ரோஜா மலரே! - 52: குமாரி சச்சு
ஒரு முறை எனது பேட்டி நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக போகிறது என்று எனக்கு முன்பே சொன்னார்கள்.
ஒரு முறை எனது பேட்டி நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக போகிறது என்று எனக்கு முன்பே சொன்னார்கள். அது “"நையாண்டி தர்பார்'” என்று நினைக்கிறேன். ஒரு நாள் இரவு ஒளிபரப்பப்பட்டது. அன்று சூட்டிங் 6 மணிக்கே முடிந்து விட்டது. வீட்டிற்கு போய் அந்த பேட்டியைப் பார்க்கலாம் என்று நினைத்து நான் வீட்டிற்கு வந்து விட்டேன். என் கையில் உள்ள கைபேசியில் நிறைய பேர் என்னை விடாமல் அழைத்துப் பாராட்டிய வண்ணம் இருந்தார்கள். எல்லோரிடமும் பேசியபடியே என் படுக்கை அறைக்கு சென்று நான் என் படுக்கையில் உட்கார்ந்தேன். அப்பொழுது பார்த்து என் படுக்கைக்கு பக்கத்தில் உள்ள தொலைபேசி மணி அடித்தது. யார் இந்த நேரத்தில் தொலைபேசியில் அழைப்பது என்று நினைத்துக் கொண்டே எடுத்தேன்.
காதில் தொலைபேசியை வைத்து அந்த அரை தூக்கத்தில் இருந்த என்னை எதிர்முனையில் ஒரு குரல் பானுமதி ராமகிருஷ்ணா என்று கூறியவுடன். யார் என்று தெரியவில்லை. காரணம் அரை தூக்கம் என்னை அசத்தியது. யார் என்று நான் கேட்க, “"பானுமதி ராமகிருஷ்ணா"” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, ஒன்றும் புரியாமல் நான் சில நொடிகள் பேசாமல் இருக்க, திரும்பவும் தன் பெயரையும் “"பானுமதி ராமகிருஷ்ணா'” என்று சொல்லி விட்டு "ஏய்' என்றார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன், தூக்கம் எல்லாம் விடை பெற்றது.
"அம்மா” என்று பயத்துடன் உரக்க சொன்னேன். கீழே தொலைபேசியை வைத்து விட்டு நமஸ்காரம் செய்யும் நிலையில் நான் இருந்தேன். “"சொல்லுங்கம்மா சொல்லுங்கம்மா'” என்று பணிவாக தொலைபேசியில் பேசினேன். என்னைத் தொடர்பு கொள்ள என் கைபேசி எண்ணை முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் என்னை கூப்பிட்டு
பாராட்டியபடியே இருந்ததால், அவருக்கு நான் இணைப்பில் கிடைக்கவில்லை என்பதனால் என் தொலைபேசியில் அழைத்திருக்கிறார் என்று நானே நினைத்து கொண்டேன். இது எல்லாம் நான் பேசிய பிறகு நினைத்தது. பேசியது பானுமதி அம்மா. "நான் மீண்டும் “சொல்லுங்கம்மா'” என்று சொன்னவுடன்,"ரொம்ப நல்லா பேசினே. இப்படியே இதை நீ தக்க வைத்து கொள்ள வேண்டும், இரவு வணக்கம்' என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.
பானுமதி அம்மா பாராட்டு ஒரு விருதுக்கு சமம். திரும்பத் திரும்ப அன்று அவரது குரல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எனக்கு அன்று தூக்கம் வர நெடுநேரம் ஆகியது . அவர் என் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறார். நான் பேசியதை கேட்டு இருக்கிறார்கள். பார்த்தது மட்டும் அல்ல, அதற்காக என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்ற அவரது எண்ணம், எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையை அதிகமாக்கியது.
என்னைப் பொருத்தவரையில் "அன்னை' படத்தின் சிறப்புகள் பல. நான் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த ஒரு படம். தமிழில் இது வெற்றி பெற்று 100 நாள் ஓடியது. இந்தப் படம் தெலுங்கில் "பிச்சின பிரேமா' பெயரிலும், இந்தியில் "லாடியா' என்ற பெயரிலும் வெளிவந்து வெற்றி பெற்றது. நான் கதாநாயகியாக நடித்த முதல் படமே முத்திரை படமாக அமைந்தது. பெரிய பேனர், புகழ் பெற்ற இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். மாருதிராவ் -ஒளிப்பதிவு. சுதர்சனம் - இசையமைப்பு. பானுமதி ராமகிருஷ்ணா, செளகார் ஜானகி, எஸ்வி. ரங்கராவ் போன்ற நட்சத்திரங்கள் நடிப்பு, இதில் நானும் இருக்கிறேன் என்று எண்ணும் போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை. ஆனால் இந்தப் பெருமைகளை நான் முழுமையாக அனுபவிக்க எனக்கு கொடுத்து வைக்க வில்லை என்று சிறிது நாளிலேயே எனக்குத் தெரிந்த போது யார் தான் வருத்தப்படாமல் இருக்க முடியும்.
"அன்னை' படத்தின் நூறாவது நாள் விழாவை மிகப் பெரிய அளவில் கொண்டாட ஏவி.எம் செட்டியார் முடிவு செய்தார். செட்டியார் ஏவிஎம் ஸ்டூடியோ உள்ளேயே இந்த 100-ஆவது வெற்றி விழாவை நடத்தினார்கள். ஜெமினி வாசனை தலைமை தாங்கி பரிசுகளை வழங்கவும் அழைத்திருந்தார். அவரும் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டிருந்தார். வாசன் கையால் நான் பரிசு வாங்க விருப்பட்டாலும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.
எப்பொழுமே நாம் ஒன்று நினைத்தால் ஆண்டவன் வேறு ஒன்றை நினைப்பான் என்ற ஒரு பொன் மொழி உண்டு இல்லையா? அது என் வரையில் சரியாக போய் விட்டது. நான் ஏவி.எம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போதே மேடையில் நடனமாட போக என்னை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களும் ஒப்புக் கொண்டு இருக்கின்றனர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். எங்களைப் போன்ற நடிகர் நடிகைகளை ஏதாவது நடன நிகழ்ச்சி நடத்த குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் போட்டு விடுவார்கள். அப்படிப் போட்டால் தான் அவர்களால் ஒப்பந்தம் போட்ட ஊரில் நன்றாக விளம்பரம் செய்து போட்ட முதலை எடுப்பதொடல்லாமல், லாபம் பார்க்க முடியும்.
அப்படித்தான் மூன்று மாதத்திற்கு முன்னாலேயே இந்த நடன நகழ்ச்சிக்கு எங்களிடம் வந்து தேதி வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் போட்டு விட்டு போய் விட்டார்கள். இங்கு ஏவி.எம் செட்டியார் "அன்னை' படத்தின் 100-ஆவது நாள் விழாவை கோலாகலமாக நடத்த நினைத்த தேதி, நாங்கள் நடன நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்ட தேதியும் ஒன்றாக இருந்தது. எங்களிடம் வந்த சொன்னவுடன் நான் மிகவும் வருத்தபட்டேன். “"மாயா பஜார்'” படத்தில் நடித்து நான் வாங்கிய ஷீல்ட் எவ்வளவு முக்கியமோ அதே போல், உலகப் புகழ் பெற்ற ஏவி.எம் நிறுவனத்தில் நான் ஒப்பந்த நடிகராக அறிமுகமாகி நான் பெறப் போகும் முதல் ஷீல்ட் எனக்கு மிக முக்கியம். அது மட்டும் அல்ல கதாநாயகியாக நடித்த படம். என்ன செய்வது என்று தெரியாமல் நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஏவி.எம் நிறுவனத்தில் போய் தேதியை மாற்ற கேட்பது முடியாத காரியம். அதனால் நடன நிகழ்ச்சியை மாற்றி, வேறு ஒரு தேதியில் நடன நிகழ்ச்சியை வைத்து கொள்ளலாமா என்று கேட்க முடிவு செய்தோம்.
அந்த தேதியில் யார் எங்களை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்த போது, அதே தேதியில் வழுவூர் ராமையா பிள்ளை தலைமையில் நாங்கள் இருவரும் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தோம். அதுவும் சென்னையில் இருந்தால் ஏவி.எம் ஷீல்ட் வாங்கிக்கொண்டு வந்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி நடப்பதோ ஸ்ரீலங்காவில். சில நாட்கள் தொடர்ந்து எங்கள் நடன நிகழ்ச்சி.அங்கு நடை பெறுவதாக இருந்தது. அது மட்டும் அல்ல இது தனியார் நிகழ்ச்சி அல்ல. அரசு எங்களை அவர்களது விருந்தினராக அழைத்துப் போய் நடத்தும் நடன நிகழ்ச்சி. எப்படி இதை வேண்டாம் என்று சொல்வது என்று தெரியாமல் தவித்தோம். ஸ்ரீலங்கா அரசில் உள்ள தலைமை செயலாளர் உட்பட முக்கிய செயலாளர்கள், இந்த நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர். எப்படி நான் தேதியை மாற்றி வைத்துக் கொள்ள சொல்ல முடியும்?
ஏவி.எம் நிறுவனத்தில் கூட என் மீது கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனால் என் நிலைமையை அவர்களிடம் விளக்கி சொன்ன போது அவர்கள் புரிந்து கொண்டார்கள். என்னைப் பொருத்தவரை எப்பொழுதுமே நான் ஒரு சொல் சொன்னால் அதைக் காக்கவே பாடுபடுவேன்.அதிலும் நடன நிகழ்ச்சிக்கு ஒரு முறை தேதி கொடுத்து விட்டோம் என்றால் எங்கள் தரப்பில் இருந்து மாற்ற மாட்டோம். எப்படி இதை அவர்களிடம் சொல்வது என்றும், சொல்லலாமா வேண்டாமா என்றும் பல்வேறு வழிகளில் யோசனை செய்து கடைசியில் எல்லோரும் ஒரு மனதாக செய்தது இது தான். எனது பெரிய அக்கா வசந்தி, "அன்னை' படத்தின் விழாவில் கலந்து கொண்டு 100 -ஆவது நாள் ஷீல்ட் வாசனிடமிருந்து இருந்து என் சார்பாக வாங்குவது என்றும், நானும் என் அக்கா "மாடி' லட்சுமியும், ஸ்ரீ லங்காவில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த "அன்னை' படம் நடித்ததனால் பல்வேறு மகிழ்ச்சி நிறைந்த விஷயங்கள் என் வாழ்கையில் நடந்தது. ஏவி.எம் நிறுவனத்தில் முதன் முறையாக மாத சம்பளத்தில் நடிக்கப் போகிறோம். அதுவும் இயக்குநர் இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில். அது மட்டும் இல்லாமல் நாம் பானுமதி அம்மாவுடன் படமும் பார்க்கப் போகிறோம். இப்படி எனக்கு ஒன்று முடிவதற்குள் மற்றொரு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் பெரிய இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்தார்கள் ஏவி.எம் நிறுவனத்தினர். "அன்னை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே எனக்கு இது நடந்தது. அது என்ன?
(தொடரும்)