ரோஜா மலரே! - 39: குமாரி சச்சு
எங்கள் குழுவில் இருந்த ஒரு புகழ் பெற்ற மனிதரை பற்றி இங்கே நான் குறிப்பிட வேண்டும். அவர்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தவர். எங்களின் பெரிய அண்ணன் என்றும் சொல்லலாம்.
எங்கள் குழுவில் இருந்த ஒரு புகழ் பெற்ற மனிதரை பற்றி இங்கே நான் குறிப்பிட வேண்டும். அவர்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தவர். எங்களின் பெரிய அண்ணன் என்றும் சொல்லலாம். அவர் எங்கள் குழுவில் இன்றியமையாத அங்கமாகத் திகழ்ந்தார். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடு என்றால் அவர் சொன்னதுதான் சட்டம். நாங்கள் எல்லோரும் அவர் என்ன கூறுகிறாரோ அதை முழுமையாகக் கேட்டு நடப்போம். இசைத்துறையில் அவர் ஒரு வித்தகர். அதே போல் எங்கள் குழுவை வழி நடத்திச் செல்வதில் சிறந்தவர். எங்கள் குழுவின் பாதுகாவலர். அவர்தான் புகழேந்தி. கே.வி.மகாதேவன்உதவியாளர்.
புகழேந்திக்கு வேறு பெயரும் உண்டு. அது தான் அப்பு. அந்தக் கால பாய்ஸ் கம்பெனியில் முதன் முதலில் நடிகராக நுழைந்தவர். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெண் வேடமிட்டு அவருடன் நாடகங்களில் நடித்தவர். அந்த சமயத்தில் அவருக்கு 10-12 வயதுதான் இருக்கும். அந்த விஷயம் மறைந்த புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு தெரியும். நாடக மேடையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அவர் இசைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது எங்களுடன் சேர்ந்த பின்னர் தான் எங்களுக்குத் தெரியவந்தது. அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது மிருதங்க வித்வான் நாகப்பன். இவர் சிறப்பாக மிருதங்கம் வாசிப்பவர். நாங்கள் அந்த சமயத்தில் ஒரு சிறந்த இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருந்தோம். காரணம், எங்களுடன் அன்று ஹார்மோனியம் வாசித்த ஒருவர் வேறு ஒரு குழுவிற்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலை. அதனால் நாங்கள் வேறு ஒருவரைத் தேட ஆரம்பித்தோம்.
Advertisement
எங்கள் குழுவிற்கு வரும் நபர் எங்களுக்கு மேடையில் ஹார்மோனியமும் வாசிக்க வேண்டும். நடனத்திற்கு வேண்டிய பாடலை இசையமைக்கவும் வேண்டும். எங்கள் இசைக்குழுவை வழி நடத்திச் செல்ல ஒரு சிறந்த இசை அமைப்பாளராக இருந்தால் எங்களுக்கு சரியாக இருக்கும் என்று நாங்கள் அன்று நினைத்தோம். தெய்வாதீனகமாக மிருதங்க வித்வான் நாகப்பன் புகழேந்தியை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது அறிமுகம் கிடைக்க, நாங்கள் மிக சந்தோஷம் அடைந்தோம்.
"வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் வரும் 7 பாடல்களும் சிறப்பாக இருக்கும். அனைத்தும் தேன் சிந்துபவை. நடிகைகள் பத்மினியும், வைஜெயந்திமாலாவும் ஆடும் போட்டி நாட்டியம் உலகப் புகழ் பெற்றது. வில்லன் வேடத்தில் வரும் பி.எஸ்.வீரப்பா சொல்லும் "சபாஷ், சரியான போட்டி' என்ற வசனம் இன்றுவரை பெயர் பெற்றது. அந்தப் பாடல்தான் "கண்ணும் கண்ணும் கலந்து' என்ற பாடல். போட்டி நடன பாடலும் மிகவும் புகழ் பெற்றது. பல விதமான விஷயங்களை அந்தப் பாடலில் நாம் கண்டும், கேட்டும் மகிழலாம். இந்தப் பாடலின் இடையில் ஜதி வரும், அந்தப் பாடலுக்கு மிருதங்கம் வாசித்தவர் நாகப்பன் தான். எங்கள் மேடையிலும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் மிருதங்கம் வாசிப்பது நாகப்பன் தான்.
அன்று நாங்கள் மயிலாப்பூரில்தான் இருந்தோம். இதே மயிலாப்பூரில் தான் பல்வேறு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். குறிப்பாக இசைத்துறையில் உள்ள பல ஜாம்பாவான்கள் எல்லோரும் அன்று இங்குதான் வசித்து வந்தார்கள். மிருதங்க வித்வான் நாகப்பனும், அதே மயிலாப்பூரில் தான் வசித்து வந்தார். எங்களுக்கும் அவர் மிருதங்கம் வாசிப்பதால், எங்கள் தேவை அவருக்கும் தெரிந்தே இருந்தது.
ஒரு நாள் எங்களிடம் வந்து, கவலைப்படாதீர்கள், புகழேந்தி என்ற ஒருவர் இருக்கிறார். மிகவும் திறமைசாலி. அவரை கூட்டிக் கொண்டு வருகிறேன் நமது குழுவிற்கு ஏற்றவர் அவர், என்று சொன்னார். ஒரு நாள் இசை அமைப்பாளர் புகழேந்தியை அறிமுகம் செய்து வைத்தார். புகழேந்தி அப்பொழுதுதான் நாடகத்தில் இருந்து வெளியே வந்திருந்தார். திரை இசை திலகம் கே.வி.மகாதேவனுடன் அப்பொழுதுதான் சேர்ந்திருந்தார். அவரது தாய் மொழி மலையாளம் என்றாலும், தமிழில் பாட்டு எழுதும் அளவுக்கு திறமைசாலி. உண்மையாக உழைப்பவர்.
பின்னர் பிஸியாக மாறிய பிறகும் எங்கள் நடன நிகழ்ச்சி என்றால் ரெக்கார்டிங்கில் சொல்லி விட்டு வந்து விடுவார். அவருக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும் என்று நாங்கள் எல்லோரும் ஆசைபட்டோம். சேது என்பது அவரது மனைவி பெயர். கேரளாவில்தான் அவருடைய திருமணம் நடந்தது.
சென்னையில் அவருக்கு ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நானும் என் அக்கா மாடி லட்சுமியும் முடிவு செய்து, நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டலில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினோம்.
எல்லாமே சரியாக நடந்திடுமா என்ன? திடீரென்று இசைக்குழுவில் ஒருவர் வரவில்லை என்றால், மாற்றாக உடனேயே வேறு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, அவருக்குப் பயிற்சியும் கொடுத்து, எந்தப் பிரச்னையை எங்களுக்குத் தெரியாமல் சாமர்த்தியமாக குழுவை, தலைவராக இருந்து வழி நடத்தியவர் புகழேந்தி அண்ணா.
ஒரு கட்டத்தில் கே.வி.மகாதேவனுக்கு நிறையப்படங்கள் வரும் போது, எப்படி எங்களிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தார். கே.வி.மகாதேவனுக்கு புகழேந்தி கூடவே இருக்க வேண்டும். அவர் இல்லை என்றால் முடியாது. இவர்தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இவர்தான் இசை கலைஞர்களை ஒன்று சேர்ந்து conduct செய்யவேண்டும். பாடகர்களுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடையிலேயே ஒருமுறை, இசை அமைப்பாளர் புகழேந்தியைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.
எப்படி "சங்கராபரணம்' படத்தின் பாடல்களைப் பாடும் போது, எப்படிப் பாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் என்று பெருமையாகச் சொல்லியுள்ளார். காரணம், அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் கர்நாடக இசையின் ராகங்களை ஒட்டியே அமைக்கப்பட்டது என்றும், எப்படி பாடினால் சரியாக இருக்கும் என்றும் புகழேந்தி சொல்லிக் கொடுத்தார் என்றும் சொல்லி உள்ளார். இப்படி கே.வி.மகாதேவனுக்கு எல்லாமுமாக இருந்தவர் புகழேந்தி.
நடன நிகழ்ச்சி மிக முக்கியம் தான். ஆனால் சினிமா அதை விட ஒரு படி மேலே போய், நமக்கு பேர் கொடுக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அது கிடைக்கும் போது அதை தக்க வைத்து கொள்ள வேண்டும். இன்று துணை, இணை இசை அமைப்பாளராக உள்ளவர் நாளையே இசை அமைப்பாளராக உயர வாய்ப்பு வரும். அப்படி புகழ் வரும் போது நாம் அதை உபயோகபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதால், ஒரு கட்டத்தில் நாங்களே அவரை அழைத்து, ""நீங்கள் மிகவும் திறமைசாலி. சினிமா உங்களை அழைக்கும் போது போகாவிட்டால், நமக்கு அது நஷ்டம். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கள் குழுவில் வந்து இணைந்து கொண்டு, ஹார்மோனியம் வாசிக்கலாம்.
முதலில் உங்கள் முன்னேற்றம் தான் எங்களுக்கு முக்கியம். போய் சாதித்து விட்டு வாருங்கள்'', என்று சொல்லி அனுப்பி வைத்தோம். உண்மையிலேயே புகழேந்தி எங்களின் குழுவில் இணைந்ததால் நாங்கள்தான் மகிழ்தோம் என்று சொல்லலாம்.
இன்றும் அவரை நினைக்காமல் நான் இல்லை. அவருக்கு மூன்று பிள்ளைகள். இன்று புகழேந்தியும், அவரது மனைவியும் இல்லை என்றாலும், அவரது வாரிசுகள் எல்லோரும் இன்றும் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள். ஒருமுறை கே.வி.மகாதேவன், உடல் நிலை சரி இல்லை. அன்று அவரிடம் பல்வேறு பெரிய படங்கள் இருந்தன.
அந்தப் படங்கள் அவரது இசைக்காகக் காத்திருந்தன. அவரது உதவியாளராக இருந்த புகழேந்தி தான் எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லாவற்றையும் கே.வி.எம் இருந்தால் எப்படி செய்வாரோ, அப்படியே எல்லாவற்றையும் கவனித்து முடித்து கொடுத்தார்.
உடல் நிலை சரியாகி பின்னர் கே.வி.எம். வேலைக்கு வந்த போது எல்லாம் சரியாக செய்யப்பட்டு உள்ளதைப் பார்த்து புகழேந்தியை பாராட்டினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கையால் தமிழ் நாடு அரசின் உயர்ந்த விருதான கலைமாமணி விருதும் வாங்கி உள்ளார் புகழேந்தி. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உதவியாளராக இருந்த சங்கர் கணேஷ், தனி இசை அமைப்பாளர்கள் ஆனார்கள்.
ஜி.கே. வெங்கடேஷ் உதவியாளராக இருந்த இளையராஜா ஒரு காலகட்டத்தில் இசையமைப்பாளராக உயர்ந்தார். ஆனால் கே.வி.மகாதேவன் உதவியாளராக இருந்த புகழேந்தி அவருடன் இணைந்த பிறகு, ஏன் தனியாக இசை அமைக்கவில்லை? காரணத்தைப் புகழேந்தி சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர் என்னசொன்னார்..
(தொடரும்)
சந்திப்பு: சலன்