முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

என்றும் இருப்பவர்கள்!

தமிழ்ப்பதிப்பகம் என்பது தமிழ் வெகுஜன எழுத்துகளின் எச்சமாக இருந்தது. அதாவது வெகுஜன பத்திரிகைகள் வெளியிடும் சிறுகதைகள், தொடர்கதைகள், துண்டு துணுக்குக் கட்டுரைகள், தீபாவளி, பொங்கல்

Updated On : 10 பிப்ரவரி, 2019 at 3:07 PM
பகிர்:

2.லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

தமிழ்ப்பதிப்பகம் என்பது தமிழ் வெகுஜன எழுத்துகளின் எச்சமாக இருந்தது. அதாவது வெகுஜன பத்திரிகைகள் வெளியிடும் சிறுகதைகள், தொடர்கதைகள், துண்டு துணுக்குக் கட்டுரைகள், தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், குடியரசு நாட்களில் கவிதைகள் வெளியிட்டன. கவிதைகளைத் தமிழ் மக்கள் படிக்க மாட்டார்கள். அவற்றைப் பாடப் புத்தகங்களில் படித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது மாதிரி கவிதைகளை வெளியிடாமல் இருந்தன. 

பழந்தமிழ் நூல்களில் அக்கறை கொண்டவர்கள் மடங்கள், இலக்கியக் கருத்தரங்குகளில் ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளில் கவிதைகள் வழியாகப் சொல்லப்பட்டவற்றை புத்தகமாகப் போட்டு வந்தார்கள். ஆனால் அவர்களும் புதிதாக எழுதப்படும் கவிதைகளை அதிகமாக வெளியிடவில்லை. எனவே காவியம் படைக்க தமிழ்க் கவிஞர்கள் முன் வரவில்லை. தனிப்பாடல்கள் தான் எழுதி வந்தார்கள். அவற்றுக்கும் போதிய இடம் கிடைக்கவில்லை. பாரதிதாசன் சொந்தமாக "குயில்' பத்திரிகை ஆரம்பித்து அதில் இருந்து கூவிக் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வெளிவராத எதையும் பதிப்பகங்கள் புத்தகமாகப் போட முன் வரவில்லை. ஊர், பெயர் தெரியாத ஆசிரியர்களின் தகுதி, நூலின் தரம் தெரியாமல் காசு கொடுத்து வாங்க மக்கள் தயாராக இல்லை. எனவே பத்திரிகைகளின் வெளியீட்டைத் தரத்திற்கு ஓர் அடிப்படையாக வைத்துக்கொண்டார்கள்.

பழந்தமிழ் நூல்களை வெளியிட்ட உ.வே. சாமிநாத ஐயர் தன் நூல்களைத் தானே பதிப்பித்தார். நூல் பதிப்பும் விற்பனையும் கடினமான காரியமாகவே இருந்தது.  அந்த நூல்கள் வாங்கிப் படித்தவர்கள் கூட உரைநடையில் எழுதப்படும் சிறுகதைகள், நாவல்கள் வாங்கிப் படிக்க முன் வரவில்லை. உரைநடையில் எழுதப்படும் படைப்புகள் கெட்டவை. படிக்கத் தக்கவை இல்லை என்று எல்லாச் சமயவாதிகளும் ஒன்று போல் சொல்லி வந்தார்கள். குறிப்பாக மனத்தைக் கெடுக்கிறது. காம எண்ணங்களையும், உணர்வுகளையும் தூண்டுகிறது. ஒழுக்க நெறிகளைக் கொண்டு வாழ வேண்டுமானால் உரைநடையில் எழுதப்படும் நாவல்களைப் படிக்கக்கூடாது என்று சென்னை வெஸ்லி பள்ளியில் படிக்கும் போது தன் ஆசிரியர்கள் கூறியதால், நாவல், சிறுகதை, படிப்பதை விட்டு விட்டதாகத் திரு.வி.க தன் சுய சரித்திரத்தில் எழுதியிருக்கிறார்கள்.

Advertisement

அவரைப் போன்றே பல தமிழ் அறிஞர்களும் நாவல் படிக்காதவர்களே.  வெளியில் சொல்லவில்லை அவ்வளவு தான். புதிய வரவான நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதில் சிலருக்கு ஆர்வம் இருந்தது. தன் எழுத்தின் மூலம் சமூகத்தையே சகோதர மனிதர்களுக்குக் காட்டலாம். குதூகலம் அடைய வைக்கலாம் என்று கருதி எழுதினார்கள்.

பத்திரிகைகள், பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப் பட்டது தான். ஆனால் எல்லாம் ஒன்றில்லை. தமிழ்நாட்டில் நவீன இலக்கியம் கல்லூரி படிப்பில் இல்லாமல் போய்விட்டது. தமிழ் மொழி காப்பியங்கள், தனிப்பாடல்கள், நீதி நுல்கள்- என்று பலவற்றையும் பன்னெடுங்காலமாகப் பெற்று இருந்தபடியால் அவற்றைப் படித்தால் போதுமென்று கல்வியாளர்கள் நவீன இலக்கியத்தைப் படிப்பின் ஒரு பகுதியாகக் கொண்டு போகவில்லை. பழமையே புதுமைக்கு எதிராகப் போய்விட்டது.

ஓர் இலக்கியப் படைப்பென்பது அக்காலத்தின் வாழ்க்கை முறைகள், மக்களின் எண்ணப் போக்குகள் என்ன என்பதைச் சொல்வது தான். அது ஒரு காலத்தில் கவிதையால் சொல்லப்பட்டது. இருநூறு ஆண்டுகளாக உரைநடையில் சொல்லப்படுகிறது. கவிதையில் சொல்லப்படுவதுதான் உயர்ந்தது என்றோ, உரைநடையில் சொல்லப்படுவது தாழ்ந்தது என்பதோ கிடையாது. இரண்டிலும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களின் அறிவு, ஞானம்தான் சொல்லப்படுகிறது. 

எல்லாக் காலத்திலும் படைப்பு எழுத்தாளர் தங்களின் படைப்புகளை அச்சில் கொண்டு வர, விநியோகம் செய்ய சிரமப்பட்டிருக்கிறார். சில நேரங்களில் மனம் கசிந்து சொந்தமாக வெளியிட்டு நஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக உள்ளது என்று கருதப்பட்ட போது போலீஸால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புத்தகம் என்பது கருப்பாக்கப்பட்ட காகிதங்கள் இல்லை. அவை வாசகர்களோடு பேசக்கூடியவை. உணர்ச்சியும், எழுச்சியும், அளவற்ற மகிழ்ச்சியும் அளிக்கக்கூடியவை. அரசியல் தலைவர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு மாற்றுக் கருத்து பிடிப்பதில்லை. எனவே புதியவரவை எதிர்த்து புத்தகங்களை பறிமுதல் செய்கிறார்கள். தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சனாதனவாதிகள் நவீன படைப்புகள் ஆபாசமாக இருக்கின்றன அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எனவே தான் புதிதாக எழுதிக் கொண்டு வருகிற படைப்பாளர்கள் மீது பத்திரிகையாசிரியர்கள், பதிப்பாளர்கள் உள்ளே என்ன இருக்கிறதோ என்று பயப்படுகிறார்கள். எனவே தான் எழுத்தாளர்கள் சொந்தப் பத்திரிகைகள் ஆரம்பிக்கிறார்கள். சொந்த பதிப்பகம் ஏற்படுத்துகிறார்கள். அது முடியாமல் போனவர்கள் இன்னொருவர் சிபாரிசு பிடித்துக்கொண்டு பிரசுரத்திற்கு முயற்சி செய்கிறார்கள். முன்னுரைகள் வாங்கி வாங்கிக் கொண்டு போகிறார்கள். பலருக்கு அது பலிப்பதில்லை. சிலருக்குப் பலித்து புத்தகம் வந்து விடுகிறது.

தமிழ் நாவலாசிரியர் நீல-பத்மநாபன் தன் முதல் நாவலான "தலைமுறைகள்'- கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு பதிப்பகங்கள் தோறும் சென்று வந்ததைப் பற்றி மனம் கசிந்து எழுதியுள்ளார். மும்பையில் பணியாற்றிய போது தான் எழுதிய "தலைகீழ் விகிதங்கள்' நாவலோடு தமிழ்ப் பதிப்பாளர்களைத் தேடி அலைந்து திரிந்ததை ஒரு கதை போலவே எழுதியிருக்கிறார். ஜெயமோகன் "விஷ்ணுபுரம்' நாவலை வெளியிட பதிப்பாளர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தது பற்றியே ஒரு நாவல் எழுதிவிடலாம்.

ஒரு நாவல், சிறுகதைத் தொகுப்பின் பிரசுரம் என்பது ஒரு நாட்டிற்கோ, ஒரு மொழிக்கோ  உரியது இல்லை. எல்லா நாட்டிற்கும் பொதுவானது தான். மகத்தான நவீன படைப்பென கொண்டாடப்படும் ஜார்ஜ் ஆர்வெல் "விலங்குப் பண்ணை' நாவலை வெளியிடப் பல பதிப்பகங்கள் வெளியிட முன்வரவில்லை.
இம்மாதிரியான குழந்தை கதைகள் எல்லாம் விற்பனை ஆகாது என்று ஒரு பதிப்பாளர் எழுதினார்.  ஆனால் எல்லாப் பதிப்பாளர்களும் ஒன்றில்லை. சிலர் ஒரு புதிய படைப்பைக் கண்டுகொண்டு பிரசுரிக்கிறார்கள். அதுவே பல படைப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. ஒரு படைப்பு வெளிவந்த பின்னர் அதன் இருப்பு பற்றி விமர்சனங்கள் வருகின்றன. உயிர் உள்ள படைப்பு ஜீவிக்கிறது. அது தான் சரித்திரம்.

1965-ஆம் ஆண்டில் சென்னையில் கூவம் ஆற்றின் கரையில் வசித்துக்கொண்டு "சாயாவனம்' எழுதினேன். சாயாவனம் பூம்புகார் என்னும் காவேரிப்பூம்பட்டினத்திற்கு முன்னால் இருக்கும் சிற்றூர். காடு போன்ற வனம் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வாழும் காவேரிக்கரை ஊர். 

கணவனை இழந்த ஒரு தமிழச்சி, பத்துப் பன்னிரெண்டு வயதான தன் மகனை அழைத்துக் கொண்டு நல்வாழ்வைத் தேடி இலங்கைக்குச் செல்கிறாள். சில ஆண்டுகளில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துகிள்ளிய அவள் இறந்து போகிறாள். அவளது மகன் கொழும்புக்கு வருகிறான். கிறிஸ்துவனாக மதம் மாற்றப்படுகிறான். வாலிப வயதில் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்து செல்கிறான். அனுபவமும், பணமும் சம்பாதித்துக்கொண்டு சாயாவனம் வருகிறான்.  உறவினர்களைக் கண்டு பிடிக்கிறான்.

சாயாவனத்தை வாங்கி கரும்பாலை ஏற்படுத்த முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் ஊர் பலவிதமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது. சுற்றுப்புறச் சூழல் மாற்றம் அடைகிறது. நெற்பயிர் இட்ட வயல்களில் பணப்பயிராக கரும்பு விளைவிக்கப்படுகிறது.

சாயாவனம் என் முதல் நாவல். அதனை எழுதி முடிக்கும் போது இருபத்தைந்து வயதாகி இருந்தது. நாவல் 230 பக்கங்கள் கொண்டது. சாயாவனம் எங்கு முடிகிறதோ அங்கிருந்து தான் தொடங்குகிறது. அது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு உகந்த கதை இல்லை. அதன் வாசர்களுக்கும் பிடித்தமானது இல்லையென்று எனக்கே பட்டது. அப்புறம் பதிப்பகங்களைத் தேடிக் கொண்டு போகவில்லை. மூன்றாண்டுகள் சென்றன. 

திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,  தீரர் சத்தியமூர்த்தியின் மகள். சுதந்திரப் போராட்ட வீரர். கலை, இலக்கியம், இசை, நாட்டியத்தில் மீது ஈடுபாடு கொண்டவர். அவரது கணவர் கே.கிருஷ்ணமூர்த்தி புத்தகப்பிரியர். ஆங்கிலப் புத்தகங்கள் அதிகமாகவும் தமிழ்ப் புத்தகங்கள் குறைவாகவும் படிக்கிறவர். அவர் வெளிநாடுகளில் இருந்து தரமான ஆங்கிலப் புத்தகங்கள் பத்திரிகைகளை வரவழைத்து புத்தக கிளப் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். அதோடு பெரிய நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும், புத்தகங்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தார். 

தன் கணவர் செயற்பாட்டைக் கவனித்து வந்த லட்சுமி அதனைத் தமிழ்மொழி, தமிழ்மக்கள் ரசனை மீது திருப்ப எண்ணங்கொண்டார். அதற்காக "வாசகம் வட்டம்' என்ற பதிப்பகத்தை 1964-ஆம் ஆண்டில் தொடங்கினார். ஆண்டிற்கு நான்கு புத்தகங்கள். உயர்தரமான காகிதம், பிழையற்ற அச்சு, குன்றாத-குறை சொல்ல முடியாத தரம் என்பதை குறிக்கோளாகக் கொண்டார்.   

ராஜாஜியின் "சோக்ரதர்' டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆங்கில நூலாகிய "வாழ்க்கை இந்து மத நோக்கு',  வ.ரா  எழுதிய "வாசகம்',  புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பாக "அக்கரை இலக்கியம்',  சிறப்பு வெளியீடாக சிட்டி. தி. ஜானகிராமன் சேர்ந்து எழுதிய "நடந்தாய் வாழி காவேரி' -எல்லாம் வெளியிட்டார்.

தமிழின் நவீன படைப்பிலக்கியத்தின் மீது லட்சுமி கிருஷ்ணமூர்த்திக்கு அதிகமாக ஆர்வம் இருந்தது. சில தரமான படைப்பு எழுத்தாளர்கள் வாரவாரம் தொடர்கதைகள் எழுதி கட்டுக்கோப்பையும், வளத்தையும் இழந்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாவலை மொத்தமாக எழுத வாய்ப்புக் கொடுத்தால் மேலான தரத்தில் எழுதுவார்கள் என்று கருதினார். அதனால் தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், ஜெயகாந்தன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முகசுந்தரத்தை எல்லாம் கேட்டுக்கொண்டார். தொடர்கதைகள் எழுதிப் பழக்கப்பட்டவர்களுக்கு முழு நாவலை எழுதி முடித்துக் கொடுப்பது சிரமமாக இருந்தது. சிலர் வெகு தாமதமாக எழுதிக் கொடுத்தார்கள். ஜெயகாந்தன் கடைசி வரையில் எழுதவே இல்லை. 

புதிய எழுத்தாளர்கள் படைப்புகளை வெளியிடலாம் என்று அவருக்குப் பட்டது. ஆறு புதிய எழுத்தாளர்கள் குறுநாவல்கள் கொண்ட தொகுப்பிற்கு "அறுசுவை' என்ற பெயரில் வெளியிட்டார். அறுசுவையில் அசோகமித்திரன், ம. இராஜராம் எல்லாம் இடம் பெற்றிருந்தார்கள். அதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் புதிய எழுத்தாளர்களிடம் நல்ல, தரமான நாவல் இருந்தால் வாசகர் வட்டத்திற்கு அனுப்பச் சொல்லுங்கள். பத்திரிகைகளில் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும். வாசகம் வட்டம் படித்துப் பார்த்து தரமானது என்று பட்டால் வெளியிடும் என்று சொல்லியிருக்கிறார்.

சாயாவனம் நாவல் என் கைவசம் இருப்பது நண்பர் இராஜாராமுக்குத் தெரியும். அவர் என்னிடம் வாசகர் வட்டத்திற்கு அனுப்பி வைக்கும்படி யோசனையும் கூறினார். மூன்றாண்டுகளாகக் கட்டி வைத்து இருக்கும் பிரதியை எடுத்துப் படித்து பார்த்தேன். மெருகு குலையாமல் இருப்பது தெரிந்தது. இங்கும் அங்குமாக சில திருத்தங்கள் செய்தேன். நாவலை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வாசகர் வட்டத்திற்குச் சென்றேன்.

"வாசகர் வட்டம்' லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்தது. மேனேஜராக "குண்டூசி' கோபால் இருந்தார். அவர் "குண்டூசி' என்ற சினிமா பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரிடம் சாயாவனம் கையெழுத்து பிரதியைக் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். ""அம்மா கொடைக்கானல் போயிருக்கிறார்கள். வர மூன்று மாதங்கள் ஆகும். அவர் வந்து தான் படித்து முடிவெடுப்பார்'' என்றார். 
""சரி'' என்று சொல்லிவிட்டெழுந்தேன்.

""அம்மா வந்ததும் நாவலைப் படித்துவிட்டு கடிதம் போடுவார்கள்'' என்று என்னை வழியனுப்பி வைத்தார். ஆறு மாதங்கள் சென்றன. 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயர் நூலகத்தில் ஒர் இலக்கிய நிகழ்ச்சி. காலையில் நான் உரையாற்றினேன். மாலையில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசினார். நிகழ்ச்சி முடிந்தது. புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் வந்து ""லட்சுமி கிருஷ்ணமூர்த்தி உங்களைப் பார்க்க வேண்டுமென்றார்'' என்று சொன்னார். நான் முன்னே சென்றேன். அவரை எனக்குத் தெரியும்,  அவருக்கு என்னைத் தெரியாது.
""கந்தசாமி'' என்று அவர் முன்னே நின்று கரம் குவித்து வணக்கம் தெரிவித்தேன்.

அவர் என்னிடம் நலன் விசாரித்தார். பிறகு ""சாயாவனம் நாவலை வெளியிடுவதாகத் தற்காலிகமாக முடிவு செய்து இருக்கிறோம். நாவல் நன்றாக வந்து இருக்கிறது. இறுதி முடிவை இரண்டு மூன்று மாதங்களில் தெரிவிக்கிறோம்'' என்றார். 

நான் மறுபடியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.

1968-ஆம் ஆண்டில் சாயாவனம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடாக வந்தது. கலாசாகரம் ராஜகோபால் கோட்டோலியம் முகப்பில் வெளிர் பச்சை நிறத்தில் இடம் பெற்றது. அவர் தன் இல்லத்தில் வெளீயிட்டு விழாவை நடத்தினார். அதில் மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ்.ராமையா, ந. பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். சிலர் இலக்கியம் பற்றியும், நாவல், சிறுகதைகள் லட்சணம் பற்றியும் உரையாற்றினார்கள். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி ஒரு காசோலை வழங்கினார். எழுத்தாளர்-பதிப்பாளர் ஒப்பந்தப் பத்திரத்தில் குண்டூசி கோபால் கையெழுத்து வாங்கிக் கொண்டார். மனம் நிறைந்தது.

(தொடரும்)

சாயாவனம்

அவன் மேலே பார்த்தான். ஆகாயமே தெரியவில்லை. பச்சைப் பசுந்தழைகளால் மூடப்பட்டிருந்தது. வானமே வனமாகிவிட்டது போல ஒரு காட்சி. மேலும் கீழும் பச்சை. திசையெங்கும் பச்சை. இயற்கையின் செளந்தர்யம் மிகுந்த வனத்திற்குள் அவன் மெல்ல மெல்லப் பிரவேசித்துக் கொண்டிருந்தான்.

பூவரசு மரத்தை மூடி மறைத்துக் கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருந்தது. அநேகமாக பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப்பூக்களுக்கிடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான செடிகள் நெட்டிலிங்க மரத்தில் குறிஞ்சிக்கொடி உச்சி வரையில் சென்றிருந்தது.

-சாயாவனம் நூலிலிருந்து ஒரு பகுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.