"மூச்சைப் பிடித்துப் பாடல்களைப் பாடி வந்த பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம், மூச்சை நிரந்தரமாக நிறுத்தி இறவாப் பாடலாக மாறியுள்ளார்.. . தமிழ்நாட்டில் மக்கள் சுவாசிப்பது காற்றை மட்டுமல்ல, எஸ். பி. பியின் பாடல்களையும்தான்..' என்று சொல்லும் "ஆலயா' ஸ்ரீராமனுக்கு எஸ்.பி.பி 1992-ஆண்டில் இருந்து பழக்கம்.
ஸ்ரீராமன் நடத்தும் "ஆலயா' ஒலிப்பதிவுக் கூடத்தில் சுமார் 3200 பாடல்களைப் பாலு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். இந்த எண்ணிக்கையில் எல்லா மொழி திரைப்படப் பாடல்களும், தமிழ், தெலுங்கு கன்னட, சம்ஸ்கிருத மொழிகளில் பக்தி பாடல்களும் அடங்கும். சம்ஸ்கிருதத்தில் பாலு சுலோகங்களைப் பாடியுள்ளார். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய, கிறித்துவ பக்திப் பாடல்களையும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாலு பாடியுள்ளார்.
மலையாளத்தில் பாடுவது சிரமமான விஷயம் என்பார். திரைப்படங்களுக்கான டப்பிங் குரலும் "ஆலயா'வில் பதிவு செய்துள்ளார்.
""நான் முதன் முதலாக 1992 வாக்கில் "கிரிதாரி' ஆல்பத்திற்காக பாலுவை சந்தித்தேன். பாடலை சென்னை தொலைக்காட்சியின் அன்றைய செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி எழுதியிருந்தார். எனக்காக சுமார் முப்பது பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அப்போது எனது ஸ்டுடியோ கோடம்பாக்கத்தில் இருந்தது. பாலுவுக்கு எனது ஸ்டுடியோ பிடித்துப் போகவே தனது ஒலிப்பதிவு வேலைகளுக்காகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார்.
எனது ஒலிப்பதிவு கூடத்தில் ஒரு நாளைக்கு 14 பாடல்கள் வரை பதிவு செய்துள்ளார். 65 வயதுக்குப் பிறகும் நாளுக்கு 8 பாடல்களைப் பதிவு செய்வார். காலையில் ஸ்டுடியோவுக்குள் நுழையும் போதே "கருமமே கண்ணாக' நுழைவார். யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டார். பாடல்களைப் பாடி முடித்ததும், பாலு இன்னொரு அவதாரம் எடுப்பார் . அரை மணி நேரம் அரட்டை, கேலி கிண்டல் செய்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போவார். அவரது அரட்டைக்காக நாங்கள் காத்துக் கிடப்போம் .
ஒவ்வொரு மாதத்திலும் பாதி நாட்கள் பாலு எனது "ஆலயாவில்' செலவழித்திருக்கிறார். பாலு 2014-ஆம் ஆண்டு வரை எனது ஒலிப்பதிவுக் கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டது எனது பாக்கியம். 2014-இல் எனது ஸ்டுடியோவை கோடம்பாக்கத்திலிருந்து மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடனே வேறு இடத்தில் நிறுவ முடியவில்லை. இடைவெளி ஏற்பட்டதால், பாலு தனது வீட்டு மாடியில் சொந்தமாக ஒரு ஸ்டுடியோவை உருவாக்கிக் கொண்டார்.
அவர் ஸ்டுடியோவில் தனது எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார். ஆனாலும் எங்களது நட்பு தொடர்ந்தது. 2019 -இல் கே.கே நகரில் ஸ்டுடியோவை மீண்டும் தொடங்கிய போது பாலுவை அழைத்துத் துவங்க முடிவு செய்திருந்தேன். அவரும் ஒத்துக் கொண்டிருந்தார். அன்று அவரது தாயார் இறந்ததினால் அவரால் வரமுடியவில்லை.
பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என்று பன்முகம் கொண்டிருந்தவர் பாலு தான். பாடும் ஒவ்வொரு பாடலைப் பற்றிய தகவல்களையும் தனது நோட்டுப் புத்தகத்தில் பாடல் வரிகளுடன் தெலுங்கில் எழுதி வைத்திருப்பார்.
ஒலிப்பதிவு செய்த நாள், தேதி, இடம், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இயக்குநர், படத்தின் பெயர், ஹீரோ யார்.. யாருக்காகப் பாடுகிறார்.. எந்த சூழ்நிலையில் பாடலைப் பாட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் ஒரு புறத்தில் எழுதி வைப்பார். மறுபக்கத்தில் பாடல் வரிகளை (நாங்கள் எங்கள் பாஷையில் "சாகித்தியம்' என்போம். அந்த வரிகளில் பல நிறங்களில் குறியீடுகளை இடுவார். ஸ்வரங்களை குறிப்பிடுவார். எங்கே அழுத்தம் தர வேண்டும், எங்கே மூச்சையும் பிடிக்க வேண்டும், எங்கே மூச்சை விட்டு இழுக்க வேண்டும், எந்த உணர்வுடன், (காதல், சோகம், ஹாஸ்யம்) என்பதையும் குறியீடு மூலம் "சிட்டை' செய்வார்.
அந்தக் குறியீடுகள் பாலுவுக்கு மட்டுமே புரியும். .ஒருமுறை "இவை என்ன' என்று அவரது டைரியைக் காட்டி கேட்ட போது பாலு விளக்கினார். பாடலுக்காக தனது டிராக்கைப் பதிவு செய்வதில் துல்லியமாக இருக்க அவருக்குப் பெரிதும் உதவியது, அந்த டைரி தான்.
பல நடிகர்களுக்கும் பல ஏற்ற இறக்கங்களில் பொருத்தமாகப் பாடி வந்தாலும், அனைவருடனும் அன்பாகவும் சகஜமாக ஒரே அலைவரிசையில் பழகும் பக்குவமான விசால இதயத்திற்கு சொந்தக்காரராக எஸ். பி. பி இருந்தார்'' என்கிறார் ஸ்ரீராமன்.
உயிரைக் கொடுத்துப் பாடிய பாடல், படத்திலிருந்து தூக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அந்தப் பாடல்களுக்காக அவர் சண்டை போட்டதுமில்லை.
ஆரம்பக் காலத்தில் தனக்குப் பாட வாய்ப்புகளை வழங்கிய பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு பாத பூஜை செய்து நெகிழ்ந்த போது உணர்ச்சி வசப்படாத ரசிகர்கள் இல்லை .
கமல்-ரஜினி என உச்ச நட்சத்திரங்களுக்குப் பாடிக் கொண்டிருந்தபோது கூட, சக பாடகரான மனோவை வளர்த்து விட தவறவில்லை. ""பாலுண்ணா எப்பவும் மத்தவங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர். நான் பாடுன பாட்டுல பாதி அவர் சிபாரிசு செஞ்சதுதான். ரஜினிக்கு "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா....' அப்படிப் பாடினதுதான். யாருக்கு அப்படி ஒரு மனசு வரும்!'' என்று மனோவே நெகிழ்ந்து சொல்கிறார்.
கொடுத்ததை அப்படியே பாடுபவர் அல்ல பாலு. சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலம் பாடலை செழுமைப்படுத்தும் வித்தைகள் தெரிந்தவர்.
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், அனிருத் என்று காலங்கள் கடந்து பயணிக்கும் குரல் பாலுவுடையது.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் இளையராஜா - எஸ்.பி.பி. பேசாமல் இருந்து வந்தனர். இரு இசை மேதைகளும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் மக்கள் முன் தோன்றியது இரு தரப்பு ரசிகர்களுக்கும் அத்தனை நெகிழ்ச்சி.
ஒரு கட்டத்தில் நடிகர் மோகன் நடித்த அத்தனை படங்களும் ஹிட். அதற்கு எஸ்.பி.பி.யின் குரல்தான் காரணம் என இப்போதும் பேசுவதுண்டு.
எஸ்.பி.பி. யின் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும், தமிழ், கன்னடம், பெங்காலி, ஹிந்தி என தன் இசை ராஜாங்கத்தை நிகழ்த்தியிருக்கிறார். 16 மொழிகளில் பாடியது அவரின் பெரும் பயணத்தின் சாட்சி.
"சங்கராபரணம்' படத்துக்காக முதல் தேசிய விருதை வாங்கி விட்டு, "எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது' என்று எஸ்.பி.பி. சொன்ன போது கர்நாடக சங்கீத மேதைகளே ஆடிப்போனார்கள். அதே போல இரண்டாவது தேசிய விருதினை "ஏக் துஜே கேலியே' படத்துக்காக வாங்கியபோது, "எனக்கு ஹிந்தி தெரியாது' என்றபோது, "கியா' என ஷாக் ஆனது பாலிவுட்.
ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடியது இவரது அசாத்திய சாதனை. அதே போல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி பல படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்குக் குரல் கொடுத்திருப்பதும் பெரும் சாதனை என்கிறது சினிமா உலகம்!
"மனதில் உறுதி வேண்டும்', "கேளடி கண்மணி', "சிகரம்', "குணா', " தலைவாசல்', "பரதன்', "திருடா திருடா', "காதலன்', "பாட்டு பாடவா', "காதல் தேசம்', "அவ்வை சண்முகி', "உல்லாசம்', "ரட்சகன்', "மின்சார கனவு' உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் பொலிவு பெற்றன.
"முதல் மரியாதை' படத்தில் நடித்திருக்க வேண்டியவர் எஸ்.பி.பி. பாரதிராஜா எவ்வளவோ முயன்றும் அதை ஒப்புக் கொள்ளவில்லை அவர்.
இளையராஜாவின் இசையில் "கண்மணியே காதல் என்பது....', "மண்ணில் இந்த காதல் இன்றி...', பரத்வாஜ் இசையில் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'ஆகிய பாடல்களை ஒரே தம்மில் பாடினார் எஸ்.பி.பி. இதுவெல்லாம் மூச்சு விடாமல் பாடிய பாடல்கள் என ரசிகர்களால் சொல்லப்படுவதுண்டு. "" அது சுத்த பொய். அப்படி எதுவும் இல்லை. எல்லாமே டெக்னாலஜி ஜிம்மிக்ஸ்...'' என்பார் எஸ்.பி.பி.
-ஜி. அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.