ஞாயிறு கொண்டாட்டம்

பொது வாழ்க்கை  மாற்றம் ஏற்படுத்திய இளைஞர்!

தமிழகத்தில்  இருக்கும் ஆயிரக்கணக்கான  ஊராட்சிகளில்   நடக்காத அதிசயம்   வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம்  ஊராட்சியில் நடந்துள்ளது.  

கண்ணம்மா பாரதி


தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் நடக்காத அதிசயம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் நடந்துள்ளது. கருப்பம்புலம் கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை அச்சிட்டு வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் விநியோகித்திருக்கிறார் ஊராட்சித் தலைவர் சுப்புராமன். வீடு வீடாகச் சென்று வழங்கக் காரணம் என்ன அவரிடம் கேட்டோம்:

""2019 டிசம்பர் மாதம் நடந்த ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் போது நான் கருப்பம்புலம் பொது மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதி "வெளிப்படையான ஊராட்சி நிர்வாகம்'. பொறுப்பேற்று ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ஊரின் குடிநீர்ப் பிரச்னையை ஏறக்குறைய தீர்த்து வைத்திருக்கிறோம். அதற்கு அடுத்தபடியாக கருப்பம்புலம் ஊராட்சியின் வரி வசூல் எவ்வளவு... மொத்த வரவு, மொத்த செலவு எவ்வளவு.. இப்பொழுது கையில் இருக்கும் பணம் எவ்வளவு... உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தெளிவான விளக்கம், வரவு செலவு கணக்குகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அச்சடித்து எல்லாக் கிராம வீடுகளுக்கும் வழங்கி முதல் வாக்குறுதியை இரண்டாவதாக நிறைவேற்றியுள்ளேன்.

நான் எம்.சி.ஏ முடித்ததும் ஊருக்கு வந்து அரசு உதவிகள், நிவாரணங்கள், சாதாரண மக்களுக்கு லஞ்சம் தராமல் முறையாகக் கிடைக்க தகவல் உரிமைச் சட்டம் மூலமாகவும், அதிகாரிகளைச் சந்தித்தும் தேவையான உதவிகள் செய்து வந்தேன். கஜா புயல் தாக்கிய பிறகு மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கினேன். இந்த உதவிகள் செய்ய நான் யாரிடத்திலும் பண உதவி கேட்கவில்லை.

சென்ற 2019-ஆம் ஆண்டுத் தேர்தலின் போதுதான் பொதுப்பிரிவில் இந்த ஊராட்சி வந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்குத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். மொத்தம் ஆறு பேர்கள் சுயேச்சையாகவும், கட்சிகள் சார்பிலும் போட்டியிட்டார்கள். நான் ஊராட்சி தலைவர் ஆனால் என்ன செய்வேன் என்று மட்டுமே மக்களுக்கு விளக்கினேன். ஆனால் முன்பு இருந்த ஊராட்சி தலைவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்று நான் சந்தேகப்பட்டேன். நானும் என் நண்பர்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை சென்று வாக்குகள் சேகரித்தோம். மொத்தம் 5100 மக்கள் வாழும் கிராமத்தில் 3907 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில் 1536 வாக்குகளுக்கு மேல் வாங்கி நான் வெற்றிபெற்றேன். எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் ஒருவர் மட்டுந்தான் டெபாசிட் வாங்கினார். எனது நண்பர்கள் ஒன்பது வார்டுகளிலும் போட்டியிட்டார்கள். அதில் நான்கு நண்பர்கள் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்கள்.. நான் வெற்றிப் பெற்றதும் பல கட்சிகள், அவர்கள் கட்சியில் சேர அழைப்புவிடுத்தனர். நான் மக்களுக்காக உழைக்கணும். என் கிராமத்துக்கு நல்லது செய்யணும்.

ஊரில் ஒரு பகுதியில் இருபது ஆண்டுகளாகத் தண்ணீர் வராத குழாய்களை மாற்றித் தண்ணீர் வரச் செய்திருக்கிறோம். கரோனா காலத்தில் அரசிடமிருந்து பணம் வரவில்லை. அதனால் உள்ள நிதியை வைத்து முக்கியமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். தவிர இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும், நகரங்களிலும் வேலை பார்க்கிறார்கள். கிராம வளர்ச்சிக்காக அவர்களிடமிருந்து நன்கொடை பெற்று கிராமத்துக்குப் பயன்படுத்தும் திட்டமும் உண்டு.

நூறு நாட்கள் வேலை திட்டத்தில் எனது கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர்கள் உள்ளனர். வேலை நடக்கும் போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது மேற்பார்வை செய்யக் களத்திற்குப் போவேன். இதுவரை எப்படி வேலை செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போது சரியான நேரத்திற்கு வந்து வேலைகளைச் செய்து விடுங்கள்.. எனக்கு அதுதான் வேண்டும். உங்களுக்குத் சிரமம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அதனை நான் தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதனால் வேலைகள் ஒழுங்காக நடக்கிறது'' என்கிறார் .

பொது வாழ்க்கையில் ஒரு புதிய திசையில் பயணித்துள்ளார் சுப்புராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் காரணமாக அவசர வழக்குகளை கையாள 6 போ் குழு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்!

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!

SCROLL FOR NEXT