ஞாயிறு கொண்டாட்டம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 26: லூர்த் மாதாவுக்கு ஒரு திருவிழா! 

உலக மக்களின் பாவங்களைத் தன் மீது ஏந்தி, சிலுவையில் அறையப்பட்டு இன்னுயிரை நீத்து, பிறகு தேவ மகன்

சாந்தகுமாரி சிவகடாட்சம்

உலக மக்களின் பாவங்களைத் தன் மீது ஏந்தி, சிலுவையில் அறையப்பட்டு இன்னுயிரை நீத்து, பிறகு தேவ மகன் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த இனிய நாளை ஈஸ்டர் தினமாக மக்கள் கொண்டாடி முடித்திருந்த தருணம் நாங்கள் பிரான்ஸ் சென்ற நேரம்!
இந்தப் புனிதரைக் கருவில் சுமந்த கன்னி மேரிக்கு உலகெங்கும் தேவாலயங்கள் கட்டப்பட்டிருந்தாலும், பிரான்ஸில், லூர்ட்ஸ் (கர்ன்ழ்க்ங்ள்) என்ற இடத்தில் ஒரு குகையை ஒட்டி எழுப்பப்பட்டிருக்கும் தேவாலயத்தை ஆறு மில்லியன் மக்கள் வருடம்தோறும் வந்து பார்த்து வழிபடுகிறார்கள். அப்படி அங்கே என்ன 
இருக்கிறது?
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் வானத்தையும், பூமியையும் இணைக்கும் பாலம் போல விஸ்வரூபம் எடுத்து ஓங்கி அணிவகுத்து நிற்கும் பைரணிஸ் (டஹ்ழ்ங்ய்ங்ங்ள்) மலைத்தொடர் பகுதியின் காலடியில் அமர்ந்திருப்பதுபோல் அமைந்துள்ள சிறிய நகரம் இந்த லூர்ட்ஸ். இது பிரான்ஸின் தலைநகரமான பாரீஸில் இருந்து 497 மைல்கள் தொலைவில் உள்ளது.
நானும் என் கணவரும் எங்கள் மகனோடு தனியாக ஐரோப்பிய நாடுகளை வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது. பிரான்ஸ் நாட்டின் பல புகழ்மிக்க இடங்களைப் பார்த்து முடித்த உடன், லூர்ட்ஸூக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு பின்னணியில், என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.
செலேஷியன் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களில் சிலர் என் கணவருடைய நண்பர்களாக இருந்தனர். முதலில் சிகிச்சைக்காக வந்தவர்கள் பிறகு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வந்துவிட்டனர். அவர்களில் லையனல் என்ற குரு எனக்கு இயேசுவைக் குறித்த பல நிகழ்வுகளைக் கூறுவது வழக்கம்.
ஒருநாள் அவரைச் சந்தித்தபொழுது, பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள லூர்ட்ஸ் நகரத்தைப் பற்றியும், அங்கே ஒரு குகையில் பெர்னாடெட் என்கின்ற ஆடுகளை மேய்க்கும் சிறுமிக்கு, புனிதமேரி பதினெட்டு முறை காட்சி அளித்ததைப் பற்றியும் கூறினார். ""பல கத்தோலிக்க தேவாலயங்களின் வெளி நுழைவு வாயிலின் ஓரத்தில் மலையில் இருக்கும் குகையில் புனிதமேரி கைகளைக் கூப்பிய வண்ணம் காட்சி தருவதும் சற்று கீழே ஒரு பெண் மண்டியிட்ட நிலையில் அன்னையை நோக்கி வணங்கியபடி இருப்பதையும் பார்த்திருப்போம். அவை லூர்த்தில் நடந்தேறிய புனித நிகழ்வை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
மேலும் தொடர்ந்தார், ""அழும் குழந்தை ஆறுதல் தேடி அன்னையின் மடியில் அடைக்கலம் புகுவதுபோல, பலவிதமான வியாதிகளால் அல்லல்படுவோரும், விதியின் கோரப்பிடியில் சிக்கி மனம் நொந்தவர்களும் லூர்த்துக்கு சென்று தேவ மங்கை மேரியை தரிசித்து மன ஆறுதல் அடைகிறார்கள். கன்னி மேரி எழுந்தருளியிருக்கும் குகையின்கீழ் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும் சுனைத் தண்ணீரில் குளித்து எண்ணற்றவர்கள் வியாதிகளில் இருந்து குணம் அடைந்து வருகிறார்கள்'' என்றார்.
""ஃபாதர், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிகள் என்னை பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்த் ஆலயத்திற்கு இப்பொழுதே சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. பெர்னாடெட்க்கு புனிதமேரி எப்படி காட்சி அளித்தாள் என்று சொல்லமுடியுமா?'' 
என்றேன்.
ஃபாதர் லையனல் மேலும் சொல்லத் தொடங்கினார்:
""கேவ் தி பா (எஹஸ்ங் க்ங் ல்ஹன்) என்னும் ஆறு, தான் செல்லும் வழியெங்கும் வளம் சேர்த்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் 14 வயது நிரம்பிய ஒரு சிறுமி சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறாள். பெர்னாடெட் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுமி லூர்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை குடியானவனின் மகள். அன்றைய தினமான பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தன் வாழ்க்கையில் ஒரு பேரதிசயம் நடக்கப்போகிறது, கால ஏடுகளில் அழியாத நிகழ்வாக அது பதியப்படப் போகிறது என்பதை அறியாதவளாக, பொறுக்கிய சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாள் பெர்னாடெட்.
மெசாபியேல் (ஙஹள்ள்ஹக்ஷண்ங்ப்ப்ங்) என்று வழங்கப்பட்ட ஒரு குகையின் அருகில் வருகிறாள் அவள், என்ன அதிசயம் "கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளம் குகையில் இருந்து வெளிப்பட, அதனூடே வெள்ளை உடை அணிந்து, அதே நிறத்தில் முக்காடு இட்டு இடுப்பில் நீலம் பட்டையோடு, ஒவ்வொரு காலிலும் மஞ்சள் ரோஜா அலங்கரிக்க பேரழகு மிக்க ஒரு பெண் புன்னகைத்திருக்கிறாள். இப்படி ஒரு முறை அல்ல, பதினெட்டு முறை பெர்னாடெட்டுக்குக் காட்சி அளித்த அந்தப் பெண் தன்னை புனிதமேரியாக சிறுமியிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்"
பிப்ரவரி 1858 தொடங்கி ஜூலை வரை நீடித்த இந்த வெளிப்பாட்டில், கிராமத்துப் பாதிரியாரிடம் சென்று அந்த குகைக்கு அருகில் தனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டித் தரச் சொல்லும்படி 
சிறுமியைப் பணிக்கிறாள் அன்னை மேரி.
பிறகு அன்னையின் ஆணைப்படி குகைக்கு வெகு அருகில் பெர்னாடெட் தரையைத் தோண்ட, அதில் இருந்து ஒரு ஊற்று பெருகி புனித நீராக வெளிப்பட்டது. அது அன்று முதல் இன்று வரை பலருடைய நோய்களைக் குணப்படுத்தி வருகிறது. அதற்கான ஆதாரங்
களும் பதிவில் உள்ளது.
இத்தகைய அதிசயங்கள் பெருகப் பெருக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் பெருங்கூட்டமாக வரத்தொடங்கினர். தற்போதைய கணக்கெடுப்பின்படி 111 உலக நாடுகளில் இருந்து மாதாவின் அருள் வேண்டி மக்கள் வருடம்தோறும் இந்தக் குகையைக் காண கூடுகிறார்கள்'' என்று ஃபாதர் லையனல் முடித்துக்கொள்ள அன்றே என் மனம் சூளுரைத்தது பிரான்ஸூக்கு சென்றால் லூர்த்துக்கு செல்வேன் என்று! சபதம் நிறைவேறியது, ஒரு பெரும் திருவிழாவைக் காணும் பாக்கியமும் கிட்டியது. 
தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

சமுதாயக் கட்டடம் திறப்பு

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT