புற்றுநோயிலிருந்து மீண்ட அதிசயம்
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அமித் வைத்யா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துள்ளவர். வணிகத் துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றி வந்தார்.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அமித் வைத்யா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துள்ளவர். வணிகத் துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றி வந்தார். ஆனால் 27 வயதில் அவருடைய வாழ்க்கைத் தடம் மாறும் என அவரும் அவருடைய குடும்பத்தாரும் நினைக்கவில்லை. இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்குச் சிகிக்சைப் பெற்றார்.
நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோயில் இருந்து மீண்டார். அடுத்த அதிர்ச்சி அவருடைய அம்மாவிற்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சைப் பெற உதவினார். ஆனால் அம்மா உயிர் பிழைக்கவில்லை.
பெற்றோருக்கு ஒரே மகனான அமித் வைத்யா யாரும் இல்லாமல் தனிமையில் தவித்தார். அதோடு மட்டும் நிற்கவில்லை. அடுத்தக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால் மீண்டும் அமித்திற்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட மருத்துவமனை விரைந்தார். இந்த முறை புற்றுநோய் கல்லீரலை தாக்கியிருந்தது. ஏற்கெனவே சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையில் சேர்ந்தார்.
ஆனால் இந்த முறை எந்த மருந்துகளும், சிகிச்சை முறையும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. கல்லீரலில் இருந்த நோயின் தாக்கம் நுரையீரலுக்கும் பரவியது. மருத்துவர்கள் நீங்கள் இனி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக் குறைவு என கைவிரித்தனர். நம்முடைய இறுதிச் சடங்கிற்கான பணிகளை நாமே செய்து விடுவோம் என அமித் வைத்யாவே தனது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்தார்.
தனது இறுதி நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமித், தனது அத்தை வலியுறுத்தியதன் பெயரில் இந்தியா வந்தார். குஜராத்திலுள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையளிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்குச் சேர்ந்தார்.
அந்த மருத்துவமனையில் அவருக்கு யோகா, தியானம் ஆகியவற்றுடன் நாட்டு மாட்டின் பால், தயிர், நெய் மற்றும் கோபார், கோ-முத்ரா ஆகியவற்றின் கலவையான பஞ்சகவ்யம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
பல மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை காரணமாக நாக்கின் சுவைத்தன்மை இழந்த நிலையில் அமித் வைத்யாவுக்கு அந்த பஞ்சகவ்யத்தை சாப்பிடுவது கஷ்டமாகத் தெரியவில்லை. ஆனால் மருத்துவமனையில் இருந்த பலர் பஞ்சகவ்யத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அமித் வைத்யா கூறுகிறார்.
சிகிச்சைப் பெற்று புற்று நோயிலிருந்து மீண்ட அந்த அனுபவத்தைச் சொல்கிறார் அமித் வைத்யா:
""மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி நம்பிக்கையுடன் பஞ்ச கவ்யம் தினமும் குடித்தேன். ஆரம்பத்தில் என்னிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதேசமயம் நோய் தாக்கம் தீவிரமாகவும் இல்லை. என்ன தான் நடக்கிறது என ஸ்கேன் செய்து பார்த்தபோது புற்றுநோய் மேலும் பரவவில்லை என மருத்துவர்கள் நல்ல செய்தியைச் சொன்னார்கள்.
தொடர்ந்து அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றேன். பின் பரிசோதனை செய்து பார்த்த போது புற்றுநோயின் தாக்கம் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் என்னுடைய சிகிச்சை காலத்தில் விவசாயி ஒருவருடன் தங்கியிருந்தேன். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தேன். ஆடம்பரமில்லை. ஆனால், அது தான் ஒரு மனிதனின் நிஜ வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டேன்.
நாளடைவில் என்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நடக்க முடியாத நான் நாள் செல்ல செல்ல ஓட ஆரம்பித்தேன். 18 மாதங்களுக்குத் தொடர் சிகிச்சையால் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டேன்.
இந்தியா எனக்கு உயிர் வாழும் பரிசை கொடுத்திருக்கிறது. அந்த நன்றியை நான் மறக்கமாட்டேன். இனி அமெரிக்கா செல்ல விருப்பமில்லை. அதே நேரத்தில் இங்குள்ள ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்'' என்று சொல்லும் அமித். ஒரு பசு மாடு எப்படித் தன் வாழ்க்கையைக் காப்பாற்றியது என்று நெகிழ்ச்சியான சம்பவத்தைப் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.