ஞாயிறு கொண்டாட்டம்

கப்பல் பைலட்டான சென்னைப் பெண்!

ஆண்களுக்கு நிகராக இன்று பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் இந்தியாவின் முதல் கடல் பைலட் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சென்னையை சேர்ந்த ரேஷ்மா நிலோபர்.

வனராஜன்

ஆண்களுக்கு நிகராக இன்று பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் இந்தியாவின் முதல் கடல் பைலட் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சென்னையை சேர்ந்த ரேஷ்மா நிலோபர். தற்போது உலகம் முழுவதும் கப்பலில் சுற்றி வருகிறார். 

கடல் சார் தொழில்நுட்பத்துறையில் பொறியியல் துறையில் ஆறரை ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்று கடல் மாலுமியாகப் பணியாற்ற துவங்கி உள்ளார்  ரேஷ்மா.  ஆணாதிக்கம் உள்ள கப்பல் துறையில் ஒரு பெண்ணாக ரேஷ்மா நிலோபரின் அனுபவங்கள் பற்றிக் கேட்ட போது விரிவாகப் பேசுகிறார்:

""நான் மிடில் கிளாஸ் பொண்ணு. அப்பாவுக்கு மத்திய அரசில் வேலை. அண்ணா நகரில் சிறிய வீட்டில் வசித்தவள்.  மற்ற பெண்களைப் போல் ஏதோ ஒரு படிப்பை படித்துக் கஷ்டமில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.  கடும் போட்டிக்கு மத்தியில் திறனாய்வு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தான் கடல் தொழில்நுட்ப பொறியியல் துறைக்குச் சென்றேன். என்னுடைய விருப்பதிற்கு என் குடும்பம் துணையாக இருந்தது. கடல் சார் பொறியியல் படிக்கும் போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பெண்களின் எண்ணிக்கை இருந்தது.  

படிப்பை முடித்தவுடன் கொல்கத்தா துறைமுகத்தில் ஜுனியர் அதிகாரிகளைப் பணிக்கு சேர்த்தார்கள். அங்குப் பணியில் சேர்ந்தேன். ஒரு பெண் நடுக்கடலில் கப்பல் இயக்குவது சாதாரண விஷயமில்லை. கடற்படை மாணவியானேன். கடுமையான பயிற்சிகள் எனக்கு மனத் தைரியத்தை உண்டாக்கின. சிறிய அளவிலான கப்பல்களை நானே இயக்கினேன். நடுக்கடலில் நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டேன். நான் கடந்து வந்த பாதை,  ரோஜா பூக்கள் நிறைந்தது அல்ல. முட்செடிகளால் ஆனது.

ஏதோ ஒரு ஆர்வ கோளாறினால் இந்தத்துறைக்கு வந்ததாக நினைத்தனர் என்னுடன் பணியாற்றும் சக ஆண்கள். ஆனால் ஆண்-பெண் வித்தியாசத்தை உடைத்துக் காட்டுவதற்கு எனக்கு பல நாட்கள் பிடித்தது. இப்போது தான் அவர்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்ணாகப் பார்க்கிறார்கள்.  
180 மீட்டர் நீளம் கொண்ட சீன கப்பல் ஒன்றை வழி நடத்தும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட போது அந்தக் கப்பல் கேப்டன், ஒரு சின்னப் பெண்ணை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். நான் சொன்னேன். "ஒரு முறை கொடுத்துப் பாருங்கள். என்னுடைய தகுதியை நிரூபிக்க நீங்கள் உதவ வேண்டும்' என்றேன்.

ஆழ்கடலில் அபாயகரமான வளைவுகள், பாறைகள் உள்ள பகுதியில் கூட நான் கப்பலை கொண்டு சென்ற விதத்தைப் பார்த்த சீன கப்பல் கேப்டன் என்னைப் பாராட்டி தட்டிக் கொடுத்தார். இந்தக் கப்பல் பயணத்தில்" நீ செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. மன தைரியத்தை மட்டும் இழந்துவிடாதே' என்றார். பல அனுபவசாலிகளை சந்தித்து நான் பெற்ற அனுபவம் இன்று பெரிய பெரிய கப்பல்களை இயக்கி, அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைவதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். 

என்னுடைய தோழிகள் போல் நான் ஐ.டி துறையைத் தேர்ந்தெடுத்து இருந்தால், இத்தனை சவால்களைச் சந்தித்து இருக்க முடியாது. சிறந்த கடல் பைலட் என்று இந்திய ஜனாதிபதி கையால் பரிசுகளை வாங்கி இருக்க முடியாது.'' 

ஆழ்கடலில் கப்பல் இயக்கும் அனுபவம் எப்படி?

இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கடலில் பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு. கடலில் புயல் எப்போது  வரும் என்று சொல்ல முடியாது. மேலும் கடலில் எப்போது என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று யூகிப்பது கடினம். ஆனால் கப்பலை பாதுகப்பான முறையில் நமக்குக் கொடுக்கப்பட்ட துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அந்தச் சவாலான பணியைத் திறம்படச் செய்து முடிப்பது தான் கடல் பைலட்டின் வேலை. சவாலை ஜாலியாக எடுத்துக்கொள்வேன். கஷ்டம் வரும் போது என் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பேன். தைரியம் தானாக வந்துவிடும் என்று சொல்லும் ரேஷ்மாவுக்கு நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் போல் சேலை அணிவது மிகவும் பிடிக்குமாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT