ஞாயிறு கொண்டாட்டம்

ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!: பாரதியாருக்காக தேசபக்திப் பாடல்

மதுரையில் முத்தையா பாகவதர் தங்கி இருந்த காலத்தில் அவரைச் சந்திக்க வரும்  நண்பர்களுள் குறிப்பிடத்தக்கவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். பாரதியார் இவரை விட 8 வயது சிறியவர். 

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

மதுரையில் முத்தையா பாகவதர் தங்கி இருந்த காலத்தில் அவரைச் சந்திக்க வரும் நண்பர்களுள் குறிப்பிடத்தக்கவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். பாரதியார் இவரை விட 8 வயது சிறியவர்.

பாரதியாரை ""ஏய் சுப்பையா வா, போ'' என்றுதான் முத்தையா பாகவதர் பேசுவாராம். அந்த அளவுக்கு இருவருக்கிடையே நெருக்கம் இருந்தது.

தான் இயற்றிய தேசபக்திப் பாடல் ஒன்றை முத்தையா பாகவதர் முன்பாக பாரதியார் பாடிக் காட்டினார். அதைக்கேட்டு அசந்து போன முத்தையா பாகவதர் "ஏதோ புதுமையான ஹிந்துஸ்தானி ராகம் போல் இருக்கிறதே... இவ்வளவு அருமையாக மெட்டமைத்து இருக்கிறாயே'' என்று பாராட்டி பாரதியாரை ஆரத்தழுவிக் கொண்டாராம்.

அப்பொழுது பாரதியார் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ""நீங்கள் அனைத்து தெய்வங்கள் மீதும் பாடுகிறீர்கள். ஒரு தேசபக்தி பாடல் பாடக்கூடாதா?'' என்று கேட்க பாரதியாரின் வேண்டுகோளை ஏற்று நான்கு தேசபக்தி பாடல்களைத் தமிழில் முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார்.

அவற்றில் ஒரு பாடலில் தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் எனும் கருத்தினை பாகவதர் தெரிவிக்கிறார். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே நம் நாட்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தனது தீர்க்க தரிசனத்தால் அவர் யூகித்திருக்கிறார்.

எஸ். ஜி. கிட்டப்பா முத்தையா பாகவதரிடம் சங்கீதம் பயின்று கொண்டிருந்தார். அவர் பாகவதரிடம் வந்து ""மேடை நாடகங்களில் திரைக்குப் பின்னால் இருந்து பாடிக்கொண்டே மேடைக்கு வரும் பொழுது பாடுவதற்கு ஏற்ப நிறைய உச்சஸ்தாயி சங்கதிகளுடன் பாடுவதற்கு ஏதாவது ஒரு பாடலைக் கற்றுக் கொடுங்களேன்'' என்று பாகவதரிடம் கேட்டார்.

""ஆண்டவன் தரிசனமே அடியார் வேண்டும் அனுபவமே'' என்னும் "ஜோன்புரி' ராகத்தில் அமைந்த மிக அற்புதமான பாடலை எஸ். ஜி. கிட்டப்பாவிற்காக இயற்றினார். அதில் தனது வழக்கமான ஹரிகேச முத்திரை இல்லாமல் கிட்டப்பாவிற்காக தனியாகப் பாடினார்.

ஒருமுறை அவரது சீடரான மதுரை மணி ஐயர், குருநாதர் முத்தையா பாகவதரிடம் ஒரு வேண்டுகோளுடன் வந்தார். ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாக மேற்கத்திய இசை பாணியில் ஏதாவது பாட வேண்டும் என்று விரும்புவதாகவும், அதற்கு ஏற்றாற்போன்ற ஸ்வரப்பிரஸ்தாரங்களைக் கற்றுத் தரும்படியும் கேட்டுக் கொண்டார். மதுரை மணி ஐயருக்காக முத்தையா பாகவதர் மெட்டமைத்துக் கொடுத்ததுதான், இப்போது "இங்கிலீஷ் நோட்' என்று அறியப்படும் மெட்டு. மதுரை மணி ஐயர் கச்சேரி என்றால், ரசிகர்கள் "நோட்' பாடும்படி குரலெழுப்புவார்கள். அப்படி பிரபலம்.

அதென்ன "இங்கிலீஷ் நோட்' என்று மலைக்காதீர்கள். "தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் வெள்ளைக்காரர்களுக்காக நாதஸ்வரத்தில் சிக்கில் சண்முகசுந்தரம் வாசிப்பதாக வருமே, அந்த மேல்நாட்டு சங்கீதம்தான், முத்தையா பாகவதரால் இசையமைக்கப்பட்ட "இங்கிலீஷ் நோட்'. இப்போது, வாத்திய இசைக் கச்சேரிகளில் இன்றியமையாத உருப்படியாகிவிட்டது, பாகவதரின் அந்த ஸ்வரக் கோர்வை.

1920-இல் முத்தையா பாகவதர் மதுரையில் இருக்கும்போது தொடங்கியதுதான் தியாகராஜ சங்கீத வித்யாலயா. அதில் அவரது மாணவர்களாக இருந்து படித்தவர்கள்தான் மதுரை மணி ஐயர், சங்கர சிவம் உள்ளிட்டோர். பிற்காலத்தில் அதே தியாகராஜ சங்கீத வித்யாலயாவில், சங்கர சிவத்தின் சீடராக இசை பயின்றவர் மூத்த சங்கீத வித்வான் டி.என். சேஷகோபாலன். முத்தையா பாகவதரின் குருபரம்பரையில் வந்தவர் என்பதால்தானோ என்னவோ, அவரும் ஹரிகதா காலúக்ஷபம் செய்ய முற்பட்டிருக்கிறார்.

ஒருமுறை முத்தையா பாகவதர் கச்சேரிக்கு கிளம்புவதற்காக தடபுடலாக அலங்காரம் செய்து கொண்டு புறப்பட்டார். தன் வீட்டு வாசற்படியிலே கை வைத்த பொழுது அவர் விரலில் ஒரு தேள் கொட்டிவிட்டது. வலியால் துடித்து விட்டார்.

அந்த நேரத்தில் அவருக்கு தேளின் விஷத்தை இறக்கக் கூடிய சக்தி "வராளி' ராகத்திற்கு உண்டு என்பது நினைவிற்கு வந்தது. அதை சோதித்துப் பார்ப்பது என்று முடிவெடுத்தார். உடனே அந்த வலியையும் பொருட்படுத்தாமல் 10 நிமிடங்களுக்கு "வராளி' ராகத்தை விரிவாக ஆலாபனம் செய்தார். அந்த விஷம் எங்கு போயிற்று என்றே தெரியவில்லை. எத்தகைய மன வலிமையையும் இசைப் புலமையும் அவருக்கு இருந்தன என்பதற்கு இது ஓர் அடையாளம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

SCROLL FOR NEXT