ஞாயிறு கொண்டாட்டம்

எட்டு பேர்களில் வாழும் இளைஞர்!

கேரளா இன்றைக்கும் அனுஜித்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அனுஜித் யார்? அப்படி என்ன செய்துவிட்டார் ?

பிஸ்மி பரிணாமன்


கேரளா இன்றைக்கும் அனுஜித்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அனுஜித் யார்? அப்படி என்ன செய்துவிட்டார் ?

2010 செப்டம்பர் முதல் நாள் கேரளத்தில் வெளியான நாளிதழ்கள் அனைத்தும் அனுஜித்தைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்தன. அப்போது கொட்டாரக்கரா ஐ.ஐ.டி தொழில் பயிற்சிப் பள்ளியின் மாணவன் அனுஜித். அப்போது அவருக்கு வயது 17. வகுப்பு முடிந்து தோழர்களுடன் வீடு திரும்ப ரயில்பாதையை ஒட்டி நடப்பார்கள். அப்படி 2010 ஆகஸ்ட் 31 அன்று நடந்து போகும் போது ரயில் தண்டவாளம் பிளவுப் பட்டிருப்பதைப் பார்த்ததும், "ஐயோ ரயில் வந்தால் நிச்சயம் விபத்து ஏற்படும்' என்பதை உணர்ந்து கொண்ட அனுஜித், அந்தத் தருணத்தில் வந்து கொண்டிருக்கும் ரயில் வண்டியை நிறுத்த சிவப்பு நிறமுள்ள புத்தகப் பைகளை வீசியவாறே அனுஜித் முன்னே ஓட.. தோழர்கள் பின்தொடர அரை கி.மீ தூரத்தில் வந்து கொண்டிருந்த ரயில் வண்டியின் ஓட்டுநர் சிவப்பு பைகளை ஏந்தி பத்து பதினைந்து பேர் சேர்ந்து ரயில் பாதையில் ஓடி வருவதைப் பார்த்ததும், அசம்பாவிதத்தை உணர்ந்து வண்டியை நிறுத்த, பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுப் பல நூறு உயிர்கள் பிழைத்தன. பிளந்து கிடந்த தண்டவாளம் மாற்றப்பட்டு ரயில் பாதையும் உடனடியாகச் சீரமைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் கேரளத்து செய்தித் தாள்கள் அனுஜித் தோழர்களுடன் சிவப்புப் பைகளுடன் நிற்பதைப் படங்களுடன் தலைப்புச் செய்தியாக வெளியிட அனுஜித்தையும் அவரது தோழர்களையும் கேரளம் கொண்டாடியது. அலை அலையாய் வந்து குவிந்த வாழ்த்துக்கள், பாராட்டுகளைக் கேட்க அனுஜித் உயிருடன் இருந்தார்.

தொடர்ந்து ஊரில் யார் என்ன உதவி கேட்டாலும், அல்லது யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்று பிறர் சொல்லி அறிய நேர்ந்தாலும் சென்று உதவி வந்தவர் அனுஜித். அவரிடம் உதவி பெறாத ஊர் மக்கள் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் "பாசமுள்ள ஊர் பிள்ளையாய்' அனுஜித் மாறினார்.

கேரளம் கொண்டாடிய அனுஜித்தின் "பிறருக்கு உதவும் நல்ல மனதை' அடையாளம் கண்டு தொடக்கத்தில் பிரமித்துப் போன பிரின்ஸி அனுஜித்தைச் சந்தித்தார்.. பாராட்டினார். நட்பு தொடர்ந்தது . பிறகு பிரின்ஸி அனுஜித்தைக் காதலிக்கவும் தொடங்கினார். அனுஜித் இந்து. பிரின்ஸி கிறிஸ்துவர். இரண்டு வீட்டிலும் திருமணத்திற்குச் சம்மதம் கிடைக்கவில்லை. இரு வீட்டாரின் எதிர்ப்புகளை மீறித் திருமணமும் செய்து கொண்டார்கள். அனுஜித் - பிரின்ஸி தம்பதிக்கு மூன்று வயதில் மகன். பெயர் எட்வின். கார் ஓட்டுநராக, மெக்கானிக்காக வேலைப் பார்த்து வந்த அனுஜித் கரோனா தொடர் ஊரடங்கால் வேலை கிடைக்காமல் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் விற்பனையாளராக மாற்று வேலையைத் தேடிக் கொண்டார். பிரின்ஸி நகைக் கடை ஒன்றில் பணிபுரிகிறார்.

எல்லா நாள்களையும் போல அந்த நாளும் விடிந்தது. வர இருக்கும் ஆபத்துத் தன்னைப் புரட்டிப் போட போகிறது என்பதை உணராமல் அனுஜித் இருசக்கர வாகனத்தில் வேலைப்பார்க்கும் இடத்தை நோக்கிச் செல்ல.. சாலையில் சட்டென்று எதிர்ப்பட்ட பாதசாரியுடன் மோதாமல் இருக்க வண்டியை வளைத்த போது வண்டி சரிந்து தலையில் அடிபட்டு மயக்கமானார். மருத்துவச் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விபத்து நடந்த மூன்றாவது நாள் அனுஜித்திற்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

செய்தி கேட்டு அனுஜித்தின் மனைவி பிரின்ஸி, பெற்றோர் நண்பர்கள் இடிந்துப் போனாலும், சட்டென்று அனுஜித்தின் அனைவருக்கும் உதவத் துடிக்கும் மனம்... உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்து பெயரைப் பதிவு செய்திருந்தது நினைவுக்கு வர, அனுஜித்தின் ஆசையை நிறைவேற்ற அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். கண்கள், இதயம், முன்பாதி கைகள், சிறுகுடல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக அகற்றப்பட்டு எட்டுப் பேர்களுக்குப் பொருத்தப்பட்டது. அதில் மூன்று நோயாளிகள் கொச்சியில் இருந்ததால் கேரள முதல்வர் அரசு ஹெலிகாப்டர் தந்து உதவ குறைந்த கால இடைவெளியில் நோயாளிகளுக்கு அனுஜித்தின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்தனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து பலநூறு உயிர்களைக் காப்பாற்றிய அனுஜித் சரியாக பத்தாவது ஆண்டில் தனது 27-ஆவது வயதில் எட்டு பேருக்கு மறுஜென்மம் கொடுத்து மறுவாழ்வும் வழங்கியிருக்கிறார். உடல் உறுப்புதானத்தில் மூளை சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளை அதிக பட்சம் ஐந்து பேர்களுக்கு மட்டுமே பொருத்துவார்கள். இப்போது எட்டு பேர்களுக்கு இரவல் உடல் உறுப்புகளைப் பொருத்தி கேரளத்தில் மருத்துவச் சாதனைப் படைத்துள்ளனர் .. மூளைச் சாவு ஏற்பட்ட நிலையிலும் அனுஜித் எட்டு பேர்களுக்கு உயிர்கொடை வழங்கி அந்த எட்டுப் பேர்களில் வாழும் அனுஜித் மீண்டும் கேரள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ... அனுஜித்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்து பெருமழை கேரளம் முழுவதும் பொழிந்து கொண்டிருக்கும் போது கேட்க அனுஜித் மட்டும் இல்லை.

""எல்லாருக்கும் ஓடிச் சென்று உதவுபவருக்கு முடிவு இவ்வளவு சீக்கிரம் வர வேண்டுமா.. நாங்கள் வாழத் தொடங்கி நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் எல்லாம் முடிந்து போய்விட்டது . "அப்பா எங்கே' என்று மகன் அடிக்கடி கேட்கிறான். அனுஜித்தின் சிதை கொளுத்தியது அவன்தான். அவனிடம் "அப்பா இறக்கவில்லை.. எட்டுப் பேர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என்றுதான் சொல்லி வருகிறேன்.

அவனுக்கு நான் சொல்வதைப் புரிந்து கொள்கிற வயதில்லை. அனுஜித் பிறருக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். உடல் உறுப்புத் தானம் செய்யத் தான் முன்வந்ததுடன் என்னையும் உடல் உறுப்புத் தானம் செய்யப் பெயரைப் பதிவு செய்ய வைத்தார். மரணிக்கும் போது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அனுஜித் தீர்மானித்திருந்தாலும், மரணம் இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று யாரும் நினைக்கவில்லை'' என்கிறார் அனுஜித்தின் மனைவி பிரின்ஸி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT