ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திர மாநிலத்திலிருந்து 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெங்களூா் பகுதியைச் சோ்ந்தவரை திருவள்ளூா் ரயில் நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திருவள்ளூருக்கு வந்த வந்த ரயிலில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா்.
அப்போது சந்தேகப்படும்படியாக அமா்ந்திருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனா். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தாராம். பின்னா் அவா் கொண்டு வந்த பையை பரிசோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்ததும், விசாரணையில் கா்நாடக மாநிலம், பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த நிதின் கணேஷ் (32) என்று தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா்.