இங்கே போயிருக்கிறீர்களா?
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. கடந்த 1855-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் "மெட்ராஸ் பூங்கா' என்ற பெயரில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டது. பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-இல் வண்டலூருக்கு மாற்றப்பட்டது.
தற்போது 1490 ஏக்கர் பரப்பளவில் பூங்கா மிகப் பிரம்மாண்டமாக விரிந்துள்ளது. தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பையும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா பெற்றுள்ளது.
இப்பூங்கா பரப்பளவில் பெரியது என்பதால் சைக்கிளில் சுற்றி பார்க்கலாம். இதற்காக சைக்கிள்கள் வாடகைக்குக் கிடைக்கும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்குப் பேட்டரி கார் வசதியும் உண்டு.
சென்னை வண்டலூரில் இருக்கும் அண்ணா உயிரியல் பூங்காவைப் பொருத்தமட்டில் தற்சமயம் அங்கு 2600 விலங்குகள் உள்ளன. அவற்றுள் 25 பெரிய புலிகள், ஆறு புலிக்குட்டிகள் மற்றும் 17 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும்.
குறிப்பாக நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு சிறப்பு வாய்ந்தது. கோடைக் காலங்களில் யானைகளுக்கு ஷவர் குளியல் அளிக்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குவிந்துவிடுவர்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும். வாரந்தோறும் செவ்வாய் கிழமை பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், கோடை விடுமுறையின் போது, எல்லா நாட்களிலும் பூங்கா திறந்திருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற இடம்.
மேலும் வன உயிரினங்களை ஆன்லைனில் கண்டுகளிக்கும் புதிய வசதியையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக "லைவ் ஸ்டீரிமிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.