தேரின் அழகைப் பார்க்கும் நாம், அதை மூடி மறைத்து அழகு செய்யும் ஆடையையும், அதிலிருக்கும் ஓவியங்களையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இது பலரது உழைப்பில் உருவானது. கோயில் குடைகள் தயாரிப்பது, தேர்களுக்குத் துணி தைப்பது, சாமி படங்களைத் துணியில் வடிவமைத்துக் கொடுப்பது எனப் பல வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைச் செய்து வருகிறார் எடப்பாடியைச் சேர்ந்த சண்முகலால் சிங். இத்தகைய தெய்வீகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் அவரிடம் இக்கலை குறித்து கேட்டபோது....
தேருக்கு ஆடைகள் தைக்கும் இந்தக் கைவினைத் தொழிலில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு உண்டாயிற்று?
எடப்பாடிதான் என் சொந்த ஊர். அங்குதான் பிறந்தேன். மூன்றரை வயதிலேயே தாயை இழந்து அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தேன். நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன். அப்பா, பெரியப்பா, சகோதரி அனைவரும் தேர் துணி தைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இளம் வயதிலிருந்தே அதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால், எனக்கும் அவ்வாறு தைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் தையல் மிஷினில் தையலுடன் எம்பராய்டரியும் கற்றுக்கொண்டேன். அவர்களுக்கும் சிறு சிறு உதவிகளைச் செய்து வந்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டே எங்கள் குடும்பத் தொழிலுக்கு உதவி செய்து வந்தேன்.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் மூன்று ஆண்டுகள் டி.எம்.இ. படித்து முடித்தேன். பிறகு ஒன்றரை ஆண்டு சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் வேலை . தொடர்ந்து அசோக் லேலண்டு (எண்ணூர்) நிறுவனத்தில் 27 ஆண்டுகள் வேலை செய்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக பணி விருப்ப ஓய்வு பெற்றேன். மீண்டும் என் சொந்த ஊரான எடப்பாடிக்குத் திரும்பினேன். அப்போது, அப்பா, பெரியப்பாவுக்கு வயதாகி விட்டாதால், இந்தத் தேர் துணி தைக்கும் தொழில் சரியாக நடைபெறவில்லை என்பதைக் கேள்விப்பட்டேன். என் சகோதரி, அண்ணனுடன் சேர்ந்து மீண்டும் இதை முழு நேரப் பணியாகச் செய்யத் தொடங்கினேன்.
இந்தக் கைவினைத் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாமா?
இந்தத் தொழில் வருமானம் ஈட்டுவதற்கு மட்டுமல்ல, இதைச் செய்ய பொறுமையும் ஆர்வமும் அவசியம் வேண்டும். கடவுளுக்கு சேவை செய்கிற மாதிரி, தொண்டு செய்கிற மாதிரி நினைத்து ஆத்மார்த்தமாக யாரும் செய்யலாம். இத்தொழிலைச் செய்ய அடிப்படை தையல் கலை பயின்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்பிராய்டரி தெரிந்திருப்பது சிறப்பு. மேலும் பல மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும்; வாங்கிய ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல பெயரைப் பெறமுடியும், பாராட்டும் கிடைக்கும்
இதுவரை எந்தெந்த கோயில் தேர்களுக்கெல்லாம் நீங்கள் துணி, குடைகள் தைத்துக் கொடுத்திருக்கிறீர்கள்?
நிறைய கோயில் தேர்களுக்குத் தைத்துக் கொடுத்திருக்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி கோயில்கள்; ஆத்தூர் மாரியமம்மன், வளையமாதேவி கோயில்கள்; காளிப்பட்டி கந்தசாமி கோயில்; ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில், இளம்பிள்ளை மாரியம்மன் கோயில், இராக்கிபட்டி பெருமாள் கோயில், ராசிபுரம் முருகன் கோயில், ஈரோடு காளியம்மன், ஸ்ரீகுலவிளக்கு அம்மன், நங்கவள்ளி திருக்கோயில்கள்; காஞ்சி கோயில், ஜம்பை முருகன் கோயில், கொடுமுடி மாரியம்மன் கோயில், மேட்டூர் மாரியம்மன் கோயில்
முதலியவை.
இந்தப் பணிக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கிறதா?
எல்லாத் தொழிலுக்குமே போட்டி உண்டு. குறிப்பாக, இந்தத் தேர் துணி தைக்கும் தொழிலுக்கும் நிறைய போட்டி உண்டு. அதே அளவுக்கு வாய்ப்புகளும் அதிகம். எங்கள் சொந்த ஊரில் பல காலமாக நாங்கள் இதைச் செய்து வருவதால், எங்களது நேர்த்தியான வடிவமைப்பு, கலைத் திறனைக் கேள்விப்பட்டு எங்களைத் தேடி வருவார்கள்.
உங்கள் வாரிசுகளை இதில் ஈடுபடுத்துகிறீர்களா?
நான் செய்யும் இந்தக் கலைத் தொழில் பற்றி என் மகளுக்கும் மகனுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களும் எனக்கு உதவி செய்வார்கள். தற்போது மகள் திருமணமாகிச் சென்றுவிட்டார். மகனும் வேலை காரணமாக சென்னை சென்றுவிட்டதால், நான் மட்டும் தற்போது இதைச் செய்து வருகிறேன்.
எது நம்மைக் கைவிட்டாலும் கைத்தொழில் நம்மைக் கைவிடாது என்ற உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சண்முகலால் சிங் போன்றோர் பலர் உருவாக வேண்டும்... தேரின் அழகுக்கு அழகு சேர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.