பளபளக்கும் பழைய கார்கள், விதவிதமான வெளிநாட்டு பைக்குகள் என கலர்ஃபுல்லாகக் காட்சி தந்தது திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் கூடக் குடும்பத்துடன் பழைய கார்களைப் பார்வையிடுவதற்குப் பலரும் வந்திருந்தார்கள்.அரங்கில் நுழைந்ததுமே நம்மை வரவேற்றது வி.ஐ.பிக்கள் கார் தான்.
ஜெமினி ஸ்டூடியோ நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய 1951-ஆம் ஆண்டு தயாரிப்பான "வாக்ஸ்ஹால்வெலாக்ஸ்', 1938-ஆம் ஆண்டு தயாரிப்பான ஏ வி.மெய்யப்பசெட்டியாரின் "வாக்ஸ்ஹால் 14'கார், டி.வி.எஸ் சுந்தரம் ஐயங்கார் பயன்படுத்திய 1933-ஆம் ஆண்டு தயாரிப்பான "செவர்லே மாஸ்டர்', 1957-ஆம்ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். பயன்படுத்திய "டாட்ஜ்கிங்ஸ்வே' காரும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கார் "அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது ஆகும். அதே போன்று "சிவாஜி' படத்தில், ரஜினிகாந்த்-ஸ்ரேயா நடித்திருந்த ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்ற "எம்.ஜி-டி.பி.1939' காரும் இடம் பெற்று இருந்தது. "பாயும் புலி' படத்தில் ரஜினி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இவை பழைய கார்களாக இருந்தும் பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக காட்சி அளித்தன. பழைய சினிமாக்களிலும், போட்டோக்களிலும் மட்டுமே பார்த்திருந்த பழமையான கார்களை, நேரில் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர். பெரும்பாலானவர்கள் வி.ஐ.பி கார்களின் முன்பு நின்று செல்பி எடுக்கத் தவறவில்லை.
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் நடத்திய இந்தக் கண்காட்சியில் "ரோல்ஸ்ராய்ஸ்', "இம்பீரியல்', "கார்டிலக்', "போர்டு', "ஜாக்குவார்", "மெர்சிடஸ்பென்ஸ்', "ஹெரால்டு', "டாட்ஜ்', "பக்', "செவர்லே', "இந்துஸ்தான் மோட்டார் கமாண்டோ', "பியட்'உள்ளிட்ட கார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட 140 கார்கள் அப்போது பயன்படுத்தப்பட்ட அவசர ஊர்தி போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இதே போன்று "பி.எஸ்.ஏ.', "ராயல் என்பீல்டு', "டிரையம்ப்', "திவொல்ப்', "ஜேம்ஸ்', "பென்னோனியாசிஸ்பெல்', "விஜய்சூப்பர்', "லாம்பிரட்டாஎல்.டி'உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளான 40 பழமையான மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.
பழைய கார்களைச் சேகரித்துப் பராமரித்து வரும் பிரதாப் சிங் சொன்னார்:
""பழைய பொருட்களைச் சேகரித்துப் பத்திரமாக வைத்து இருக்கலாம். ஆனால், கார்களைப் பொருத்தவரை அதைப் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இன்ஜினை இயக்க வேண்டும். மேலும் இதிலுள்ள பாகங்கள் இப்போது கிடைப்பது கஷ்டம். இதற்காக நான் மெக்கானிக் ஒருவரை வேலைக்கு வைத்துள்ளேன்.
இந்த காரை ஓட்டும்போது, எனக்குப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. மற்றவர்களும் இந்தக் காரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். சிலர் இந்தக் கார் குறித்து என்னிடம் கேட்டு செல்வதும் உண்டு. பழமையான கார்களின் மீதான இன்றைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குப் பழமையின் அருமையும் பெருமையும் தெரிய வேண்டும்'' என்றவர் கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களுக்குக் கார் பராமரிப்பு பற்றியும், அதனுடைய பாகங்கள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார்.
மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப்பின் தலைவர் பால்ராஜ் வாசுதேவனிடம் பேசிய போது, ""புராதன கார்களை மறுசீரமைத்துப் பேணி வருவதில் இந்தக் கார்களின் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் நிறைய சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதைப் பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்தக் கண்காட்சி, கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் பழைய கார் ஊர்வலம் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் இந்தக் கார்கள் பார்வைக்கு மட்டும்தான் வைக்கப்பட்டுள்ளன'' என்றார்.
எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த நபர் ஒருவர் கார் முன்பு போஸ் கொடுத்த படி குழந்தைகளைக் கவர்ந்தார். ஓவியர் ஒருவர் பழைய கார்களை பார்த்து அங்கே நின்றபடி ஓவியம் வரைந்தார்.
இந்தப் பார்வையாளர்களைக் கவர்ந்தது கார் கண்காட்சி மட்டுமல்ல, நமது வீட்டில் உள்ள பழைய கார், பைக் போன்றவற்றை உதாசீனம் செய்யாமல் எப்படிப் பத்திரமாக வைப்பது என்று செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுமைகளைப் பின்னுக்குத் தள்ளி பழையவையே சிறந்தவை என்பதை உணர்த்தியது இந்தக் கார் கண்காட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.