முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தொடரும் நடிகைகளின் வாரிசுகள்

சிவாஜி - பிரபு - விக்ரம்பிரபு, டி.ராஜேந்தர் - சிம்பு, பாக்கியராஜ் - சாந்தனு, சிவகுமார் - சூர்யா, கார்த்தி, ஏன், விஜயகாந்த் மகன் பிரபாகரன் என்று தலைமுறை தலைமுறையாக நடிகர்களின் மகன் பின்னாளில் நடிகராவது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


சிவாஜி - பிரபு - விக்ரம்பிரபு, டி.ராஜேந்தர் - சிம்பு, பாக்கியராஜ் - சாந்தனு, சிவகுமார் - சூர்யா, கார்த்தி, ஏன், விஜயகாந்த் மகன் பிரபாகரன் என்று தலைமுறை தலைமுறையாக நடிகர்களின் மகன் பின்னாளில் நடிகராவது  நடந்து வருகிறது. இந்த ஃபார்முலா நடிகைகளுக்கு நடப்பது அரிதினும் அரிது. அவ்வாறு ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளின் மகள் யாரெல்லாம் பின்னாளில் நடிகையாக மாறியிருக்கிறார்கள்...

இதோ சின்ன மீள் பார்வை..

மேனகா - கீர்த்திசுரேஷ்

மலையாலத்திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகை மேனகா இதுவரை 116 படங்களில் நடித்திருக்கிறார்.   தவிர, தமிழிலும் ரஜினிக்கு ஜோடியாக "நெற்றிக்கண்", விஜயகாந்த் ஜோடியாக "ஓம் சக்தி', "தூக்குமேடை', "நிஜங்கள்' என பல படங்களில் நடித்திருக்கிறார்.  இதுவரை 10 படங்களைத் தயாரித்தும் விட்டார். இவரின் மகள் தான்  கீர்த்திசுரேஷ். 

கீர்த்திசுரேஷூக்கு எட்டு வயதிருக்குபோதே, திரைத்துறைக்கு வர வீட்டில் க்ரீன்சிக்னல் கிடைத்தது. இயக்குநர் ப்ரியதர்ஷனும், கீர்த்தியின் தந்தை சுரேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், தான் மலையாளத்தில் இயக்கிய, கீதாஞ்சலி (தமிழில் சாருலதா) படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படி உரிமையுடன் அழைத்தார் ப்ரியன். அங்கிருந்து ப்ரியதர்ஷனின் சிஷ்யர் ஏ.எல்.விஜய் தமிழில் விக்ரம்பிரபுவுடன் "இது என்ன மாயம்' படத்தில் நடிக்க அழைத்துவந்தார். அறிமுகப்படம் அமோகமாக இல்லை என்றாலும், 

"ரஜினிமுருகன்' படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தார். அந்த ஹிட் ராசியால் இப்போது விஜய் ஜோடியாக "பைரவா',

சிவகார்த்தியேகனுடன் "ரெமோ' படங்கள் இவரைப் பளீச் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது இவரின் மைல் கல் சாதனை. 

பூர்ணிமா - சரண்யா

பூர்ணிமா. அழகு, அடக்கம், நடிப்பு என்று இவரின் பட்டியல் எப்போதுமே எகிறியிருக்கும்.  மோகனுடன் "பயணங்கள் முடிவதில்லை', பாக்யராஜ் இயக்கி நடித்த "டார்லிங் டார்லிங் டார்லிங்' படங்கள் இவரின் வெற்றி பாதைக்கு சாட்சி. நிஜ வாழ்க்கையிலும்  பாக்கியராஜூடன் ஜோடியான பின் நல்ல குடும்பத்தலைவி, பொறுப்பான தாய் என இல்லற வாழ்வில் மூழ்கினார்.  "சித்து  2' படத்தின் மூலம் சாந்தனு அறிமுகமாகி, இன்று வரையிலும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. பூர்ணிமாவின் மகள் சரண்யாவை நினைவிருக்கிறதா...   2006-இல் தந்தை பாக்கியராஜ் இயக்கத்தில் மகள் சரண்யா நடித்த படம் "பாரிஜாதம்'. பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் "உன்னை  கண்டேனே முதல் முறை' பாடல் வைரல் ஹிட். அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலுடன் "போட்டோகிராஃபர்' படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். அதன் பின் நடிப்பில் ஆர்வம் குறைந்து விலகிவிட்டார். ஆனால், பூர்ணிமா 2013-இல் "ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.  தொடர்ந்து "ஜில்லா'வில் விஜய்க்கு அம்மாவாக அசத்தியவர், தற்போது  "வாய்மை' வரையிலும்  நடிப்பை தொடர்கிறார்.

ராதா - கார்த்திகா - துளசி

80-களில் சினிமா பிரியர்களாக இருந்தவர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் மேரி. "அலைகள் ஓய்வதில்லை' படத்தையும் மேரியையும் நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை 1981-ஆம் ஆண்டு தொடங்கி 1991-வரை இவர் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப் பட்டியலில் இருக்கின்றன.

"அலைகள் ஓய்வதில்லை' ஹிட்டைத் தொடர்ந்து கார்த்திக் - ராதா கூட்டணியில் அடுத்தடுத்து ஏழு படங்கள் வெற்றி பெற்றது. தெலுங்கில் இவர் நடித்த 27 படங்களில் 16 படங்களில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தார். இப்போது இவரின் இரண்டு பெண்களும் நடிக்க திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார்கள்.  தமிழில் ஜீவாவுடன் "கோ' படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா.  இப்படத்தின் ஹிட்டை அடுத்தடுத்த படங்களில் தக்கவைக்க தவறினாலும், வருடத்திற்கு ஒரு படமாவது கொடுத்துவிடுகிறார்.  கடந்தவருடம் "புறம்போக்கு' ரிலீஸானது. இந்த வருடம் அருண்விஜய்யுடன் "வா டீல்' ரிலீஸþக்கு வருகிறது. 

துளசிக்கு மணிரத்னத்தின் "கடல்' மூலம் வாய்ப்பு அமைந்தது. துளசியும், கௌதம் கார்த்திக்கும் அறிமுகமான படம் "கடல்'. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து ஜீவாவுடன்  துளசியின் இரண்டாவது படம் "யான்'. அத்துடன் திரையுலகிற்கு டாடா காட்டிவிட்டார் துளசி. 

சரிகா - ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன்

கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா. திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் கமல்ஹாசனின்  வாழ்வில் மிக முக்கியமானவர். டெல்லிப்பொண்ணு, நான்கு வயதிலேயே நடிக்கத்தொடங்கியவர். சமீபமாக ஹிந்தியில் வெளியான "பார் பார் தேக்கோ' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன் இரண்டு பெண்களையும் சுதந்திரமாக திரையுலகில் வலம்வர அனுமதித்தார். 

ஸ்ருதிக்கு பாடுவதிலும், அக்ஷராவிற்கு நடனத்திலும் ஆர்வம் அதிகம். ஃபிலிம்பேரில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை ஸ்ருதி "7ம் அறிவு' படத்திற்காக 2011-ஆம் ஆண்டு பெற்றார் . திரையுலகை வரவேற்ற ஸ்ருதி, இப்போது தென்னிந்தியாவின் டாப் நடிகர்களுடன் நாயகியாக வலம்வருகிறார். "புலி', "வேதாளம்' என்று அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்துவிட்ட  ஸ்ருதிக்கு அடுத்ததாக தெலுங்கில் "பிரேமம்", பவன் கல்யாண் நடிக்கும் படம்,  தமிழிலில் "சிங்கம் 3" என்று முன்னணி நடிகர்களின் படங்கள்தான். ஹிந்தியில்  ஒரே படம் “ஷமிதாப்”... பாலிவுட், கோலிவுட் ரசிகர்களை ஈர்த்தவர். நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அக்ஷரா. அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், தந்தை கமலின் "சபாஷ் நாயுடு' படத்தில்  உதவி இயக்குநர்.

லட்சுமி - ஐஸ்வர்யா

கலைக்குடும்பத்திலிருந்து, திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை லட்சுமி. கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகையாக இருந்த குமாரி ருக்மினியின் மகள். இவரின் தந்தை   தெலுங்கில் மிகப்பெரிய இயக்குநர். லட்சுமி நடித்த எல்லாப் படங்களுமே சிக்ஸர் தான். "சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். நடிகையாக,  குணச்சித்திர நடிகையாக என்று எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்தவர்.  இவரின் மகள் ஐஸ்வர்யா பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த "மீரா' படம் மட்டுமே பேசப்பட்டது.  ஹீரோயினாக நடிப்புலகில் கால்பதித்தவர் அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடிப்பில் தன்னை நிரூபித்தவர். சூர்யாவின் "ஆறு "படத்தில் சவுண்ட் சரோஜாவாக ரகளை செய்தார். பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி அதைத் தொடர்ந்தும் வருகிறார்.

மஞ்சுளா - ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா

நடிகர் விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளா  100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  விஜயகுமார், மஞ்சுளா, ஸ்ரீதேவி, அருண்விஜய், ப்ரீத்தா என்று ஒட்டு மொத்த குடும்பமும் சினிமாவில் தான். 80-களில் நடிகையாக வலம் வந்த மஞ்சுளாவின் மூன்று மகள்களுமே நடிப்பில் இறங்கினார்கள். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்று மூவருமே நடிகையாகத் தோன்றி ஐந்திலிருந்து பத்துப் படங்கள் வரை நடித்திருப்பார்கள். கொஞ்ச வருடம் நடிப்பு, அத்துடன் கல்யாணம், தனிப்பட்ட வாழ்க்கை என்று அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டார்கள்.  மூவரில் ஸ்ரீதேவி மட்டுமே கொஞ்சம் பேசப்பட்டார். தனுஷுடன் "தேவதையை கண்டேன்', மாதவனுடன் "பிரியமான தோழி' என்று வெளிச்சத்துக்கு வந்தவர் பிறகு குடும்ப வாழ்க்கைக்குச் சென்று விட்டார்.
- ஜி. அசோக்

முழு கட்டுரையைப் படிக்க →