குடல் பாதுகாப்பு: ஜீரண மண்டல உண்மைகள்
உணவருந்திய பின் உடனடியாகக் குளிக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
உணவருந்திய பின் உடனடியாகக் குளிக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். இது கற்பனை அல்ல. இதில் உண்மை உள்ளது என்கிறார் காவேரி மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முரளிதரன். குடல் பாதுகாப்பிற்கான யோசனைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
""மிகச் சிறப்பாக முழு அளவு மதிய உணவு சாப்பிட்டவுடன், ஓய்வாக இருக்கும் என்று நினைத்து, குளித்து விட்டுப் படுப்பதனால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்பார்க்கலாம். இந்த வகையாக வாழ்க்கை முறை என்பது நமது ஜீரண செயல்பாடுகளை அழித்து இரைப்பைக் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழி வகுக்குகிறது.
எப்படி...? உணவு செரிமானம் ஆவதற்கு நிறைய ஆற்றல் தேவை. மற்றும் வயிற்றுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருத்தல் அவசியம். குளிப்பதனால் நமது உடல் வெப்பம் குறைந்து விடும். அதனால், வெப்பத்தைச் சரிசெய்வதற்காக நம் உடலானது, உடலில் உள்ள ரத்தத்தை நம் தோல் மற்றும் இதர உறுப்புகளுக்கு அனுப்புவதில் முனைப்பாக இருக்கும். இதனால் ஜீரணச் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் ரத்த ஓட்டம் தடைப்படும்.
2018-ஆம் ஆண்டு குடல் ஆரோக்கியத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டவை:
1. 22 சதவீத மக்கள் மலச்சிக்கலினாலும், 13 சதவீதத்தினர் தீவிர மலச்சிக்கலினாலும், அதே சமயம் 6 சதவீத மக்கள் மலச்சிக்கல் மற்றும் அதன் தொடர்புடைய நோய்களினால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பாதிப்புகளைப் பற்றியும், இந்த நோயாளிகளின் இக்கட்டான நிலைகளைப் பற்றியும் நன்கு பேசப்பட்டுள்ளது. நம் உடல் நலத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் உணவிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு அவை செரிமானம்
ஆவதற்கும் கொடுக்க வேண்டும்.
உணவுக்குப் பின் குளியலைத் தவிருங்கள் நாம் உணவருந்தியப் பின் அவை செரிமாணம் ஆவதற்கு நமது குடல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். பல்வேறு நிலைகளில் இவை நடைபெறும்.
இதற்குப் போதுமான அளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும் தேவையான சுற்றுப்புறச்சூழல் என்பதும் மிக முக்கியமானதாகும். ஒருவர் உணவு சாப்பிட்டவுடன் நேராக சென்று குளிப்பது அவருடைய செரிமானச் செயல்பாடுகளைத் தடுப்பதோடு இயல்பற்ற நிலைக்கு ஆளாக்கும். ஒரு சில மணி நேரங்களுக்கு முன் சாப்பிடுவதோ அல்லது சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்தே குளிப்பது நல்லது.
புகைப் பிடிக்காதீர்கள்
சாப்பாட்டுக்கு முன்போ பின்போ புகைப் பிடிக்கக் கூடாது. இது வயிற்றின் பாதுகாப்பு படலத்தை அழித்து விடும். மற்றும் வீக்கமும் ஏற்படும் ஒருவருடைய இரைப்பை, குடல் ஆரோக்கியத்திற்கு மது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை விலக்கி விடுவது நல்லது.
கடுமையான உடற்பயிற்சியைத் தவிருங்கள்
உடற்பயிற்சி செய்வது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. ஆரோக்கியமான உடலும், மனமும் நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. எனினும் சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நம் உடல் வெப்பத்தை இது அதிகரிக்கச் செய்வதோடு வயிற்று வலி, தசை பிடிப்பு, சுளுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.''
ஆரோக்கியமான உணவு
தற்போது உள்ள கடுமையான சூழலில் வீட்டில் இருந்தபடியே தங்கள் பணியைச் செய்ய நேரிடுகிறது. ஐ.டி. தொழில் செய்பவர்களும், மாணவர்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கும் மிகவும் கடுமையாகப் போராட வேண்டி இருக்கிறது. சரி சமமான உணவை பின்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வது பெரிய பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
சாப்பிடும் நேரம்
ஒரு நாளில் உணவு எடுத்துக் கொள்வதற்குக் குறிப்பிட்ட நேரத்தை பராமரிப்பது மிக அவசியம். இது செரிமானப் பிரச்னையைத் தவிர்க்க உதவும். சரிவிகித உணவு முறை, பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது ஆகியவற்றைப் பின்பற்றுவது நல்லது.
தூங்காதீர்கள்
ஒருவர் உணவு எடுத்துக் கொண்ட பின் அதிலும் கொழுப்பு நிறைந்த உணவாக
இருந்தால் அவற்றைச் செரிப்பதற்கு நிறைய அமிலங்கள் தேவைப்படுகிறது. சாப்பிட்டவுடன் உறங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு உணவுக் குழாய்க்கு அந்த அமிலம், சென்று உணவுக்குழாய் அழற்சி நோயை ஏற்படுத்தும். இதனால் மார்பு வலி ஏற்படும். முக்கியமாக மார்பு எலும்புக்கு அடிப்பகுதியில் வலி ஏற்படலாம். நெஞ்செரிச்சல், பித்த நீர் வாய் வழியே வெளியேறலாம். இதோடு மது அருந்தும் பழக்கமும் புகைப்பிடிப்பதும் மேலும் செரிமான மண்டலத்தைப் பாதிப்படையச் செய்யும். மூன்று பகுதிகளாக அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை குறைவான உணவை எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட பின் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உடனடியாகப் படுக்கைக்குச் செல்வதற்குப் பதிலாக சற்று நேரம் அமர்ந்து இருக்கலாம். புத்தகம் படிக்கலாம் அல்லது சிறிது தூரம் நடக்கலாம். என்கிறார் மருத்துவர் முரளிதரன்.