முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நோய் எதிர்ப்பு சக்தி உள்ளே வியாதிகள் வெளியே

யோகா பயிற்றுநர் கவிதா மோகன் கின்னஸ் ரெக்கார்டு சாதனையாளர். கனடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், 2014-ஆம் ஆண்டு யோகா கலைமாமணி விருது பெற்றவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


யோகா பயிற்றுநர் கவிதா மோகன் கின்னஸ் ரெக்கார்டு சாதனையாளர். கனடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், 2014-ஆம் ஆண்டு யோகா கலைமாமணி விருது பெற்றவர். தற்போது தொட்டில் யோகா பற்றி அவர் எழுதிய புத்தகம் வெளியாக உள்ளது. கரோனா நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அண்ணா நகரில் இவரது யோகா மையம் உள்ளது.  பிராணாயாமம் குறித்துப் பயிற்சிகளுடன் இங்கே விளக்குகிறார். படத்தில் இருப்பதும் அவரேதான்: 

நம் நுரையீரலில் ஆக்சிஜனை நிரப்புவதும், உடல் கழிவுகளை வெளியேற்றுவதுமே ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஐந்து பயிற்சிகள்:

நம் மனதையும், உடலையும் சரியாக வைத்துக் கொள்வதற்கு யோகா அற்புத மருந்தாகும். யோகா பயிற்சியில் பிராணாயாமம் என்பது ஒரு முக்கியப் பகுதி. பிராணாயாமத்தைத் தினசரி செய்வதன் மூலம் உடலின் அனைத்து மண்டலங்களும் புத்துயிர் பெறுவதோடு, நம் மனதை அமைதிப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, ஆற்றலை மேம்படுத்தி, நுரையீரலை விரிவடையச் செய்து, மார்பு தசைகளைத் தளர்த்தி சுவாசத் தசைகளின் வலிமை அதிகரிக்கிறது. 

நம்முடைய தோள், மார்பு மற்றும் வயிற்றுத் தசைகளை வலு பெறச் செய்வது நம்முடைய சுவாசமே. பிராணாயாமம் என்கிற சுவாசப் பயிற்சியினால் நுரையீரல் திசுக்கள் விரிவடைகிறது.

யோகா செய்வதினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எண்ணற்றவை. உடலின் ஒவ்வொரு உறுப்பும் புத்துணர்வுப் பெறுவதோடு, தனிப்பட்ட இரத்த ஓட்டத்தைச் செயல்படுத்துகிறது. எலும்புகள் வலுபெறுகிறது. உடல் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருப்பதைக் காணலாம். இருதய சம்பந்தமான உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கிறது. சுவாசப் பயிற்சியினால் நம் நுரையீரலுக்குத் தேவையான உயிர்த்தன்மையுள்ள ஆக்சிஜன் கிடைக்கப் பெறுகிறது. அதன் தொடர்ச்சி நிலையாக நாடித்துடிப்பை சமமாக வைத்து, மொத்தத்தில் நம் உடல் முழுவதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

பிராணாயாமம் தினசரி தொடர்ந்து செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். காற்றோட்டம் தடைபட்ட நுரையீரலுக்குக் காற்றோட்டத்தையும், ரத்த ஒட்டத்தையும் அதிகரிக்கச் செய்து சுவாசப் பாதையைச் சீராக்கும். சுவாச மண்டல தசைகளுக்கு வலிமைச் சேர்க்கும்.

சூரிய பேதனா

நிலைகள்

 இடது நாசியை சுண்டுவிரல் மற்றும் மோதிர விரலால் 
மூடிக் கொள்ளவும்.
 வலது நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.

பயன்கள்

மூளையைத் தூண்டுவது. 
உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வதால் சளி, காய்ச்சல் இருக்கும் 
சமயத்தில் செய்வது நன்மை அளிக்கும்.

சிவலிங்க முத்ர பிராணாயாமம்

நிலைகள்

 இடது கை கட்டை விரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடித்து 
உள்புறம் வைத்துக் கொள்ள வேண்டும். 
 வலது உள்ளங்கையின் மேல் இடது கையை வைக்க வேண்டும். 
இன்னொரு முறை கையை மாற்றி வைத்து செய்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.

பயன்கள்

இந்த வகை, ஆண் மற்றும் பெண் என்ற இரு வேறு ஆற்றல்களையும் குறிப்பிடுவதாகும். 
ஆற்றல் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் சமமாக இருக்கும்.ஆற்றல்கள் சமநிலையை அடையும் போது, உடலும் மனமும் சமநிலை  அடையும்.
உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும் போது, இருமல், கபம், வெளியே அகற்றப்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
வெப்ப நிலை அதிகரிப்பதால், ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். 
இந்தப் பயிற்சியைச் செய்வதால் உடலுக்கும்,மனதிற்கும் உடனடியாக 
ஆற்றல் கிடைக்கும்.தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

சுவாசப் பயிற்சிகளை செய்வதற்கு முன்


பத்மாசனத்திலோ அல்லது சுகாசனத்திலோ உட்காரவும். கீழே உட்கார இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டே இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். 

கண்களை மூடிக் கொண்டு அனைத்து சுவாசப் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இதய நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் செய்வது நல்லது.


தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் ஒவ்வொரு பயிற்சியையும் 5 நிமிடம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.


பஸ்திரிகா

நிலைகள்

1.உள்ளங்கையைத் திறந்து வைத்து கையை நன்கு மேலே உயர்த்திக் கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். 
ஆற்றல் நம் உடலின் உள்ளே செல்வதை நன்கு உணரலாம்.
2. விரல்களை மூடி, கையைக் கீழே இறக்கிக் கொண்டு- சுவாசத்தை வெளியேற்றவும். எதிர்மறை ஆற்றல் வெளியேறுவதை நன்கு உணரலாம்.
3. 25 முதல் 40 முறை செய்யவும்.


பயன்கள்

மூளைக்கு இரத்தம் பாய்வதோடு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும். 
நரம்பு மண்டலம் புத்துணர்வுப் பெற்று, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைத்து மனதை ஆற்றலோடு வைத்திருக்கும்.
நுரையீரலின் சக்தியை அதிகரிக்கும்.

யோனி முத்ர பிராணாயாமம்

நிலைகள்

1. ஆள்காட்டி விரல்கள், கட்டை விரல்களைத் தொடும் வண்ணம் வைத்துக் கொண்டு மற்ற விரல்களை உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.
2. இணைந்த ஆள்காட்டி விரல், கட்டை விரல் - ஒரு வளையம் போல் 
வடிவத்துடன் காணப்படும். கட்டை விரல்கள் தொப்புளில் படுமாறு வைத்துக் கொண்டு அழுத்தவும். 
3. இந்த நேரத்தில் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து வெளியேற்றவும்.


பயன்கள்

மன அழுத்தம் குறையும். மன அமைதி கிடைக்கும்
உடல் அமைதி பெற்று மகிழ்ச்சி அடையும்

பிரமரி பிராணாயாமம்


நிலைகள்

1. ஆள் காட்டி விரல்களை நம் கன்னமும் காதும் இணையும் இடத்தில் உள்ள வளையும் தன்மையுள்ள எலும்பின் மீது வைத்துக் கொள்ளவும்.
2. மூச்சை உள்ளிழுத்துப் பின் வெளியேவிடும் நேரத்தில் ஆள்காட்டிவிரல்களை நன்கு அழுத்த வேண்டும். 
3. அப்படியே ஒரு தேனியின் ரீங்காரம் போல் நம் தொண்டையின் வழியாக
சத்தம் இட வேண்டும். ஹம்மிங் ஒலி போன்று ஹைபிட்சில் ஒலியை 
வெளிப்படுத்த வேண்டும்.

பயன்கள்


கோபம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உயர் அழுத்தம் கொண்டவர்கள் மனம் அமைதி அடைவதை உணரலாம்.
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல  பயிற்சியாகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். மனதை ஒரு நிலைப்படுத்த உதவும். 
தன்னம்பிக்கையை வளர்க்கும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →