முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

எடுப்பது பிச்சை; கொடுப்பது தர்மம்!

கரோனாவிற்கு எதிராக நாடே போராடி வருகிறது. துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

கரோனாவிற்கு எதிராக நாடே போராடி வருகிறது. துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் மக்களிடம் யாசகம் பெற்று அரசுக்கு நிவாரண உதவி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அடிப்படை வசதியில்லாத பள்ளி, கல்லூரிகளுக்கும் நிதி உதவியும் அளித்து வருகிறார் 70 வயதாகும் முதியவர் பூல்பாண்டியன்.

உங்களது தேவைக்கு வைத்துக் கொள்ளாமல் உதவ வேண்டுமென்ற எண்ணம் வந்தது எப்படி - அவரிடம் கேட்டதற்குச் சொன்னார்:

""என்னுடன் பிறந்தவர்கள் எட்டு பேர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்னுடைய சொந்த ஊர். மூத்த சகோதரரும், நானும் தான் இப்போது இருக்கிறோம். சிறுவயதில் படிக்கவில்லை. ஆனால் அப்பா-அம்மா எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். பிழைக்க வழி தேடி மும்பைக்குப் போனேன். அங்கே கிடைத்த வேலை எதுவும் சரியாக அமையவில்லை. வேறுவழியில்லாமல் இரந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

என் குடும்பத்தினருக்கு நான் தர்மம் கேட்பது பிடிக்கவில்லை. ஆனால் நான் தர்மம் பெறும் பணத்தை மட்டும் அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்.

பிறர் உதவி செய்யும் பணத்தில் குறிப்பிட்ட தொகையாக சேர்ந்ததும் அதை வாங்கி தெருக்களில் மரக்கன்றுகள் வாங்கி நடுவது, பள்ளிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்குவது என செலவிட்டேன். இதனால் மும்பை மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னை மும்பையில் இருக்க விடக்கூடாது எனத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். யாருக்கும் எந்தக் காலகட்டத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என முடிவு செய்து மும்பையை காலி செய்துவிட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தேன்.

மதுரையில் நடைபாதைகள்தான் என்னுடைய இருப்பிடமாக இருந்தன. அப்போதுதான் தன்னார்வலர்கள் தர்மம் கேட்கக் கூடாது என்று நடைபாதையில் இருந்து என்னை மீட்டு மாநகராட்சி முகாமில் தங்க வைத்தனர். கரோனாவால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நானும் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். கரோனா காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் மதுரை மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழ சந்தை, பூ மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் மக்கள் எனக்குக் கொடுத்த பணத்தை அப்படியே கலெக்டரிடம் கொடுத்துவிட்டேன்.

மதுரை மக்களுக்குப் பாசம் அதிகம். நான் கலெக்டரிடம் பணம் கொடுப்பதை டி.வியில் பார்த்துவிட்டு இப்போது என்னைத் தேடி வந்து உதவி செய்கிறார்கள். குறிப்பிட்ட உணவகங்களில் என்னை அழைத்து இலவசமாக சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். கிடைத்த இடத்தில் தங்கிவிடுவேன். இனி இங்கிருந்து செல்ல மனமில்லை.

உங்களுக்கு எப்போது ஓய்வு தேவைப்படுகிறதோ அப்போது எங்களிடம் வாருங்கள் உங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று காப்பகம் ஒன்றில் உறுதி மொழி கொடுத்து இருக்கிறார்கள். உடம்பில் உயிர் உள்ளவரை பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களிடம் உதவி கேட்க வேண்டும். அவர்கள் தரும் பணத்தை நல்ல முறையில் நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். என்னுடைய இறுதி வாழ்நாள் வரை இதை மட்டுமே செய்வேன்'' என்கிறார் பூல்பாண்டியன்.

பொது இடங்களில் சுற்றி வருவதால் உங்களுக்கு கரோனா பற்றி கவலையில்லையா என்று கேட்டதற்கு, ""அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். என்னைப் பற்றி எனக்குப் பெரிதாகக் கவலையில்லை'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →