முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உடல் பாதுகாப்பு: குளித்தல்!

குளித்தல் - குறித்து உங்களுக்கு என்ன தெரியும்...? குளித்தலின் அவசியம் குறித்து பொது மருத்துவரான டாக்டர் எஸ்.அமுதகுமார் இங்கே விவரிக்கிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
பகிர்:


குளித்தல் - குறித்து உங்களுக்கு என்ன தெரியும்...? குளித்தலின் அவசியம் குறித்து பொது மருத்துவரான டாக்டர் எஸ்.அமுதகுமார் இங்கே விவரிக்கிறார். மருத்துவம் சார்ந்த நான்கு நூல்களை எழுதியுள்ள இவர் சென்னை - சேத்துப்பட்டு மேத்தா மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். 

ஒரு மனிதனுக்கு முக்கியமான மூன்று தேவைகளாக ""உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்'' என்றுதான் நாம் கற்றுப் பழகியிருக்கிறோம். இது போக உடலுக்கு குளியல் என்பதை நான்காவதாக நாம் சேர்த்தே ஆக வேண்டும். 

குளிப்பது என்பது நாம் தினமும் செய்தே ஆக வேண்டிய ஒரு நிலையாகும். குளிப்பதற்கு பல இடங்களும், பல வழிகளும் இருக்கின்றன.  குளத்தில், கிணற்றில், ஆற்றில், அணையில், ஏரியில், வாய்க்காலில், நீர் வீழ்ச்சியில், அருவியில், ஓடையில், கால்வாயில்,  சிற்றோடையில் - இப்படி பல விதமான இடங்களில் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் குளிக்க வாய்ப்புண்டு. நகரங்களில் வாழ்பவர்களுக்கு, வீட்டிலேயே பாத்ரூமில் வாளியில் தண்ணீரை எடுத்துக் குளிப்பது, வசதியுள்ளவர்கள் "ஷவரில்' குளிப்பது, குளியல் தொட்டியில் குளிப்பது - இப்படி பல விதமான வழிகளில் குளிக்க வாய்ப்புண்டு. 

நமது உடலில்  சுமார் முப்பது லட்சம் கோடி செல்கள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.  ஒரு பக்கம் செல்கள் இறப்பதும், மறுபக்கம் புது செல்கள் உருவாவதும் இயற்கையாக நடந்துக் கொண்டே தானிருக்கின்றன. இந்த செல்கள் இறப்பதும், பிறப்பதும் ஒருவருடைய வயது, எடை, உயரம், தேக ஆரோக்கியம், சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். குளிக்காமலிருந்தால், உடலில் இறந்து போகும் செல்களின் எண்ணிக்கை தினமும் சேர்ந்து சேர்ந்து அதிகமாகி, தோலின் மேற்பாகத்தில் படிந்து நமைச்சல், அரிப்பு ஏற்பட்டு தோல் கடினமாகி, தடிமனாகி விடும். இம்மாதிரி இருந்தால், தோல்  நோய் ஏற்பட அதிக வாய்ப்பாகி விடும். 

மகளிரில் பெரும்பாலானவர்கள் மற்ற நாள்களை விட வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தலைக்குக் குளிக்கும் வழக்கம் உண்டு.      குளிப்பது என்பதே தலை முதல் கால் வரை உடல் தண்ணீரில் நன்றாக நனையனும். உடலில் இருக்கும் வியர்வை,அழுக்கு, கழிவுகள் உடலை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான். எனவே வசதி வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டாலும், தினமும் தலை நனையும் படி குளிப்பது நல்லது. 

அந்தக் காலத்தில் ஆண், பெண் அனைவரிடமும் உடலுழைப்பு அதிகமாக இருந்தது. உடலுழைப்பு அதிகமாக செய்த பின் குளிர்ந்த நீரில் குளித்த போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது, வசதியாகவும் இருந்தது. எனவே அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் குளிர்ந்த நீரிலேயே குளித்துப் பழகி விட்டார்கள். உடல் சோர்வு ஏற்பட்டால் மட்டும் வெந்நீர் ஏற்றது. 

குளிப்பது என்பது அன்றாடம் செய்ய வேண்டிய ஒரு வேலைதானே... இதைப் பற்றி தனியாக எழுத என்ன இருக்கிறது..? என்று நீங்கள் எல்லோரும் நினைக்கலாம். நோயை பரவவிடாமல் தடுக்க குளிப்பது ரொம்ப முக்கியம். தினமும் குளிப்பதால் நமது உடலுக்கு தெம்பும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினமும் குளிப்பது ரொம்ப அவசியம். நமது உடலிலுள்ள தோல்தான் நமது உடலைப் பாதுகாக்கும் முக்கிய உறுப்பு.  ஆயுர்வேத மருத்துவத்தில் கூட "ஸ்நானம்' என்று குளிப்பதைப் பற்றி தனியாக ஒரு பகுதியே இருக்கிறது. குளியல் ஒழுங்காக, நன்றாக இருந்தால், நமக்கு வரவிருக்கும் நோயைக் கூட தடுத்து விடலாம். ஆனந்தம், உற்சாகம், தெம்பு, புத்துணர்ச்சி, சந்தோஷம், ஆரோக்கியம், உடல் குளிர்ச்சி, உள்ளம் குளிர்ச்சி இவை அனைத்தும் தினமும் தலைக்கு குளித்தால் கிடைக்கும்.  

3

நீங்கள் பார்க்கும் வேலை, கிடைக்கும் நேரம், காலம், வசதி வாய்ப்பு, சந்தர்ப்பம், மனநிலை இதைப் பொறுத்து உங்களது குளியல் எண்ணிக்கையும் மாறும். சோம்பேறித்தனமான ஒருவர், ஒரு வாரத்துக்கு 2 அல்லது 3 முறைதான் குளிப்பார். அதிக வியர்வை, அதிக அழுக்கு, அதிக தூசி உள்ள இடங்களில் வேலைப் பார்ப்பவர்கள், தினமும் கண்டிப்பாக 2 அல்லது 3 முரை குளித்துத்தான் ஆக வேண்டும். குளிர்காலத்தில், தினமும் குளிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். சருமத்தில் நோய் இல்லாதவர்கள் எத்தனை முறை குளித்தாலும் தவறில்லை. 

பெண்களைப் பொருத்தவரை குட்டிக் குளியல் அதாவது சுமார் 5 நிமிடத்துக்குள் குளித்து முடிப்பது நல்லது. கையிடுக்கு, தொடையிடுக்கு முதலிய பாகங்களில் சேரும் வியர்வை, அழுக்கு போன்றவைகளை அப்புறப்படுத்த இந்தக் குட்டிக் குளியல் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முரை செய்வது கூட மிகவும் நல்லது. 


தொடர்ந்து 5 நாள்கள் குளிக்கவில்லையென்றால், தோல் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. என்று தேசிய சுகாதார நிறுவனம் சொல்கிறது. உடலிலிருந்து வெளியாகும் வியர்வையும், உடலிலுள்ள கெட்ட பாக்டீரியாவும் சேர்ந்து தோலின் மேற்பரப்பில் ஒரு அழுக்குத் திரட்சி உண்டாகும். 

இந்த அழுக்குத் திரட்சி, தோலை ஆரோக்கியமற்றதாக ஆக்கி விடும். சிலர் உடலைத் தேய்த்துக் குளிக்காமல், தண்ணீரை மட்டும் ஊற்றிக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம், இந்த மாதிரி அழுக்குத் திரட்சி கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து சேர்ந்து கடைசியில் தோல் நோயில் கொண்டு போய் விட்டு விடும். 

சாப்பிட்டவுடன் குளிப்பது நல்லதல்ல. நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாக நிறைய சக்தி தேவைப் படுகிறது. அதற்கு நிறைய ரத்த ஓட்டம் இரைப்பைக்கு தேவைப்படுகிறது.  எனவே சாப்பிட்டவுடன் உடலின் மற்ற பாகங்களிலிருந்து ரத்தம் இரைப்பையை நோக்கி வந்து விடுகிறது. இந்த நேரத்தில் நாம் குளித்தோமானால் இரைப்பையைச் சுற்றியிருக்கும் ரத்த ஓட்டம், இரைப்பையை விட்டு மற்ற பாகங்களுக்குச் சென்று விடும். ரத்தம் இரைப்பையை விட்டு போய் விட்டால், ஜீரணம் தடைபடும். அதனால் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. சாப்பிட்டப் பின் சுமார் முக்கால் மணி நேரமாவது கழித்து குளிப்பது நல்லது.

யாராக இருந்தாலும் சரி, எந்த அளவுக்கு கஷ்டம் இருந்தாலும் சரி, தன்னை மறந்து பாட்டு பாடும் ஒரே இடம் பாத்ரூம். மட்டும்தான். குளிக்கும் போது மட்டும்தான் எல்லோருக்கும் பாட்டு பாட தோன்றுகிறது. இதற்குக் காரணம், குளிக்கும் போதுதான் உடலும், மனமும் தனிமையாகி ஒரே நேரத்தில் குளிர்ச்சியாகி சந்தோஷமடைகின்றது. தன்னை மறக்கச் செய்கிறது. அதனால் தானாகவே பாட்டு வருகின்றது. 

உடலுக்கும், தலைக்கும் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, பின் குளிக்கும் போது முதலில் உடல் முழுக்க ஒரு நல்ல மசாஜ் கொடுத்துதான் எண்ணெய் தேய்க்கிறோம். இதனால் ரத்த ஓட்டமும், நிண நீர் ஓட்டமும்  அதிகமாகி, உடலிலுள்ள சிறிய, பெரிய தசைகள் தூண்டப்படுகின்றன. எண்ணெய் தேய்க்கும் போது நம்முடைய கையால் கொடுக்கும் அழுத்தம், நமது உடலின் முழு பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் உடலும், மனமும் நன்கு ரிலாக்ஸ் ஆகிறது. எண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பின், உடலுக்கும், மனதுக்கும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →