ஞாயிறு கொண்டாட்டம்

தனிமைப்படுத்துதல் மட்டுமே தீர்வு!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க  மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஜி. அசோக்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க  மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  சிலர் களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விமல், தனது சொந்த ஊரில் கரோனா தடுப்புப் பணியில் தன்னுடைய கிராமத்து இளைஞர்களுடன் களத்தில் இறங்கினார்.

விமல் முன்னணி நடிகராக இருந்தாலும் சொந்த ஊரோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த  விமல்,கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.  படத்தில் மட்டுமே நடிக்காமல் நிஜ வாழ்வில் தன் கிராமத்தில் கரோனா களப்பணியில் நடிகர் விமல் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.விமலின் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன.

எப்போதுமே சொந்த ஊரோடு அதிக நெருக்கமாக இருக்கிறீர்களே...

நமக்கு சொந்த ஊர் தான் எல்லாமே. பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கேதான். வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தோம்.   என் பெற்றோர் உட்பட உறவினர்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள். எனக்கு சென்னையும் பிடிக்கும். அதே நேரத்தில் சொந்த ஊரை  விட்டுத் தர மாட்டேன்;  சொந்த ஊரையும் பிடிக்கும்.

உங்கள் பகுதியில் நீங்கள் செய்த பணிகள் என்ன?

நான் ஒன்றுமே செய்யவில்லை. எங்கள் பகுதி சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட சின்ன முயற்சி அவ்வளவுதான்... இப்போது எல்லாப் பகுதிகளுக்கும் அரசாங்கமே சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். பெரிய பெரிய உபகரணங்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். நான் இப்போது வீட்டுக்குள் இருக்கிறேன். அதுதான் இந்த விஷயத்தில் நாம் மேற்கொள்ளும் பெரிய உதவி. நாட்டுக்கான சேவை என்று கூட சொல்லலாம் . என்னால் முடிந்த அளவுக்கு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

மக்களிடம் விழிப்புணர்வு எப்படி இருக்கிறது....

இப்போது நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. முதல் மூன்று  நாட்கள்  சரியான புரிதல் இல்லை. விடுமுறை என்று ஜாலியாகச் சுற்றினார்கள். பின்னர் காவல்துறை அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாளாக நாளாக இந்த நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் பகுதியை பொருத்தவரை அமைதியாக இருக்கிறது. யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதில்லை.

மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்...

எதுவுமே செய்யாமல் இருந்தாலே போதும். பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றாமல் இருந்தாலே போதும். குறிப்பாக இளைஞர்கள் தான் அதிக அளவில் வெளியே வருகிறார்கள். ஏதாவது காரணம் சொல்லிவிட்டு சுற்றுகிறார்கள். அவர்களும் மாறவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நமக்காக தான். ஒரு நபருக்கு வந்தால் அந்த சுற்று வட்டாரமே பாதிக்கப்படும். அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடும். எனவே நமது நலனிலும் நமது சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் தயவுசெய்து வீட்டிலேயே இருக்க வேண்டும். இதை இளைஞர்கள் புரிந்து கொண்டால் போதும்.

கரோனா விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் பணிகள் பற்றி...

மிக மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கண்ணுக்குத் தெரியும் திருடன் என்றால் விரட்டி பிடித்து விடலாம். கண்ணுக்கே தெரியாத கிருமியை என்ன செய்து விரட்டி அடிப்பது?

கரோனா என்பது கண்ணுக்குத் தெரியாத பேய். அதை விரட்ட நாம் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஒன்றே சரியான வழி. எனக்கெல்லாம் வராது என்று யாரும் சொல்ல முடியாது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிறு கவனக்குறைவு கூட வைரஸ் கிருமிகளை வரவழைத்து விடும். அதனால் நம்மை நாமே தனிமைப்படுத்துதல் மட்டுமே தீர்வாக இருக்கும்.

ஒரு நடிகராக இப்படி வீட்டுக்குள் முடங்கி இருப்பது பாதிப்பை ஏற்படுத்துமே...

ஆமாம். ஆனால் என்ன செய்வது சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. தொடர் படப்பிடிப்புகளால் குடும்பத்துடன் அதிக நேரம் கழிக்க முடியவில்லை இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பத்துடன் சொந்த ஊரில் இருப்பது மகிழ்ச்சி தான். சேர்ந்து சாப்பிடுவது சேர்ந்து விளையாடுவது என்று பொழுது போகிறது சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளுக்குமே இழப்புதான்.  
ஆனால் நமக்காக நாம் இதை தாங்கிக் கொள்ள வேண்டும். அரசு அளிக்கும் சலுகைகளை சரியான நபர்கள் பெற்று பயன் அடைய வேண்டும்.

 சுகாதாரத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் வீடு வீடாக வந்து ஆய்வு செய்தார்கள். சுத்தம் செய்கிறார்கள். கிருமி நாசினி தெளித்தார்கள். இதுபோல அல்லும் பகலும் நமக்காக உழைப்பவர்களுக்கு நாம் மேற்கொண்டு பணிச்சுமையைக் கொடுக்காமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும். 

அதற்கு நாம் வீட்டுக்குள்ளேயே இருந்தாலே போதும் நம் நலனுக்காக தான் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

என் மனைவி ஒரு மருத்துவர். அவரது தோழியின் கணவரும்  மருத்துவர். அவர் இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கே இங்கே என்று கேள்விப்பட்ட இந்த நோய் நமக்கு நெருங்கியவர்களுக்கு வரும்போது நமது அச்சம் இன்னும் அதிகரிக்கிறது. எனவே மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT