முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சினிமா, நிஜம் என பிரித்து பார்ப்பதில்லை!

""எனக்கு எல்லாவிதமான படங்களிலும் நடிக்க வேண்டும்.  என் முதல் தெலுங்குப் படத்தில் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற ரோல் கிடைத்தது. அதன்  பிறகு கிடைத்தது எல்லாம் கமர்ஷியல் கேரக்டர்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:


""எனக்கு எல்லாவிதமான படங்களிலும் நடிக்க வேண்டும். என் முதல் தெலுங்குப் படத்தில் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற ரோல் கிடைத்தது. அதன் பிறகு கிடைத்தது எல்லாம் கமர்ஷியல் கேரக்டர்கள். கடைசியாக வந்த "தொலி பிரேமா' படம் எனக்கு நடிக்கவும் தெரியும் என்று காட்டியிருக்கிறது. நடிப்புக்கு ஸ்கோப் இருக்கிற நல்ல படங்கள் எல்லாவற்றிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். "நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருந்தார். எனக்கு அந்த மாதிரி கேரக்டர்களும் வேண்டும்.'' கரோனாவின் தாக்கத்தில் கைகுலுக்குவதற்குப் பதிலாக அசலான புன்னகை தந்து வரவேற்கிறார் ராஷி கண்ணா.

நீங்க தில்லியிலிருந்து இங்கே வந்து இருக்கீங்க....

பிறந்து வளர்ந்தது, தில்லி. பி.ஏ ஆங்கிலம் படித்து விட்டு, மும்பையில் மாடலிங் செய்து கொண்டு இருந்தேன். அப்போ கிடைத்ததுதான், "மெட்ராஸ் கஃபே' பட வாய்ப்பு. பிறகு தெலுங்கு, மலையாளம்னு பிஸி. பாலிவுட்டுக்குப் போவது ஒன்றும் முக்தி நிலை இல்லையே. எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் ஹிந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் நடித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதெல்லாம் திட்டம் போட்டது கிடையாது. எந்த மொழியாக இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவாக இருந்தால் போதும். தமிழில் சித்தார்த் நடிக்கும் "சைத்தான் கி பச்சா', சுந்தர்.சி இயக்கும் "அரண்மனை 3' என வரிசையாக தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. ஒரு வழியாக தமிழ் சினிமாவுக்கு வந்தது மகிழ்ச்சி. ரொம்பவே முன்னாடி வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். 2016-லேயே இங்கே நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் இடையே தாமதம் ஆகி விட்டது. அதுவும் ஒருவகையில நல்லதுதான். அந்த இடைவெளியில வேறு வேறு மொழிகளில் நடித்தேன். என்னை ஒரு நடிகையாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இனி இன்னும் நன்றாக தெரியும்.

அடுத்து வருகிற படங்களில் உங்களுக்கு இடங்கள் எப்படி...

இதற்கு முன்பு இருந்தது மாதிரிதான். "இமைக்கா நொடிகள்' கிருத்திகா எனக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. "அடங்க மறு' படத்தில் வந்த கதாபாத்திரம் இன்னும் பெரிய இடத்துக்கு என்னைக் கொண்டு போய் சேர்த்தது. சினிமா, நிஜம் என நான் பிரித்துப் பார்ப்பது இல்லை. நிஜ வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகிறேனோ, அதைத்தான் என் கேரக்டர்களில் செய்து பார்க்கிறேன். இதோ உங்களிடம் பேசுவது போல்தான், சினிமாவும். "சைத்தான் கி பச்சா' படத்தில் கமர்ஷியல் ஹீரோயின். ஜாலியா சுத்துகிற பப்லி பொண்ணு. "அரண்மனை 3' படம் பற்றி உங்களுக்கே தெரியும். அதில் நீங்கள் என்னை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆர்யாவுடன் "மேதாவி' படத்தில் நடிக்கிறேன். அதிலும் சூப்பர் கேரக்டர். ஹரி - விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ள படம் பற்றியும் பேச்சு இருக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை.

விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷால், அடுத்து சித்தார்த்.... ஒரு ரவுண்ட் வந்துட்டீங்க...

சந்தோஷமான விஷயம் இது. இவர்கள் படங்களில் நாம ஒரு சின்ன கேரக்டர் செய்தாலே, நமக்கு அது பெரிய "ரீச்' தரும். இதற்கு முன்பு கூட விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நயன்தாரா அனுபவ நடிகர்கள் கூட்டணியில் நடித்திருக்கிறேன். அதுவே பெரும் அனுபவம். இப்போது நீங்கள் சொல்லும் போதும், சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொருத்தரும் பெரிய நடிகர்கள். அவர்களுடன் நடிப்பது நல்ல அனுபவம். எனக்குத் தமிழ் ரொம்பப் புதுசுதான். இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறேன். நிறைய தமிழ் பாடல்கள் கேட்கிறேன். இதுவரை, அடிக்கடி பயன்படுத்துகிற "எப்படி இருக்கீங்க', "சாப்டீங்களா' என்று சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். என் உச்சரிப்பு நல்லா இருக்கிறதென இயக்குநர்கள் சொன்னார்கள். கூடிய சீக்கிரம் எனக்கு நானே டப்பிங் பேசுவேன். ஏனென்றால், மொழியைப் புரிந்துக் கொண்டால்தான், அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

சுட்டுரை மூலமாக நிறைய கருத்துகளை பதிவு செய்யுறீங்க... சில சமூக அவலங்களில் கோபம் காட்டுறீங்க...

இன்றைக்கு சமூக வலைதளங்கள்தாம் பெரிய மக்கள் தொடர்பு ஊடகமாக இருக்கின்றன. என்னை ஒரு நடிகையாக பின்பற்றி வருபவர்கள், நான் சொல்கிற விஷயங்களையும் பின்பற்ற வாய்ப்பு இருக்கின்றன. கடந்த வருடம்தான் நான் சுட்டுரையில் சேர்ந்தேன். என் மூலமாக ஏதோ ஒரு விழிப்பு உணர்வு கிடைத்தால் சரியென்று என் கருத்துகளை ஷேர் செய்கிறேன். அது யாருடைய வாழ்க்கையிலாவது சின்ன மாற்றத்தைக் கொடுத்தால் சந்தோஷம்தான்.

சினிமா நடிகைகள் மீதான பொதுப்பார்வையை நீங்கள் எப்படி எடுத்துக்குறீங்க....?

நான் நடிகை ஆவேன்னு எதிர்பார்க்கவில்லை. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். திடீர்னு கிடைத்ததுதான், சினிமா வாய்ப்பு. நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வமும், கட்டாயமும் எனக்கு இருந்ததில்லை. தவிர, சினிமாவில் மட்டுமல்ல... எல்லாத் துறைகளிலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லைதான். சினிமாவில் மட்டும்தான் இதெல்லாம் இருக்கிறது என்று சொல்லி , மற்றவர்கள் தப்பிக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →