முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே ! - 47 : குமாரி சச்சு

ஏவி. மெய்யப்ப செட்டியார் நினைத்ததை எத்தவிதமான தவறும் செய்யாமல் செய்வார் அவரது மகன் எம்.சரவணன். இன்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் ஏவிஎம்.சரவணன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

ஏவி. மெய்யப்ப செட்டியார் நினைத்ததை எத்தவிதமான தவறும் செய்யாமல் செய்வார் அவரது மகன் எம்.சரவணன். இன்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் ஏவிஎம்.சரவணன். அவரது தந்தையை  "அப்பச்சி' என்று தான் அன்பாக அழைப்பார்கள். மருத்துவமனையில் உடல் நலக்குறைவினால் செட்டியார் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சரவணன் ராப்பகலாக கண் விழித்துத் தந்தையைக் கவனித்து கொண்டிருந்தார். ஒரு முறை தந்தையும் மகனும் மருத்துமனை அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஏவிஎம்  செட்டியார் அவர்கள் தனது மகனான சரவணனைப் பார்த்து, ""அதோ, அங்கே உள்ள குளியல் அறையின் விளக்கு தேவை இல்லாமல் எரிகிறது. நாம் ஏன் மின்சாரத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டும். போய் அணைத்து விட்டு வா'' என்றாராம். இதை சரவணன் தனது தந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். இதை சொல்லிவிட்டு மேலும் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: ""எதையும் என் தந்தை வீணாகச் செலவு செய்யமாட்டார். அதே விஷயம் தேவை என்றால், செலவைப் பற்றி கவலைப்படவும் மாட்டார். அவரது தாரக மந்திரம் ஒன்று உண்டு. "நீங்கள் செலவு செய்வது படத்தில் தெரிய வேண்டும். வீணான செலவை நாம் என்றும் செய்யக் கூடாது என்றுதான்  என் அப்பா சொல்வார்கள்''  என்று தனது தந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்லி இருக்கிறார் சரவணன். இது உண்மை என்பதை அவரது பணியாளர் ஒருவரும் எங்களிடம் கூறியிருக்கிறார்.

நான் ஒப்பந்தத்தில் வருடத்தில் இருந்தபோது ஓர் அலுவலகப் பணியாளர் ஒருவருடன் நாங்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் ஒரு சம்பவத்தைக் கூறினார். செட்டியார் வீண் செலவு செய்வதை எவ்வளவு நாசுக்காகக் கண்டித்தார் என்றார். இவர் ஒருமுறை அலுவலகப்  பணி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு நேர் எதிரே செட்டியார் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டு இருந்திருக்கிறார். இவர் ஏதோ வேலையாக வெளியே செல்ல வேண்டி வந்தது. ஒரு பத்து நிமிடங்கள் அந்த வெளி வேலையைச் செய்து விட்டு வந்து விடலாம் என்று சென்றுள்ளார். பத்து நிமிடங்கள் என்று நினைத்து சென்ற வேலை அரைமணி நேரமாக மாறி விட்டது. திரும்பவும் வந்து தன் இருக்கையில் அவர் அமர்ந்த வேளையில், அந்த அறை ஒரே புழக்கமாக இருப்பதை உணர்ந்து மேலே பார்த்திருக்கிறார். அப்பொழுது மின் விசிறி ஓடவில்லை. எழுந்து போட்டவுடன், செட்டியார் வந்து நின்றாராம். “

""நீங்கள் மின்விசிறியைப் போடுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் வீண் செலவு மட்டும் பண்ணாதீர்கள். அலுவலகத்தில் மட்டும் அல்ல; உங்கள் வீட்டில் கூடத்தான். நீங்கள் போகும்போது இந்த மின்விசிறியை அணைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி உள்ளாராம்.  அவர் சொல்ல, சொல்ல எவ்வளவு உன்னதமான மனிதர் செட்டியார் என்று எனக்குத் தோன்றியது. 

செட்டியார் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று சொல்வதற்கு இன்னுமோர் உதாரணம் சொல்லலாம். இது எனக்கு ராஜசுலோசனா அவர்கள் சொன்னது. "சகோதரி' என்று ஒரு படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற சந்தோஷ செய்தியை அன்று தான் அவரது மருத்துவர் கூறியிருக்கிறார். முதல் சில மாதங்கள் உடல் உபாதைகள் நிறைய வந்து, அவரைத் தொந்தரவு செய்திருக்கிறது. சில சமயம் ஓய்வு எடுத்து கொள்ள வைத்திருக்கிறது. கண்டிப்பு நிறைந்த செட்டியார்  ஒரு நாள், "" ஏன் இன்று இந்த காட்சிகளை எடுக்கவில்லை'' என்று கேட்டபோது ராஜசுலோசனாவின் நிலையை செட்டியாரிடம் சொல்லி இருக்கிறார்கள். அவர் உடனேயே சொன்னது தான்,  அவர் மீது ராஜசுலோசனாவிற்கும், அதை கேட்ட எனக்கும், செட்டியார் மீது உள்ள மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.  அவர் என்ன சொன்னார் தெரியுமா? ""ராஜசுலோசனாவிற்கு ஏற்ற விதத்தில் நீங்கள் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை நெடு நேரம் நிற்க வைக்காதீர்கள். அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த மாதிரி காட்சிகளை அவர்கள் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுங்கள். கர்ப்பமாக இருப்பவருக்கு ஏற்ற அளவில் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால்  அவர்களுக்கு உடல் உபாதைகள் இருக்கும். அவர்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது'' என்று சொன்னாராம். காரணம், கதையின் படி அவரது கணவராக நடித்தது நடிகர் பாலாஜி. அவர்கள், வேறு ஒரு பெண்ணிற்காக ராஜசுலோசனாவைக் கொடுமைப்படுத்துவது போல் காட்சிகள் உள்ளன. அந்த சமயத்தில் தான் செட்டியார் இப்படி சொல்லியிருக்கிறார் என்று ராஜசுலோசனாவே என்னிடம் சொல்லி, எவ்வளவு உயர்ந்த மனிதர் ஏவிஎம் செட்டியார் என்று கூறினார். 

இப்படிப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தில் நாம் நடிக்க போகிறோம் என்று சொன்னாலே அது மிகவும் பெருமையான விஷயம். இன்றளவும் என்னைப் பற்றி எங்கு பேசினாலும் ஏவிஎம் நிறுவனத்தில் நடித்தவள் என்று தான் முதலில் என்னைச் சொல்கிறார்கள். எப்போதுமே எல்லாவிதத்திலும் சரியாக நடப்பதில் ஏவிஎம் என்றுமே முதல் தர நிறுவனம் மட்டும் அல்ல;  சரியான நிறுவனமும் கூட என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடலாம். 

வருஷா வருஷம் ஏவிஎம் நிறுவனத்தில் எல்லோருக்கும் தீபாவளி போனஸ் கொடுப்பார்கள். அந்த வருஷம் நான் சேர்ந்த முதல் வருஷம். எல்லாருக்கும் கொடுத்தவர்கள், எனக்கு மட்டும் போனஸ் கொடுக்கவில்லை. எல்லாரும் என்னை போய் கேட்கச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அது சரியாகப்படவில்லை. நான் தயங்குகிறேன் என்று தெரிந்து என் சார்பாக ஒருவர், எல்லாருக்கும் போனஸ், கொடுக்கும் காசாளரை அணுகி, ""சச்சுவிற்கு போனஸ் கிடையாதா?'' என்று கேட்டு இருக்கிறார். ""சச்சுவிற்கு போனஸ் கிடையாது'' என்று காசாளர் சொல்லியவுடன், எனக்காக கேட்டவர், ""எங்களைப் போன்று அவரும் மாதச் சம்பளம் வாங்குபவர் தானே?''  என்று சொல்லியிருக்கிறார். “

""சச்சு உங்களைப் போல நிரந்தரப் பணியாளர் இல்லை. டெம்பரரி வேலை செய்பவர் தான். அதனால் அவருக்குப் போனஸ் கிடையாது'' என்று சொன்னார்களாம். இதைக் கேட்டவுடன் எனக்கு முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. அப்புறம் இதையே சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தபோது, அவர்கள் எடுத்த முடிவு சரி என்று எனக்கு தோன்றியது. இந்த விஷயத்தை செட்டியாரிடம் சொல்லவில்லை. காசாளர்தான் சொல்லியிருக்கிறார். அதுவும் நான் கேட்கவில்லை. எனக்காக வேறு ஒருவர் கேட்டது தான். நாங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தாலும், நாங்கள் நிரந்தரமாக வேலை செய்பவர் இல்லை. இரண்டு வருடத்திற்குப் பிறகு நான் அங்கு இருக்கப் போவது இல்லை. அப்படி இருக்கும் போது போனஸ், போன்ற விஷயங்களை எப்படி எனக்குத் தருவார்கள். இப்படி எல்லாம் நானே யோசித்துப் பார்த்து ஏவிஎம் சரியான முடிவுதான் எடுப்பார் என்று நான் புரிந்து கொண்டேன். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்' என்னும் குறள், எனக்கு நினைவிற்கு வந்தது. யார் யாருக்கு எந்த விதத்தில், எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்கள் ஏவிஎம் நிறுவனத்தினர் என்று மீண்டும் சொல்லாமல் சொன்னது இந்த சம்பவம்.      

மேலே சொன்னதற்கு எந்த சாட்சியும் இல்லை . ஆனால் சொன்ன நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை. ஆனால் இப்போது சொல்லப்  போகும் ஒரு நிகழ்ச்சிக்கு சாட்சியாக மிகப் பெரிய மனிதர் ஒருவர் நம்மிடையே இன்றும் வாழ்கிறார். 

அன்று நடந்த இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. ஒத்திகைக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் ஒப்பந்தபடி செல்ல வேண்டும் என்று தெரிந்ததனால் நான் சந்தோஷமாகச் செல்வேன். நடன ஒத்திகை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முதல் ஆளாகப் போய் நிற்பேன். எந்த ஒத்திகை என்றாலும் எனக்கு ஓகே தான். அதை எல்லாம் நான் மகிழ்ச்சியுடன் செய்தேன். ஒன்று மட்டும் எனக்கு மிகவும் சங்கடத்தைக் கொடுத்தது. தினமும் காலையில் 10 மணிக்கு படப்பிடிப்பிற்கு செல்வது போல் செல்ல வேண்டும். அப்படி சென்றால் ஒரு மணி நேரம், 11 மணி வரை reflector - ஐப் போட்டு என்னை வெய்யிலில் நிற்க வைப்பார்கள். அன்று உள்ள reflector (பிரதிபலிப்பான்) ரொம்ப கனமான ஒன்று. இந்த கனமான பிரதிபலிப்பான் ஒன்றல்ல இரண்டு இருக்கும். சில சமயம் மூன்றும் இருக்கும். இது எதற்கு என்றால் அன்று நான் நடிக்கப் போகும் படத்தில் நிறைய வெளிப்புறப் படப்பிடிப்பு இருக்கலாம். அதற்கு எனக்கு இந்த ஒத்திகை மிகவும் தேவை என்பதால் இதைச் செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன். வெளிபுறப் படப்பிடிப்பிற்கு நாம் போகும் போது இப்படித்தான் சில சமயம் வெயிலில் நிற்கவேண்டி வரும். சில சமயம் மணிக்கணக்காக இந்த நிகழ்வு நடக்கும். அப்பொழுது நான் அசெளகரியமாக நினைக்கக் கூடாது இல்லையா? அதுமட்டும் அல்ல, வெயிலில் நிற்கும்போது நம் மீது சூரிய ஒளி நேரடியாகப் பட இந்த பிரதிபலிப்பான் தான் உதவி செய்யும். இதை நம் மீது அடிக்கும் நிலையில் வைப்பார்கள். அப்பொழுது நாம் நம் கண்களைச் சுருக்கினால் படத்தில் அசிங்கமாகத் தெரிவோம். அப்படிப் படாமல் விலகப் பார்த்தாலோ கண்களுக்கு கீழ் கரும் வளையம் தெரியும். அப்படித் தெரிந்தால், அது படத்தில் மிகவும் சரியாக இருக்காது. அதனால் இதை பயிற்சியில் தான் நாம் சரி செய்ய வேண்டும். அதற்காக தான் இந்த பயிற்சி. இந்த பயிற்சியை நான் சரியாகச் செய்கிறேனா என்று என்னை கண்காணித்தது யார் தெரியுமா? இன்றும், என்றும் பிரபலமான இயக்குநர் ஒருவர். அவர் யார் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.