இன்று நீங்கள் துயருற்ற நிலையில் இருந்தால், புனித மேரியை நோக்கி கூப்பிடுங்கள். பிறகு இந்த எளிய பிரார்த்தனையை சொல்லுங்கள், "மேரியே, இயேசுவின் தாயாரே. தயவுசெய்து இப்பொழுது எனக்குத் தாயாராக இருங்கள்," இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த பிரார்த்தனை என்னை ஒருபொழுதும் தோல்வி அடையச் செய்ததில்லை.'
- மதர் தெரசா
இத்தகைய நம்பிக்கையை மனதில் இருத்திதான் நாள்தோறும் லூர்தில் இருக்கும் புனிதமேரியின் தேவாலயத்தில் லட்சக்கணக்கில் மனிதர்கள், ஜாதி, மதம், நிறம், நாடு, பணக்காரன், ஏழை போன்ற பாகுபாடுகளை ஒதுக்கி வைத்து வந்து கூடுகிறார்கள். இந்துவாகிய நாங்கள், பிரான்ஸில் வாழும் எங்கள் முகமதிய நண்பரோடு காரில் பாரீஸில் இருந்து பயணப்பட்டு லூர்த்துக்கு வந்து சேர்ந்தோம். இந்துவும், முகமதியரும் கைகோர்த்து வந்தது கிருத்துவ தேவாலயத்திற்கு. இங்கு அன்னையின் அருளைப் பெறவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
என்னுடைய பேரதிர்ஷ்டம் அன்றைய தினம், (அள்ள்ன்ம்ல்ற்ண்ர்ய் ர்ச் ஙஹழ்ஹ்) அசம்ஷன் ஆஃப் மேரி என்று கத்தோலிக்க கிருத்தவர்கள் உலகெங்கிலும் கொண்டாடும் திருவிழா தினமாக அமைந்திருந்தது. இந்த நாளில் அங்கே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செல்லவில்லை. எதேச்சையாக அமைந்தது.
புனிதமேரியின் அசம்ஷன் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறதுதானே!
தன்னுடைய அருமை மகன் இயேசு மறைவுக்குப்பின் பதினொரு ஆண்டுகள் இந்தப் பூவுலகில் வாழ்ந்த அன்னை மேரி, பிறகு இறந்திருக்கிறார். அவருடைய ஆன்மா, அதைச் சுமந்திருந்த உடலோடு சொர்க்கம் அடைந்ததாக கத்தோலிக்க கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அப்படி புனிதமேரி தன் உடலோடு சொர்க்கம் புகுந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியை "அசம்ஷன் ஆஃப் மேரி தினம்' என்று கொண்டாடுகிறார்கள்.
சாதாரணமாகவே சுற்றுலா பயணிகளால், லூர்த் பொங்கி வழியும், திருவிழா தினமாக ஆகிப்போனதால், நாங்கள் தங்க ஒரு ஹோட்டல் கூட கிடைக்கவில்லை. பெரும் முயற்சிக்கு பிறகு லூர்த் கிராமத்திலிருந்து 12 கி.மீ தள்ளியிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கினோம்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்து, பிறகு புறப்பட்டு லூர்த் தேவாலயத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளில் நடக்கத் தொடங்கினோம். வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற கடைகள் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கியிருந்தது. கடைகளில் ஆள் உயர புனிதமேரி மாதா சிலைகள் தொடங்கி, கட்டைவிரல் அளவு சிலைகளும் விற்பனைக்கு கடைவிரிக்கப்பட்டிருந்தது. பலவிதமான சைஸ்களில் வாட்டர் கேன்கள், குகையில் கைகளைக் கூப்பிய வண்ணம் புனிதமேரி நிற்பதுபோல பொறிக்கப்பட்ட படத்துடன் காட்சி அளித்தன. இதை மக்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்தவுடன், எங்களுடன் வந்த நண்பரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், ""புனிதமேரி காட்சி அளித்த குகையின் கீழே, பெர்னாடெட், புனித மேரியின் கட்டளைப்படி தோண்டிய இடத்திலிருந்து பொங்கிப் புறப்பட்டு இன்றுவரை வற்றாத ஊற்றாக வெளிவந்து எண்ணற்ற மக்களின் நோய்களைத் தீர்க்கும் புனித நீரை, இத்தகைய கேன்களில் மக்கள் பிடித்துக் கொண்டு செல்வார்கள்'' என்றார்.
"அட, கங்கை மற்றும் பல புனித நதிகளின்
தண்ணீரை நாம் வீட்டிற்கு கொண்டு வந்து நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதுபோல செய்கிறார்களே!' என்று வியந்தேன். நானும் இரண்டு அரை லிட்டர் கேன்களையும், சில மேரி மாதாவின் சிலைகளையும் வாங்கினேன். என்னுடைய கிருத்துவ நண்பர்களுக்காக ஜெபமாலைகளையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.
மற்றொரு பொருள் என் கவனத்தை தன்பால் ஈர்த்தது. நம்ம ஊரில் கிடைக்கும் மெழுகுவர்த்திகளைப் போலத்தான் அவை இருந்தன. ஆனால் அவற்றின் தலைப்பகுதியில், திரி இருக்கும் இடத்திற்குச் சற்று இறக்கமாக, பேப்பரினால் ஆன, புனிதமேரியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட, மேல் பகுதியில் மெழுகுவர்த்தி எறிய ஏதுவான வகையில் ஓர் ஓட்டையுடன் கூடிய கூம்பு போன்ற மறைப்பு அலங்கரித்து இருந்தது.
இந்த மெழுகுவர்த்தியைக் கையில் ஏந்தி நடந்தால், காற்றினால் அதன் தீபம் அணைந்துவிடாதபடி வெகுநேர்த்தியாக அவை உருவாக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர ஆள் உயர மெழுகுவர்த்திகளையும் இரண்டு ஆட்களாக சுமந்து வந்துகொண்டிருந்தனர்.
லூர்த் மேரியின் தேவாலயத்தை அடைந்தோம். பெர்னாடெட் வர்ணணைக்கு ஒத்த முறையில் கால்களில் இரண்டு மஞ்சள் ரோஜா பூக்களுடன் புனிதமேரி காட்சி தந்தாள். இது வெளிப்புற மைதானத்தில் இருக்க, அந்த புனிதமேரிக்கு நேர் எதிரில் மூன்று அடுக்குகளாக, இரண்டு பக்கங்களில் மக்கள் ஏறிச் செல்லும் வகையில் தேவாலயம் எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு இடதுபுறத்தில் புனித மேரி காட்சி கொடுத்த மெசாபியேல் குகையில் அன்னை மேரியின் சிலை நிற்கிறது. அவள் முன்னே ஆளுயர மெழுகுவர்த்திகள் ஒளிவீசி நின்றன. அவளுடைய குகையின் கீழே புனித ஊற்று பொங்கிச் செல்கிறது. இது ஒரு வாரத்திற்கு 27,000 காலன் தண்ணீரை வெளிப்படுத்துகிறதாம். அந்தத் தண்ணீரை 17 குளியல் தொட்டிகளுக்கு அனுப்புகிறார்கள். நீண்ட வரிசையில் நின்று, ஆறு குளியல் தொட்டிகளில் ஆண்களும், மீதியில் பெண்களும் குளிக்கிறார்கள். அந்தப் புனித தண்ணீரை மற்றவர்கள் செய்வதுபோலவே, நானும் குழாய்களின் வழியாக வரும் நீரைக் கேன்களில் பிடித்துக் கொண்டேன்.
லட்சக்கணக்கில் மக்கள் கைகளில் முன்னே நான் சொன்ன மெழுகுவர்த்திகளை ஏந்தி தேவாலயத்தின் முன் பக்கத்தில் நடுநாயகமாக நிற்கும் புனித மேரி மாதாவின் சிலையைச் சுற்றி "ஏவ் மேரி' (அஸ்ங் ஙஹழ்ஹ்) என்று பாடி சுற்றிவர, அந்தக் கண்கொள்ளாக் காட்சி என்னுள் சிலிர்ப்பு அலைகளாக எழும்பியது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் வீல் சேர்களில் வந்து பிரார்த்தனையில் கலந்துகொள்கின்றனர். மக்களின் பிணிகள் தீர, சிறப்புப் பிரார்த்தனைகள் எல்லா மொழிகளிலும் செய்யப்பட்டன. தமிழ் மொழியில் பிரார்த்தனையைக் கேட்கும் பெரும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது.
உலகின் பல நிகழ்வுகளைப் பகுத்தறிவு என்று பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் பக்தி என்னும் அளவுகோல் கொண்டு கவனித்தால், அளவில்லாத பயனை அடையலாம்.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.