்களுக்கு இளவட்டங்களும், காதல் ஜோடிகளுமே அதிகமாகத் தென்பட்டனர்.
பூனலை அடைந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத, நினைக்க நினைக்க மலைக்க வைக்கும் அனுபவங்களோடு திரும்பினோம்.
என்ன மாதிரியான அனுபவங்கள்... அடுத்த வாரம் பார்ப்போமா!
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.