சுய சரித்திரமும் சுய சித்திரமும்
சுயசரித்திரம் என்பது ஒருவர் தன் வாழ்க்கையின் சரித்திரத்தைத் தானே, நடந்தவற்றை நடந்தது மாதிரியும், கேட்டதைக் கேட்ட மாதிரியும் பேசிய பேச்சைப் பேசிய மாதிரியும் எழுதுவது.
சுயசரித்திரம் என்பது ஒருவர் தன் வாழ்க்கையின் சரித்திரத்தைத் தானே, நடந்தவற்றை நடந்தது மாதிரியும், கேட்டதைக் கேட்ட மாதிரியும் பேசிய பேச்சைப் பேசிய மாதிரியும் எழுதுவது. அதாவது உண்மையை உண்மையாகவே எழுதுவது என்பது தான். ஆனால், நடந்ததை நடந்த மாதிரியும், கேட்டதைக் கேட்ட மாதிரியும் திருப்பி எழுத முடிவதில்லை. எழுதுவதற்குள் காற்று கடந்து போவது போல, ஆற்றில் தண்ணீர் ஓடிப்போவது போல மனத்தில் இருந்து போய்விடுகிறது. அவற்றைப் பிடித்து கொண்டு வந்து அப்படியே எழுதுவது சாத்தியம் இல்லாமலேயே இருக்கிறது. ஆகையால் சிலவற்றை விரும்பியும், பலவற்றை விரும்பாமலும் மாற்றி, திருத்தி எழுதப்பட்டு விடுகிறது. அது கிரகிக்கும் சக்தி, திரும்பச் சொல் சொல்லும் சார்ந்து இருக்கிறது.
இளம் வயதில் ஆர்வத்தோடு தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை டைரியாக, குறிப்புகளாக ரகசியமாக எழுதி வைக்கிறார்கள். அவற்றை முதுமையுற்றப் போது எழுதியவற்றைப் படிக்கிற போது, தன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்து உள்ளதா?இது மாதிரியெல்லாம் பேசியிருக்கிறோமா என்பதைப் பதிவுகளில் படித்து மனம் பதறிப் போய்விடுகிறார்கள். தன் வாழ்க்கை வரலாறு எந்த ரூபத்திலும் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்றும் தெரிந்தால் மனைவி, மக்கள் சுற்றத்தார், நண்பர்கள் பிம்பம் உடைந்து போய்விடும். கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று எழுதிய டைரியை வாழ்க்கைச் சரித்திரக் குறிப்புகளைத் தீயிட்டுக் கொளுத்திவிடுகிறார்கள். டைரி வாழ்க்கைக் குறிப்புகள் எரிந்து சாம்பலான பிறகுதான் மனம் சாந்தியடைகிறது.
ஒருவர் தன் வாழ்நாளில் எழுதிய டைரியை வாழ்க்கைக் குறிப்புகளை, சுய சரித்திரத்தை கையெழுத்துப் பிரதியாகவே வைத்துவிட்டு இறந்து போனால்-அவற்றைப் படித்து பெருமை தரும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அவதூறு செய்யும் என்று படுகிற நிகழ்வுகள், பேச்சுகளை நீக்கி சுத்தம் செய்து சிறப்பான வாழ்க்கை வரலாறு என்று அச்சிடுகிறார்கள். அதோடு கவனமாக கையெழுத்துப் பிரதியை அழித்து விடுகிறார்கள்.
அது உலகம் முழுவதிலும் நடைபெறுகிறது. பிரிட்டிஷ் பேரரசியாக இருந்தவர் அலெக்சாண்ட்ரியா விக்டோரியா 1819-ஆம் ஆண்டில் பிறந்தவர் தன் பதிமூன்றாவது வயதில் டைரி எழுத ஆரம்பித்தார். தினமும் இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதினார். 82-ஆவது வயதில் மரணமடையும் வரையில் டைரி எழுதி வந்தார். இளம் வயதில் அவர் எழுதிய டைரி வண்ணமிகு ஓவியங்களோடு வெளிவந்தது. பேரரசி எழுதியது என்பதால் பிரபுக்கள் வாங்கினார்கள்.
அலெக்சாண்ட்ரியா விக்டோரியா மரணமடைந்ததும் அவரின் டைரி, மரபு ரீதியில் இளவரசி பீட்டாரைஸ் கைக்குச் சென்றது. பேரரசியும், தாயுமான விக்டோரியா, டைரி குறிப்புகளைப் படித்து மனம் பதறிப் போனார். பன்னிரண்டு ஆண்டுகள் டைரியைப் படித்து சில பகுதிகளை மாற்றி எழுதினார். பல பகுதிகளை அச்சிட வேண்டாம் என்று தள்ளிவைத்துவிட்டார். கடைசியாக டைரியை அச்சுப்புத்தமாகப் போடுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு கைவசம் இருந்த அசல் டைரியைக் கொளுத்திவிட்டார்.
அபூர்வமாகவே வெகு சில டைரிகள் சுயசரித்திர நூல்கள் எழுதியபடியே வெளிவருகின்றன.
சுய சித்திரக்காரர்களுக்கு அது பிரச்னை இல்லை. சுய சித்திரமே முக்கியமானது. கண்ணாடியில் பார்த்துப் பார்த்து விருப்பப்படியான தோற்றம் தரும், சித்திரம் வரைந்து வந்தார்கள். புகைப்படம் வந்ததும் அந்தச் சிரமமும் போய்விட்டது. பிடித்தமானப் புகைப்படத்தை மெருகூட்டி கவர்ச்சிகரமாக வரைந்து கொண்டார்கள். அது சித்திரக்காரர் விருப்பம் சார்ந்தது.
அது இறுக்கத்தை உடைத்தது. தன் படைப்பில் தானே முக்கியம் என்பதை சுயசித்திரம் நிலை நாட்டியது. பின்னால் வந்த மகத்தான ஓவியர்கள், சித்திரக்காரர்கள் எல்லாம்-தான் எவ்வாறு அறியப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அப்படியே வரைந்து கொண்டார்கள்.
ஓவியத்தில் நவீனத்துவத்தை நிலை நாட்டிய, பாப்லோ பிக்காசோ, பல சுயசித்திரங்கள் வரைந்து கொண்டிருக்கிறார். தான் ஸ்தாபித்த கியூபிஸியத்தைத் தன் சுய சித்திரத்தோடு இணைத்திருக்கிறார். மரணம் எல்லா கலைஞர்களையும் மிரள வைக்கிறது. ஆனால் கலைஞர்கள், படைப்பு எழுத்தாளர்கள் வந்து கொண்டிருக்கும் மரணத்தை அறிந்து கொண்டு விடுகிறார்கள்.
பிக்காசோ மரணமடைவதற்கு ஓராண்டிற்கு முன்னால் நெடுங்கோடுகளுக்கிடையில் மஞ்சள் படாத சுயசித்திரம் வரைந்து கொண்டிருக்கிறார். அது மரணத்தின் முகத்தை ஏற்றி வைத்துக் கொண்டிருப்பது தான். வின்சென்ட் வான்கோ, டாவின்சி எல்லாம் சுயசித்திரம் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் முதன் முதலாக சுயசித்திரம் தீட்டிக் கொண்டவர் ராஜாரவிவர்மா. கேரள அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஐரோப்பிய ஓவியர்களிடம் மேற்கத்திய பாணியில் யதார்த்தமாக படம் வரையவும், ஆயில் பெயிண்டிங் செய்யவும் கற்றுக் கொண்டார். ஆனால், ஓவியத்தின் கருப்பொருளாகியது இந்திய புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள் தான். அதோடு மட்டுமல்லாமல் இந்திய ஓவியங்களில் இடம் பெறாத ஏழை எளியவர்கள், பிச்சைக்காரர்கள்- என்ற பலரையும் வரைந்து இருக்கிறார்.
ராஜாரவிவர்மாவே இந்தியாவில் முதன் முதலாக சுயசித்திரங்கள் வரைந்து கொண்டவர். அரச குடும்பத்தின் வாரிசு என்று சொல்வது போல தலைப்பாகை அணிந்து, கோட் போட்டுக்கொண்டு நிற்கிறார். அவர் சுயசித்திரம் கோட்டோவியம் இல்லை வண்ண ஓவியந்தான்.
சுயசித்திரம் என்பது கண்ணாடியில் ஓவியர் காண்பதில்லை. முகத்தின் வழியாகவே அகத்தை நிலைநாட்டவே ஓவியர்கள் சுயசித்திரம் தீட்டுகிறார்கள்.
இந்தியாவில் அதிகமான அளவில் சுயசித்திரம் தீட்டிக் கொண்டிருப்பவர் ரவீந்திர நாத் தாகூர். அவர் வர்ணத்தில் நாட்டம் கொள்ளவில்லை. கோட்டோவியமாக-பிரதானமாக கறுப்பு வர்ணத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இசை என்று பல துறைகளிலும் பிரகாசித்த தாகூர் மகத்தான ஓவியராகவும் அறியப்படுகிறார்.
சுயசித்திரம் - ஓவியம் வரைந்து கொள்வதில் பெண், ஆண் என்ற பேதமெல்லாம் கிடையாது. அவர்கள் சுய மோகத்தால் வரைகிறார்கள் என்பதும் இல்லை. தன்னையே ஒரு கலைப்பொருளாகவே கண்டு, தன் இருப்பை இருப்பது போல நிலைநாட்டவே சித்திரங்கள் தீட்டுகிறார்கள்.
இந்தியாவின் நவீன ஓவியர்களில் சிறப்பான ஒருவர் அமிர்தா ஷெர்கில். இந்திய தந்தைக்கும், ஹங்கேரிய தாய்க்கும் பிறந்தவர். கிழக்கும், மேற்கும் அவரிடம் சங்கமித்தன. ஆனால், இந்திய அம்சங்களே கூடுதலாக இருந்தது. வட இந்திய கிராமத்துப் பெண்களை வனப்புடன் செங்காவி வண்ணத்தில் வரைந்து புகழ் பெற்றார். அவர் சுய ஓவியமும் சிவப்பும், செங்காவியும் கலந்து சிரிக்கும் போது பல்லின் வண்மையில் சுய ஓவியம் உயிர்ப்பித்து விடுகிறது. இருபத்தெட்டு வயதில் மகப்பேறில் காலமான அவர் தன் சொந்தப் படைப்பில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
சுயசித்திரமோ; ஓவியமோ விமர்சனத்திற்கு உள்ளாவது இல்லை. அதில் மறைக்கப்பட்டது ஒளிக்கப்பட்டது இருக்கிறது என்று சொல்லப்படுவதும் கிடையாது. ஆனால் ஒருவரின் மற்ற படைப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாகும் போது பல விதமான பிரச்னைகள் வந்துவிடுகிறது. அது சுயசித்திரம் சார்ந்தது கிடையாது. ஆனால் எழுத்தாளர்களுக்குச் சுய சரித்திரமே பெரும் பிரச்னைகளுக்குக் காரணமாகி விடுகிறது. எழுதப்பட்டதின் வழியாக எழுதப்படாமல் மறைக்கப்பட்டது முதலில் தெரிந்து விடுகிறது.
அதுதான் எழுத்து என்பதற்கும், சித்திரம் ஓவியம் என்பதற்கு உள்ள அடிப்படை வேறுபாடு. இந்தியாவில் சர்ச்சைக்குரிய ஓவியர் எம்.எப். ஹு சையின். அவர் சுய சித்திரங்களில் அவர்தான் இருக்கிறார். சாதுவாக -எளிய பாமர மனிதர் போல் காட்சியளிக்கிறார். ஆனால் பல படைப்புகளில் குறிப்பாக இந்து பெண் தெய்வங்களை வரைந்து காட்சிக்கு வைத்த வண்ணங்கள் ஓளிரும் ஓவிய கண்காட்சி வன்முறை களமாக மாறியது.
தமிழகம் தந்த இந்திய ஓவியர் கே.எம். ஆதிமூலம். நவீனத்துவமும், மரபும் அவர் சித்திரங்களில் சேர்ந்து போவது வசீகரமானது. படைப்புக்கலைக்குக் கருத்து போவது வசீகரமானது. படைப்புக் கலைக்குக் கருத்து வேண்டியதில்லை. என்பது போலவே ஓவியம், சித்திரத்திற்கு உருவம் தேவையில்லை என்று வரைந்து கொண்டு வந்தவர் ஆதிமூலம். அவர் பல எழுத்தாளர்கள், சான்றோர்கள், தமிழறிஞர்களை கோட்டோவியமாக வரைந்து இருக்கிறார். அவற்றில் கோடுகளின் ஆளுமையும் வனப்பும் நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறது. அவர் மற்றவர்களை வரைந்தது போலவே தன்னையும் கோட்டோவியமாக வரைந்து கொண்டிருக்கிறார். அது சுயமோகத்தின் வெளிப்பாடு இல்லை. விலகி நின்று தன்னைக் காணும் பற்றற்ற நிலைதான்.
தன் டைரி வாழ்க்கைக் குறிப்புகள் அச்சாகும், அச்சாக வேண்டுமென்ற பிரக்ஞையுடன் தான் பலர் எழுதுகிறார்கள். வேறு சிலரோ எவ்விதமான புற காரணங்கள் இன்றி, அகத்தூண்டுதலால் சுய சரித்திரம் எழுதுகிறார்கள். இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் படிக்கும் போது தெரிந்து விடுகிறது. அது கலையை ஏமாற்ற முடியாது என்பது தான்.
இந்தியாவில் உரைநடையில் 1736-ஆம் ஆண்டில் டைரியாக ஆனந்தரங்கப்பிள்ளை எழுதியதுதான் முதல் சுயசரித்திரம். பேச்சுத் தமிழில் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். தன்னால் எழுத முடியாத போது ஆள் வைத்து எழுதியிருக்கிறார். ஐயாயிரம் பக்கங்கள் வரும் கவர் சுய சரித்திரம், காலத்தின் பொக்கிஷமாக இருக்கிறது.
தற்காலத்தில் சுய சரித்திரம் என்பது விற்கக்கூடிய புத்தகமாகி
விட்டது. சுயசரித்திரம் வரைய அதில் தேர்ச்சி பெற வேண்டும். சுயசரித்திரம் எழுத ஒரு மொழியை எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.சொல்லப்படுவதை கூட்டிக்குறைத்து சுவாரசியமாக எழுதி கொடுக்க எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற மார்க்கோ போலோ பயணக் குறிப்பாக சுயசரித்திரம் அவர் எழுதியது இல்லை. அவரோடு சிறையில் இருந்த ருஷ்ட்டி úஸாலோ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதி கொடுத்தது. அடுத்தவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள பலரும் சுயசரித்திரம் படிக்கிறார்கள்.
எனவே அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் சமூக சேவகர்கள், ஜனாதிபதிகள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், நடிகை, நடிகர்கள், குற்றவாளிகள், தாசிகள் என்று பலரும் சுயசரித்திரங்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களோடு விளையாட்டு வீரர்களும் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். தன்னால் எழுத முடியாது என்று கருதுகிறவர்கள் ஆட்கள் வைத்து சுயசரித்திரம் எழுதிக் கொள்கிறார்கள்.
சுயசரித்திரம் எழுத வயதில்லை. எந்த வயதிலும் எழுதலாம் பதிமூன்று வயதில் டைரி எழுத ஆரம்பித்து, பதினான்காம் வயது வரையில் எழுதிய ஆனி பிராங்க் ஹிட்லர் படையால் பிடிக்கப்பட்டார். யூத பெண் என்பதால் வதை முகாமில் வைக்கப்பட்டார். அங்கேயே இறந்து போனார். வதை முகாமில் இருந்து உயிர் பிழைத்து வந்த அவர் தந்தையிடம், ஆனி பிராங்க் டச்சு மொழியில் எழுதிய டைரியை வீட்டுப் பணிப்பெண் கொடுத்தார். பின்னர் அது பல மொழிகளிலும் வெளி வந்தது. உலகத்தின் மிகச் சிறந்த சுய சரித்திரமாக இருக்கிறது.
பிரபலமானவர்கள் சுயசரித்திரம் பெரும்பாலும் மனதளவில் எடிட் செய்யப்பட்டதாகவே இருக்கிறது. எதையெல்லாம் எழுத வேண்டும், என்பதை விட எதையெல்லாம் எழுதக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அது எழுதப்பட்டுள்ள சுய சரித்திரங்கள் வழியாகவே தெரிகிறது.
தமிழர்கள் அதிகமாகக் கொண்டாடும் உ.வே.சாமிநாதையர் சுய
சரித்திரமான "என் சரித்திரத்தில்' சமூக வாழ்க்கை சுதந்திரப் போராட்டமாகும். ஆனால் மகாகவி பாரதியார் பற்றி ஒரு வரி கூட கிடையாது.
நீதிபதியாகவும், நாடக, நடிகராகவும், இருந்த பம்மல் சம்பந்த முதலியார், பகல் பொழுதில் நீதிமன்றத்தில் அமர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனையோ- விடுதலை அளித்தது பற்றியோ எழுதவே இல்லை. ஆனால், அவர்தான் சென்னையில் காங்கிரஸ் சத்தியாகிரகங்களுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்கியவர்.
சுய சித்திரக்காரர்களுக்கு சமூகமே முக்கியமில்லை. தன் முகமே முக்கியம். அதனை எவ்வளவு தூரம் உளவியலோடு கொண்டு வர முடியும் என்பதைச் சார்ந்தே சுய சித்திரங்கள் தீட்டிக் கொண்டார்கள்.
ஒரு மகத்தான் சித்திரக்காரன் வரைந்து கொண்ட சித்திரத்தை விட உளவியல் ரீதியில் தன்னைத்தானே வரைந்து கொள்வது முழு ஆளுமையின் வெளிப்பாடாக இருக்கும் என்பதே அதற்குக் காரண
மாகிறது.
சுயசரித்திரம், சுயசித்திரம் என்பதெல்லாம் ஒரு மனிதனின் அகபுற வாழ்க்கையைச் சொல்வது தான். கலையென்கிற அம்சத்தில் ஒன்றுபடும் அவை முற்றிலும் தனியாகவே இருக்கின்றன. அதனையே எழுதப்பட்டச் சுய சரித்திரங்களும், சுய சித்திரங்களும் நிலைநாட்டி வருகின்றன.