தினமணியும் நானும் 1934-2019: தினமணி தலையங்கம் வரலாற்றுப் பதிவுப் பெட்டகம்!
சிறு வயதிலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆர்வம் உண்டு. அப்பொழுது வாரப்பத்திரிகைகளான ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கல்கண்டு, மாத பத்திரிகைளான கலைமகள், மஞ்சரி, சிறுவர்
சிறு வயதிலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆர்வம் உண்டு. அப்பொழுது வாரப்பத்திரிகைகளான ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கல்கண்டு, மாத பத்திரிகைளான கலைமகள், மஞ்சரி, சிறுவர் பத்திரிகைகளான அம்புலி மாமா, கண்ணன் மற்றும் மாயாவி (கலர் வண்ணப்படக் கதைப் புத்தகம்) என ஒன்று விடாமல் படிப்பேன். பள்ளியில் எனது மறக்க முடியாத தலைமையாசிரியர் அ.சுப்பிரமணிய ஐயர் ஏற்படுத்திய மாணவர் படிப்பகத்தில் தினமணியும் ஏனைய தமிழ் தினசரிகளையும் படிப்பேன். இளமையில் படித்த அந்த விஷயங்கள் தான் இன்றைய எனது கட்டுரைகளின் விவர நீருற்று என்றால் மிகையாகாது.
தினமணிக்கும் எனக்கும் "பக்கத்து வீட்டு உறவு' தினமணியின் முதல் ஆசிரியர் சொக்கலிங்கம் எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னால் தென்காசியில் பிறந்தவர். அதன் பின் வந்த "கணக்கன்' ஏ.என்.சிவராமன் நான் பிறந்த தென்காசி தெற்கு மாசி வீதியில் 46-ஆம் எண் வீட்டிற்கு அடுத்த மேற்கிலுள்ள 45-ஆம் எண் வீட்டில் சென்னைக்கு வருவதற்கு முன்பு வசித்து வந்தார். என் தந்தையின் நெருங்கிய நண்பர்.
தினமணி வாசகரான நான் தினமணியில் எழுதுபவனாக மாறியது ஒரு சுவாரசியமான சம்பவம். 1930-ஆம் ஆண்டு காந்தியடிகள் தலைமையில் "தண்டி யாத்திரை'” என்ற பெயரில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில்” 1930 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 28 வரை மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சி-வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்” நடைபெற்றது. இதனுடைய 40-ஆம் ஆண்டு நிறைவு நினைவு விழாவாக மாணவர்களை வைத்து திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை 150 மைல் தூரத்திற்கு ஒரு மாணவர் பாத யாத்திரையை வி.ஆர்.ராதாகிருஷ்ணன், டாக்டர்.எஸ். விஜயலெட்சுமி இருவரும் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட மாணவர்களில் நானும் ஒருவன். முடிவில் மாணவர்களின் அனுபவத்தைக் கட்டுரையாக எழுதி தரச் சொல்லி தேர்வாவது தினமணியில் வெளியாகுமென்று சொன்னார்கள்.
1970-இல் ஜூலை மாதம் என நினைக்கிறேன். சென்னை விவேகானந்தா கல்லூரியில் நுழைந்த என்னிடம் சக மாணவர்கள் "உனக்கு நிறையக் கடிதங்கள் வந்திருக்கு'” என்று சொன்னார்கள் எனக்குப் பெற்றோரிடம் இருந்து வரும் கடிதங்களும் பேனா நண்பர்களின் பிற கடிதங்களும் நான் தங்கியிருந்த சகோதரன் வீட்டிற்குத் தான் வரும் கல்லூரிக்குப் பல கடிதங்கள் எப்படி வருமென்று யோசனையுடன் கல்லூரி தபால் பெட்டியை திறந்த போது சுமார் 50 கடிதங்களுக்கு மேல் எனக்காகக் காத்திருந்தன.
முதல் கடிதத்தைப் படித்தவுடனேயே தெரிந்து விட்டது எனது பாதயாத்திரை அனுபவம் ஞாயிறு வெளியாகும் தினமணி சுடரில் முழுப் பக்க கட்டுரையாக வந்திருக்கிறது என்று. தினமணியில் பாதிப் பக்க அளவில் பின் அடிக்காமல் சுடர் அனுபந்தம் வெளி வந்தது. கடிதங்களைப் படிக்கப் படிக்க என் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறீட்டன. பாதயாத்திரை கட்டுரையைப் பாராட்டி வந்த கடிதங்கள் அவை. கல்லூரி மாணவனான நான் எழுதி தினமணியில் வந்த கட்டுரையால் நான் வானில் மிதக்க ஆரம்பித்தேன்.
இது முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னால் நான் வகுப்பில் இருக்கும் பொழுது கல்லூரியின் மேலாளர் சுப்பிரமணியன் என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது அவர் முன் ஆஜரானேன். "வா கல்லூரி முதல்வரை சந்திப்போம்' என அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்தவுடன் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான பு.வெங்கடராமன் "இளைஞனே உனக்கு தினமணியில் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது. உன் கட்டுரைக்கு அவர்கள் அனுப்பிய சன்மானமாக அது இருக்குமென்று நினைக்கிறேன்'” என்று ஆங்கிலத்தில் சொல்லி ஒரு கவரை என்னிடம் நீட்டினார். கவரை பிரித்த எனக்கு இன்ப அதிர்ச்சி அதில் என் கட்டுரைக்காக தினமணி பத்திரிகை ரூ.20 சன்மானமாக அனுப்பியிருந்தது.
இதனுடைய பிரதிபலனாகப் பின்னாளில், நான் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உறுப்பினராகி காந்தி-150 விழாவை அதே தினமணி பத்திரிகையுடன் இணைந்து, தமிழ்நாடு கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப் போட்டி, 30 மாணவிகள், 10 மாணவர்களையும் தேர்ந்தெடுத்து 9 நாட்கள் தமிழ்நாட்டில் காந்தியடிகள் தடம் பதித்த இடங்களுக்கு "அண்ணலின் அடிச்சுவட்டில்' பேருந்துப் பயணம் நடத்தியதை என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
என் வாழ்க்கையில் கல்லூரி மாணவனாக நான் இருந்த போது சம்பாதித்த முதல் வருமானம் தினமணி எனக்கு வழங்கியது என்பதை மிக மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பதிவு செய்கிறேன். மீனாட்சிபுரம் மதமாற்றம் நெல்லை அருகேயுள்ள மாரந்தையில் மும்பை அணுகதிர் கழிவுகளைப் புதைக்க முயற்சி, தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் எரிந்து மக்கள் மாண்டது போன்ற பல செய்திகள் உலகுக்கு முதலில் சொன்ன தினமணி நெல்லை நிருபர் மறைந்த நாராயணனும், நானும் உடுக்கை இழந்தவர் போல் உதவும் நண்பர்கள்.
நீதியரசர் ஹரிபரந்தாமனுடன், அன்றைய வழக்கறிஞரும் இன்றைய நீதியரசருமான ஜி.ஆர்.சுவாமிநாதனும் சென்னையில் ஒரு விழாவிற்கு வேட்டி கட்டி சென்ற பொழுது அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியை பார்த்தவுடன் "தடை போட முடியாது, கூடாது” என்ற தலைப்பில் வேஷ்டியின் புகழ்பாடி எழுதிய கட்டுரை 18.07.2014-ஆம் தேதியன்று தினமணியில் வெளியானது.
இடைக்காலத்தில் ஆங்கிலக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நான் மீண்டும் தினமணியோடும் தமிழோடும் உறவாட ஆரம்பித்தேன். வெளியூர் பயணம் சென்றாலும் வந்த பிறகு பழைய தினமணி பத்திரிகைகளைக் குறிப்பாகக் கட்டுரையும் ஆசிரியர் தலையங்கத்தையும் படிக்கத் தவறியதில்லை. 85-ஆவது அகவை காணும் தினமணியின் வாசகர்கள் சார்பாக அதன் புகழ் வாய்ந்த ஆசிரியர்கள் தினமணி சொக்கலிங்கம், சிவராமனுக்கு புதிய தென்காசி மாவட்ட தலைநகரில் சிலை நிறுவ வேண்டும் என்பது எனது அவா.
இதை 90-ஆண்டுகள் கடந்து விட்ட தென்காசி திருவள்ளுவர் கல்கி மேடையில் இன்றைய ஆசிரியர் வைத்தியநாதன் முன் கோரிக்கை வைத்தேன். தினமணி வாசகர்களிடம் பணம் வசூலித்து இந்தச் சிலையை தினமணி 100 ஆண்டு காணும் முன் நிறுவ வேண்டுமென்பது என்னுடைய அவா. தினமணியின் தலையங்கங்கள் தனிச்சிறப்பானவை. ஆங்கிலப் பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் பொழுது அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளும் தலையங்கம் எழுத ஆரம்பித்து விட்டனர்.
"நிமிர்ந்த நன்நடையும், நேர்கொண்ட பார்வையுமுடைய' தினமணி தலையங்கங்கள் ஒரு வரலாற்றுப் பதிவுப் பெட்டகம் செய்திகளுக்கு அப்பாலும் செய்திகளின் பாசாங்குகளையும் வெளிச்சம் போட்டு உலகுக்கு உரைக்கும் ஞாயிறு பத்திரிகையில் நான் முதலில் படிப்பது தமிழ்மணியும் குறிப்பாகக் கலா ரசிகனின் கட்டுரை கடைசியில் வரும் புதுக் கவிதையைக் குறைந்தது மூன்று முறை படிப்பேன். தமிழில் மத்திய மாநில அரசு பணிக்கான தேர்வுகள் எழுத வேண்டுமென்று நினைப்பவர்கள் ஆடம்பரம் இல்லாத நடுநிலை செய்திகளைப் படிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தேர்வு தினமணியாக மட்டுமே இருக்க முடியும். புத்தகம் வாங்க ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க முடியாதது திங்கள் தினமணி.
கட்டுரையாளர்: சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்,
மூத்த வழக்குரைஞர், தென்காசி