முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்த ஹீரோ!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் நடைமேடையில் அமர்ந்து காலணி மற்றும் கிரிக்கெட் உபகரணங்களைத் தைக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பவர் 50 வயதான பாஸ்கரன்.

Updated On : 8 மார்ச், 2020 at 7:46 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:37 PM

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் நடைமேடையில் அமர்ந்து காலணி மற்றும் கிரிக்கெட் உபகரணங்களைத் தைக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பவர் 50 வயதான பாஸ்கரன். பல பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விரும்பும் ஹீரோ இவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.  

யார் இந்த பாஸ்கரன்?

1993-ஆம் ஆண்டு நடந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது முதல் முறையாக காலணி தைப்பவராகப் பணியாற்றத் தொடங்கியவர் தான் இந்த பாஸ்கரன். கிரிக்கெட் ரசிகர்கள் பலர் மைதானத்தில் நுழைய தவம் கிடக்கும் நிலையில், எளிதாகக் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்று வீரர்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து கொள்ளும் அளவு முக்கியமான நபராகத் திகழ்கிறார். 

Advertisement

பாஸ்கரனிடம் பேசிய போது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்: 

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். ஏழாம் வகுப்பு வரை படித்தேன். முதலில் பழ வியாபாரம் செய்தேன். ஆரம்பத்தில் என்னுடைய மாமனார் தான் சேப்பாக்கத்தில் காலணி தைத்துக் கொண்டிருந்தார்.

அவர் பல ஆண்டு காலமாக இந்தத் தொழிலைச் செய்து வந்தார். அவரிடமிருந்து தான் வேலையைக் கற்றுக்கொண்டேன். நான் shoe தைப்பது gloves கிழிந்தால் சரி செய்வது  bat sticker removing, helmet strap fix   செய்வது   போன்ற அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டேன்.  மாமனார் மறைவுக்கு பின் 1993-ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தின் வாசலில்  சிறிய கடை ஒன்றை அமைத்துக்கொண்டேன். நடைமேடையில் அமர்ந்து இந்த வேலைகளைச் செய்து வருகிறேன். போலீசார் எனக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

என்னுடைய மாமனார் கிரிக்கெட் உபகரணங்களைச் சரி செய்யும் வேலை தெரியும். ஆனால் அவரிடம் நேர்த்தி இல்லை. எனக்குத் தொழில் மேல் இருக்கும் அக்கறையைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் எனக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கு cobbler ஆக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.

அன்று முதல் இன்றுவரை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் cobbler ஆகப் பணியாற்றி வருகிறேன். அசாருதீன் முதல் இன்று இருக்கும் விராட் கோலி வரை அனைவரின் shoes. Gloves batகளில் வேலை செய்து கொடுத்து பாராட்டு
களைப் பெற்று இருக்கிறேன். 

மேட்ச் நடக்க போகிறது என்றால் எனக்கு என்று அலுவலகத்தில் இருந்து ஐ.டிகார்டு கொடுப்பார்கள். மேட்ச் முந்தையப் பயிற்சியின் போது நான் மைதானத்தில் இருந்து வீரர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்பேன். மேட்ச் நடக்கும் போது வீரர்களின் உடைமாற்றும் அறையிலேயே உட்கார்ந்து என்னுடைய வேலையைச் செய்வேன். அப்போது மட்டும் நாள் ஒன்றுக்கு எனக்கு ஊதியமாக ஆயிரம் ரூபாய் கிரிக்கெட் அசோசியேஷன் வழங்குகிறது. 
ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல வீரர்கள் என்னுடைய வேலையைப் பெரிதாகக் கருதி என்னைப் பார்த்தவுடனே சிரித்துப் பாராட்டிவிட்டுப் போவார்கள். 

தோனி கேப்டனாக இருந்த போது அவருடைய shoeவை சரி செய்து கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் you are doing a great job என்று பாராட்டினார். ஒரு முறை எனக்குப் பண உதவி செய்தார். ஆனால் யாரிடமும் பண உதவி என்று கேட்டதில்லை. அவர்களாக விரும்பி அன்புடன் தந்தால் வாங்கிக்கொள்வேன்.

இதுவரை ஏழு இந்திய கேப்டன்களுக்கு வேலை செய்து கொடுத்திருக்கிறேன். அனைவருமே என்னை மறக்கமாட்டார்கள். கிரிக்கெட் வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களைக் கிரிக்கெட் வாரியமே அவ்வப்போது புதிதாகக் கொடுப்பார்கள். ஆனால் வீரர்கள் சில மேட்சுகளில் சதம் அடிக்கும் போது எந்த gloves. Shoe. Helmet அணிந்தார்களோ அதை சென்டிமெண்ட்டாக நினைத்து  தொடர்ச்சியாக அணிவார்கள். கிழிந்தாலும் என்னைப் போன்ற நபர்களை வைத்து சரி செய்து அதைத்தான் விரும்பி அணிந்து விளையாடுவார்கள். 

உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்?
எனக்கு ஹிந்தி, தெலுங்கு, தமிழ் தெரியும். ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்வேன். ஆனால் திரும்பி பதில் அளிக்கத் தெரியாது. தோனி என்னிடம் மிகவும் விரும்பி பேசுவார். இப்போது மைதானத்தின் உள்ளே தான் பயிற்சியில் இருக்கிறார்.

உங்கள் வருமானம் தான் என்ன?

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மற்ற நாட்களில் செருப்பு, மற்றும் கிரிக்கெட் உபகரணங்களைச் சரி செய்வது தான் வேலை. அப்போது ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் எவ்வளவு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

உங்கள் குடும்பம் பற்றி?

எனக்கு மூன்று குழந்தைகள். இரண்டு மகன்கள், ஒரு மகள். இந்த காலணி
களைத் தைக்கும் பணத்தை வைத்துதான் அவர்களை வளர்த்து ஆளாக்கினேன். இப்போது இரு மகன்களும் தனியார் வங்கியில் பணியாற்றுகிறார்கள். சென்னை சிட்டி சென்டர் அருகில் என்னுடைய வீடு உள்ளது. மாதம் எட்டாயிரம் ரூபாய் வாடகையில் இருக்கிறேன்.

நிரந்தரமாகக் கடை வைக்க முயற்சிக்க வில்லையா? 

ஆரம்பத்தில் சேப்பாக்கத்தில் நான்கு கடைகள் மட்டும் இருந்தது. இன்று நூறுக்கும் அதிகமான கடைகள் வந்துவிட்டன. சிறிய அளவில் கடை வைக்க வேண்டுமென்றால், ஐந்து லட்சத்திற்கும் மேல் கேட்கிறார்கள். 

அந்தளவு என்னிடம் வசதியில்லை. கடவுள் கொடுத்தது போதும் என்ற மன நிம்மதியோடு வாழ்ந்து வருகிறேன், என்று வானத்தைப் பார்த்து வணங்குகிறார் பாஸ்கரன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.