1683-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்து, தரங்கம்பாடியில் கிறிஸ்துவ மதத் தொண்டும், மக்கள் நலத் தொண்டும், தமிழ்த் தொண்டும் புரிந்து வந்த சீகன்பால்கு என்ற பாதிரியார் தன் பணியை ஆற்றிவிட்டு ஜெர்மன் நாட்டுக்குத் திரும்பும்போது, லண்டனில் இருந்த "காண்டர்பரியார்' என்ற பாதிரியார் தலைமையில் அவருக்கு வரவேற்பு விழா நடத்தினார்கள்.
அதில் சீகன்பால்குவுக்கு லத்தீன் மொழியில் வரவேற்பிதழ் படித்தளித்தார்கள். அப்படிப் படிக்கும்போது, ""ஐரோப்பிய மொழிகளில் மிகச்சிறந்த மொழியான லத்தீன் மொழியில் இந்த வரவேற்பை வாசித்தளிக்கிறோம்'' என்று கூறி வாசித்தளித்தார்கள்.
அதற்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது, ""ஐரோப்பிய மொழிகளில் மிகச்சிறந்த மொழியான லத்தீன் மொழியில் எனக்கு வரவேற்பிதழ் படித்தளித்தீர்கள். அதுபோல் நானும் உலகத்தின் மிகச் சிறந்த மொழியொன்றில் நன்றி தெரிவிப்பதுதான் சரியாக இருக்குமென்று கருதுகிறேன்'' என்று சொல்லிவிட்டு, அந்த மொழியில் பத்து நிமிடங்கள் நன்றியுரை ஆற்றினார்.
அவர் பேசி முடித்ததும், ""நீங்கள் இதுவரை பேசிய மொழி என்ன மொழி?'' என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். ""இதுதான் உலக மொழிகளிலே மிகச் சிறந்த மொழியான தமிழ்'' என்று சீகன்பால்கு சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் முதன்முதல் அச்சுக்கூடத்தை தரங்கம்பாடியில் நிறுவியவரும் இவர்தான். முதன்முதல் அச்சில் வெளிவந்த தமிழ் நூல் பைபிள் புதிய ஏற்பாடு. இந்திய மொழிகளில் அச்சில் வெளிவந்த முதல் புத்தகமே இந்தத் தமிழ்ப் புத்தகம்தான். சீகன்பால்கு 1719-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 36-ஆவது
வயதில் ஜெர்மனியில் மறைந்துவிட்டார்.
அவருக்குப் பிறகு வந்த ஜி.யு.போப், ""இங்கிலாந்து நாட்டின் இளம்பெண்கள் உதடுகளில் தவழ்ந்து விளையாடுவதற்கு ஏற்ற இனிமையான மொழி தமிழ்'' என்று இங்கிலாந்து நாட்டிலே பேசியிருக்கிறார். அத்தகைய சிறந்த மொழியான நமது தமிழைக் கல்லூரியில் கற்றுக் கொடுக்கும் பேராசிரியர் பலர் திரைத்துறைக்குள் நுழைந்து சிறப்புப் பெற்றிருக்கிறார்கள்.
ஏ.எஸ்.பிரகாசம், ரத்னகுமார் போன்ற பேராசிரியர்கள் வசனம் எழுதுவதில் புகழ் பெற்றார்கள். ஏ.எஸ். பிரகாசம் ஒரு நடிகைக்காக "மணல்வீடு' என்ற நாடகம் எழுதியபோது பார்வர்டு பிளாக் கட்சித் தலைவராக இருந்த பி.கே. மூக்கையாத்தேவர் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி, ""இவர் பெயர் முத்துலிங்கம். இவர் நம்ம ஆள். கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார். பாடல் எழுத விரும்புகிறார். உங்களால் முடிந்தால் உதவுங்கள்'' என்றார்.
""எனக்கு முத்துலிங்கத்தை நன்கு தெரியும். எங்கள் பச்சையப்பன் கல்லூரிக் கவியரங்கில் அவர் பாடியதைக் கேட்டிருக்கிறேன். குருவிக்கரம்பை சண்முகம்தான் இவரை அழைத்து வந்தார். இந்த நாடகத்தில் பாடல் இல்லை. படங்களுக்கு எழுதும்போது பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்றார். ஆனால் அவர் மூலம் ஒரு பாடல்கூட நான் எழுதியதில்லை. சினிமாவில் பலரும் பல வகையில் ஏதாவது சொல்வார்கள். ஆனால் சொல்வதைப் போல் செய்பவர்கள் குறைவு.
கல்லூரிப் பேராசிரியராக இருந்து பாடல் எழுத வந்த கவிஞர்களில் மூன்று பேர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். ஏ.பி. நாகராஜன் தயாரித்த பல படங்களுக்கு இவர் பாடல் எழுதியிருக்கிறார். அதில் "திருமலை தென்குமரி' என்ற படத்தில்,
"திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம்நாடும் சீனிவாசா
ஏழு மலைவாசா'
என்ற பாடல் இவர் எழுதிய பாடல்.
"அன்பெனும் அகல்விளக்கை ஏற்றிவைத்தேன் - அதில்
ஆசையென்னும் நெய்யை ஊற்றிவைத்தேன்
என்மனம் உருகிடவே பாடிவந்தேன் - உன்
ஏழுமலை ஏறி ஓடிவந்தேன்'
என்று சரணம் தொடர்ந்து போகும்.
"அகத்தியர்' என்ற படத்தில்,
"உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்'
என்ற பாடலும் இவர் எழுதிய பாடல்தான். இரண்டு படங்களுக்கும் குன்னக்குடி வைத்தியநாதன்தான் இசையமைப்பாளர். ஏராளமான பக்திப் பாடல்களை இவர் எழுதியிருக்கிறார் என்பது எல்லார்க்கும் தெரிந்த செய்தி.
அவருக்கடுத்து, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த குருவிக்கரம்பை சண்முகம் குறிப்பிடத்தகுந்தவர். "அந்த ஏழுநாட்கள்' என்ற படத்தில் அவர் எழுதிய
"கவிதை அரங்கேறும் நேரம் - மலர்க்
கணைகள் பரிமாறும் தேகம் - இனி
நாளும் கல்யாண ராகம் - இந்த
நினைவே சங்கீதம் ஆகும்'
என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். விசுவநாதன் இசையமைத்த படம்.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய "நிலவே மலரே' என்ற படத்தில் "நிலவே மலரே' என்று தொடங்குகின்ற பாடலும் இவர் எழுதிய பாடல்தான். இந்தப் படத்தில் நானும் பாடல் எழுதியிருக்கிறேன். ஆனால் பாடலாசிரியர்களின் பேரை இந்தப் படத்தின் டைட்டிலில் போடவே இல்லை. இப்படியும் சில படங்கள் வந்திருக்கின்றன.
"டார்லிங் டார்லிங்' என்ற படத்தில் "ஓ நெஞ்சே நீதான்' என்ற பாடல் குருவிக்கரம்பை எழுதிய பாடல்தான். இதில் நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் என் பாடல் படத்தில் இடம் பெறவில்லை.
அவருக்கடுத்து மூன்றாவதாகக் குறிப்பிடத் தகுந்த பேராசிரியர் கவிஞர் மு. மேத்தா. புதுக்கவிதை உலகில் கொடி நாட்டிய கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இவருடைய கவிதைகளில் பல கவிதைகளை மேடையில் நான் பேசும்போது குறிப்பிடுவேன் என்றாலும் அதில் அடிக்கடி குறிப்பிடுவது,
"பாதங்கள் நடக்கத் தொடங்கிவிட்டால்
பாதைகள் மறுப்புச் சொல்லப் போவதில்லை'
என்ற கவிதையாகும். தொலைக்காட்சி நிலைய இயக்குநராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த நடராசனுக்கு மிகவும் பிடித்த கவிதை இது. அவரும் இதை அடிக்கடி சொல்வார்.
"அனிச்சமலர்' என்ற படத்தில், சங்கர் கணேஷ் இசையில்
"காற்று வீசுது - புதுக்
காற்று வீசுது - இங்கே
கதிர்கள் கூட வயல் வரப்பில்
காதல் பேசுது'
என்ற பாடல் மூலம் திரையுலகில் மேத்தா அறிமுகமானார். நாடகச் சக்கரவர்த்தி என்று போற்றப்பட்ட உடையப்பா தயாரிக்க, பி.யு. சின்னப்பாவின் மகன் ராஜ்பகதூர் கதாநாயகனாக நடித்த படம்.
இதுவரை நானூறு பாடல்கள் மேத்தா எழுதியிருக்கிறார். எம்.எஸ். விசுவநாதன், இளையராஜா, சந்திரபோஸ், கங்கை அமரன், எஸ்.ஏ. ராஜ்குமார் போன்ற பல இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறார்.
ஒருமுறை அமெரிக்காவுக்குப் பாடகர் ஜேசுதாஸ் சென்றபோது அங்கு நடைபெற்ற ஒரு இசைவிழாவில் ""உங்களுக்குப் பிடித்த ஐந்து பாடல்களைச் சொல்லுங்கள்?'' என்று ரசிகர்கள் கேட்டபோது, நான்கு பாடல்களை முதலில் சொல்லிவிட்டு ஐந்தாவது பாடலாக ஒரு பாடலைச் சொல்லி, ""இந்தப் பாடல்தான் நீங்கள் கேட்ட ஐந்து பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்'' என்று ஒரு பாடலைக் குறிப்பிட்டார். அந்தப் பாடல்தான் "இரட்டைவால் குருவி' என்ற படத்தில் இடம் பெற்ற,
"ராஜராஜ சோழன் நான் - எனை
ஆளும் காதல் தேசம் நீதான்'
என்ற பாடல். இது மேத்தா எழுதிய பாடல்தான்.
"சூர்யவம்சம்' என்ற படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இவர் எழுதிய
"நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்'
என்ற பாடல் இளைஞர்களின் இதயங்களை இன்றளவும் ஈர்த்து வைத்திருக்கும் பாடல்.
பரத்வாஜ் இசைக் குழுவோடு ஒருமுறை என்னை மலேசியாவுக்கு முதன்முதல் அனுப்பி வைத்தவர் மேத்தாதான். அதற்கு முன் அவர் தலைமையில் சிங்கப்பூரில் நடத்த இலக்கிய விழாவுக்கு என்னையும், கவிஞர் பழனிபாரதியையும், தாமரையையும் அழைத்துச் சென்றவரும் அவர்தான்.
"ஆனந்த விகடன்' பத்திரிகை நடத்திய நாவல் போட்டியில் கலந்துகொண்டு "சோழநிலா' என்ற நாவலை மேத்தா எழுதினார் என்பதும் பரிசுக்கு அதைத் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்பதும் இலக்கியவாதிகள் அனைவருக்கும் தெரியும். கவிப்பேரரசு வைரமுத்துப் போல் நாவல் எழுதுவதிலும் வெற்றி பெற்றவர் மேத்தா.
நான் இவருக்காக ஒரு படத்தில் பரிந்துரை செய்தேன். அது சுந்தர்லால் நகாதா-வின் நகாதா பிக்சர்ஸ் தயாரித்த படம். படத்தின் பெயர் "மருமகளே வாழ்க' இதில் மூன்று பாடல்களை நான் எழுதியிருக்கிறன். அதில் ஒரு பாடலை தீபாவளியன்று தவறாமல் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிபரப்புவார்கள். தொடர்ந்து பத்தாண்டுகளாக சென்னைத் தொலைக்காட்சியில் இதைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஒளிபரப்புகிறார்களா என்பது தெரியாது.
"தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும்
தீபாவளி
மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும்
தீபாவளி
இசைபாடுவோம் - அன்பில்
உறவாடுவோம்
திருநாளில் ஒன்றாய்ச்சேர்ந்தே இன்பம்
காணுவோம்'
என்று தொடங்கும் அந்தப் பாடல்.
"மங்கல மேடை - அதில்
மல்லிகை வாடை - இரு
கண்பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்'
என்ற பாடலும் அதில் நான் எழுதிய பாடல்தான். இதோடு இன்னொரு பாடலும் எழுதியிருக்கிறேன்.
இதில் எல்லாப் பாடல்களையும் நான்தான் எழுதுவதாக இருந்தது. நான்காவது பாடல் எழுத வேண்டிய நாளில், என் சொந்த ஊரில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அதனால், ""நான் எழுதவேண்டிய பாடலை மேத்தாவை அழைத்து எழுத வையுங்கள்'' என்று ஏ.எல். நாராயணனிடம் கூறினேன். அவர்தான் அந்தப் படத்தில் கதை உரையாடல் ஆசிரியர். அவர் பரிந்துரையில்தான் நானே எல்லாப் பாடல்களையும் எழுத அமர்த்தப்பட்டேன்.
ஏற்கெனவே மேத்தா எழுதிய "கண்ணீர்ப் பூக்கள்' என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்து மேத்தாவையும் ஏ.எல். நாராயணனிடம் அறிமுகப்படுத்தியிருந்தேன். அதனால் அவரும் சரியென்றார். ஆனால் அந்தக் கம்பெனி மேலாளர், ""எங்கள் படங்களுக்கு எப்போதும் வாலிதான் எழுதுவார். நீங்கள் முத்துலிங்கம் என்று சொன்னதால்தான் அவர் பாடல்களை நாங்களும் கேட்டிருக்கிறோம் என்பதால் எல்லாப் பாடல்களையும் அவர் எழுதுவதற்கு ஒப்புக் கொண்டோம்.
இப்போது வேறு ஒருவரை வைத்து ஒரு பாட்டு எழுதுவதற்குப் பதில் சென்டிமென்டாக எங்களுக்கு எழுதிய வாலியை வைத்து அந்தப் பாடலை நாங்கள் எழுதிக் கொள்கிறோம்'' என்று சொôல்லிவிட்டார். ஏ.எல். நாராயணனும் அதை மறுத்துப் பேச முடியவில்லை. ஆகவே அதில் மேத்தாவை எழுத வைக்க இயலவில்லை. இந்தப் படத்தில் என் பெயருக்கு அடுத்து வாலி பெயரைப் போட்டிருந்தார்கள். என் நெஞ்சுக்கு அது நெருடலாக இருந்தது.
(இன்னும் தவழும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.