முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

 பிடித்த 10: இடர்பாடுகளை தவிர்க்கும் இயற்கை வழிபாடு - மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்

ஆன்மிகவாதிகளில் அடிகளாருக்குத் தனி இடம் உண்டு.  குறிப்பாக இவர் உருவாக்கிய மேல்மருவத்தூர் இந்திய அளவில் பிரசித்திப் பெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:


ஆன்மிகவாதிகளில் அடிகளாருக்குத் தனி இடம் உண்டு.  குறிப்பாக இவர் உருவாக்கிய மேல்மருவத்தூர் இந்திய அளவில் பிரசித்திப் பெற்றது.

சமீபத்தில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் பங்காரு அடிகளார். அவருக்குப் பிடித்தமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேல்மருவத்தூர்: எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தி பேசும் தெய்வமாக அருள்பாலிக்கின்ற சக்திபீடமே மேல்மருவத்தூர். அவளின் பல்வேறு கூறுகளுக்கு ஓர் உருவமாய் அன்னை ஆதிபராசக்தி இம்மண்ணை விரும்பி ஏற்றுள்ளாள். மற்ற கோயில்களைப் போன்று இங்குள்ள ஆதிபராசக்தி கோயில் சற்று வித்தியாசமானது. அதாவது இங்கு வாழ்ந்து மறைந்த 21 சித்தர்கள் இன்றும் அருள்பாலித்து வருவதால் இதனை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். 

இல்லறஞானி: ஆன்மிக முன்னேற்றத்திற்கு இல்லறம் ஒரு தடையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இல்லறத்தில் இருந்து வருகின்ற எனக்கு,  மனைவி குழந்தைகள் என்கிற பந்தபாசத்துடன் இருந்துக் கொண்டு ஆன்மிக நாட்டத்துடன் உலகியல் கடமைகளையும் இங்கு வருகின்ற பக்தர்களின் குறைகளைத் தீர்க்கின்ற நிலையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும். 

ஆன்மிகத்தொண்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அனைத்து மதத்தினரும் அனைத்து மொழி பேசுபவர்களும் வந்து வழிபடலாம். அவர்கள் ஆன்மிகப் பணிகளைச் செய்வதோடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண உதவுகிறோம்.

பெண்களுக்கு முக்கியத்துவம்: எந்தக் குடும்பத்தில் பெண்கள் மதிக்கபடுகிறார்களோ  அங்கு மகிழ்ச்சி மட்டுமல்லாமல் இனிய இல்லறம் அமையும்.

இங்குள்ள சித்தர்பீடத்தில் கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வதில் இருந்து அனைத்து ஆன்மிகப் பணிகளையும் செய்யப் பெண்களை அனுமதித்துள்ளோம். நாட்டில் காசி கோயிலில் தான் பெண்களைக் கருவறை சென்று வழிபட்டு வருவதை அறிகிறோம் அதே போன்று நம் தமிழ்நாட்டில் இங்குள்ள சித்தர் பீடத்தில் நடைபெறுகின்ற அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

பஞ்சபூத வழிபாடு: நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகக் கருதப்படுகிறது. சித்தர்பீடத்தில் எந்த விழா துவக்கப்பட்டாலும் அதற்கு முன் பஞ்சபூத வழிபாட்டைச் செய்த பின்பே செய்யப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று அடங்கி உள்ளதால் மக்கள் அனைவரும் தமது வாழ்க்கை  மேம்படப் பஞ்ச பூத வழிபாட்டை அவசியம் செய்யவேண்டும். பண்டைய மக்கள் இயற்கை வழிபாடு செய்ததை வரலாறுகளில் படித்து இருக்கிறோம். மக்கள் எவ்வாறு இயற்கை வழிபாட்டைச்  செய்யவேண்டும் என்பதை சித்தர்பீடத்தில் நடைபெறுகின்ற விழாக்களின் மூலம் வழிகாட்டுகிறோம்.. இயற்கை வழிபாடு செய்தால் தான் நாம் பல இடர்பாடுகளைத் தவிர்க்க முடியும். 

ஒற்றுமை மனப்பான்மை: ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி மனித இனத்தில் அனைவரது  உடலில் செல்கின்ற ரத்தம் சிவப்பு நிறமாகும். இதில் இனம், மொழி பாகுபாடின்றி செல்கின்ற ரத்தம் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இந்த ஒற்றுமை மனப்பான்மை எல்லோரிடத்திலும் நிலவவேண்டும். அதனால் தான் அன்னை ஆதிபராசக்தி "ஒரே தாய் ஒன்றே குலம்' என்ற தாரக மந்திரத்தை இங்கு வருகின்ற பக்தர்களுக்கு அளித்துள்ளார்.

கல்விப்பணி: சென்னை போன்ற நகரப்பகுதிக்கு சென்று படிக்கின்ற நிலையை மாற்றி சிறுகுழந்தைகளை இங்குள்ள பள்ளியில் சேர்த்துவிட்டால் அவரவர் வயதிற்கேற்ப,  விருப்பத்திற்கேற்ப உயர்நிலை கல்வியைப் பெற்று சமுதாயத்தில் நற்சிந்தனைகளோடு ஆன்மிக நெறிகளோடும்  ஒழுக்கமிகு பண்புகளோடும் புடம் போட்ட தங்கம் போல் சிறந்த மாணவர்களாக விளங்க வழி செய்துள்ளோம். 

தமிழில் அர்ச்சனை: இங்கு தொண்டு செய்கின்ற செவ்வாடை பக்தர்களால் தமிழ்மொழியில் அனைத்து மந்திர வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொண்டு செய்கின்ற தொண்டர்களும் தமது தாய்மொழியான தமிழ்மொழியால் எளிதில் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய முடிகிறது. 

மன மகிழ்ச்சி: இங்கு தொண்டாற்றுகின்ற ஒவ்வொரு செவ்வாடை பக்தனின் உணர்வில் இரண்டற கலந்து இருந்தாலும், இல்லறத்தில் இருந்து ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தாலும்   பேரக்குழந்தைகளோடு வயது ஒரு தடையில்லாமல் கொஞ்சி மகிழ்வதில் மன மகிழ்ச்சி கிடைக்கிறது. 

தாய் தந்தை மதித்தல்: தங்கள் தாய் தந்தையரை மதித்து வணங்க வேண்டும். அவர்களது மனமகிழ்ச்சியினால் அளிக்கப்படுகின்ற ஆசி அவர்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அரணாக அமையும். பெற்றோர்களை மதித்துச் செயல்படுகின்ற பிள்ளைகள் வாழ்வில் சிறப்புடன் வாழ்வார்கள். எனது பெற்றோர்களின் தவப்பயனால் தான் இங்கு வருகின்ற பக்தர்களின் ஆன்மிகக் குருவாகவும் பக்தர்கள் பாசத்தோடு அழைக்கின்ற அம்மாகவும் இருந்து வருகிறோம். 

முழு கட்டுரையைப் படிக்க →