முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அழகிய மாநிலத்தில் ஆதி தமிழர்கள்

மிசோரமில்  ஆதி  தமிழர்கள் மிகுந்த பண்பாட்டோடு, பெரும் வசதிகளோடு வாழ்ந்து வந்துள்ளதாகத் தொல்லியல் ஆராய்ச்சியில்  தற்போது தெரிய வந்துள்ளது. 

Updated On : 11 மார்ச், 2019 at 5:32 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:51 PM

மிசோரமில்  ஆதி  தமிழர்கள் மிகுந்த பண்பாட்டோடு, பெரும் வசதிகளோடு வாழ்ந்து வந்துள்ளதாகத் தொல்லியல் ஆராய்ச்சியில்  தற்போது தெரிய வந்துள்ளது. 
மிசோரம் மக்களின்  வரலாற்றை ஆராய்ந்தால் அவர்கள் ஆதி தமிழர்களாக இருப்பார்களோ அல்லது ஆதி தமிழர்களுடன் உறவில் இருந்திருப்பார்களோ? என்று ஆய்வு நடந்துள்ளது. எங்கே ஆய்வு நடந்தாலும், அங்குள்ள பொருள்களையும் எடுத்து வரலாற்றைக் காண்பதுதான் வழக்கம்.  சரி, எப்படி இந்தத் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம்?
மிசோரம் இயற்கை வரைந்த ஓவியமாய்ப் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்
பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் சிறப்பான அடையாளங்களாகும். அவைகளின்  ஊடே புதைந்துள்ள வரலாற்றையும், மிசோரமின் அழகையும் கண்டிப்பாகப் புரட்டிப் பார்க்க பட வேண்டியது அவசியமாகும். 
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பிரம்மாண்ட புவியியல் அமைப்பில் இந்த வடகிழக்கிந்திய மாநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி அவை மற்ற இந்தியப் பகுதிகளுடன் இணைந்திருந்தாலும், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் இருப்பவை போலவே  உள்ளன. இயற்கை இன்னும் அங்கே மனிதர்கள் கையில் சிக்காமல் உள்ளது தான் முக்கிய அம்சம்.
தற்போதைய மிசோராமில்  மக்கள் நுழைவதற்கு முன் இருந்தவர்கள் ஆதி குடிகள்  என அழைக்கப்பட்டனர். குடியேறியவர்களில் இரண்டாவது தொகுதியினர் புதிய குகி என்று அழைக்கப்பட்டனர். மிசோரமில் பழங்குடியினரில் லுஷாய் மலைகளில் வந்து கடைசியாக கலந்தவர்கள் லுஷெய்ஸ் பழங்குடியினர் ஆவர். அச்சமயத்தில் எல்லையோரமாக இருந்த டியு ஆற்றைக் கடந்து வந்தவர்கள் ஏராளம். 
இவர்கள் தங்களை திறமையுள்ள மற்றும் உறுதியான தலைவர்களாக நிரூபித்தனர். கிராமப்புற நிர்வாகத்தை பாரம்பரிய முறையில் சிறப்பாகச் செய்தனர். கிராமத்தின் தலைவர் அல்லது லால் எனப்படுபவர் சாகுபடிக்கு நிலங்களை ஒதுக்கி, கிராமங்களில் உள்ள அனைத்து சச்சரவுகளையும் தீர்ப்பவராக, ஏழைகளிடம் அக்கறை காட்டுபவராக, புகலிடம் கோருவோருக்குத்  தங்குமிடம் வழங்குபவராக இருந்தார்.   கிராமத்தின் தலைவரும் சகல வசதிகளோடு வாழ்ந்துள்ளார். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் மிசோரம் வரலாற்றில் பல பழங்குடித் தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் முயற்சிகளில் இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது வேதனைக்குரியது. 
மேலும் நாகலாந்து  நாகர்கள்  எனப்படுபவர்கள் தமிழர்களுடன் நீண்ட நெடிய காலம் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். தமிழரின் தொன்மைக்குச் சான்றான சிலப்பதிகாரம் கூட நாகர்களை பற்றிச்  சொல்லியிருக்கிறது. ஒரு காலத்தில் நாகர்கள்தான் மிசோரம் உள்ளிட்டப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இப்போது அவை நாகாலாந்து என்று குறுகிவிட்டதாக வரலாற்றுத்  தகவல்கள் இருக்கின்றன.
சிந்து சமவெளி மற்றும் கீழடி மாதிரியான தொல்லியல் ஆய்வு இங்கும் நடைபெற்றது. அதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு மிகவும் மேம்பட்ட பண்பாட்டைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை சிந்து சமவெளி, கீழடி மாதிரியான இடங்களை பகுதி அளவு ஒத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் தமிழர்களாக இருந்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
ஆனாலும் சிந்து சமவெளி மற்றும் கீழடி ஆய்வுகளின் மூலம் இரு பகுதி மக்களும் ஒத்த குணமுடையவர்கள் அல்லது ஒரே வகையான வாழ்வியல் முறைகளைக் கொண்டிருப்பது  அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.