ஆயிரம் கதை தந்த அபூர்வ எழுத்தாளர்
ஒரு திரைப்பட கதாநாயகன் அல்லது கதாநாயகி நூறு படங்களில் நடித்தால் அது ஒரு சாதனையாக கொண்டாடப்படுகிறது.
ஒரு திரைப்பட கதாநாயகன் அல்லது கதாநாயகி நூறு படங்களில் நடித்தால் அது ஒரு சாதனையாக கொண்டாடப்படுகிறது. ஒரு கவிஞர், பாடகர் அல்லது இசையமைப்பாளர் ஆயிரக்கணக்கில் பாடல்களை இயற்றுவதும், பாடுவதும், இசை அமைப்பதும் சாத்தியம்தான். ஆனால், எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய 40 ஆண்டுகால எழுத்து வேள்வியில் 1001 புதினங்களை எழுதி உலக சாதனையைப் படைத்துள்ளார் என்றால் நம்ப மறுப்பீர்களா... அல்லது ஆச்சரியப்படுவீர்களா?
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கொவ்வாலி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட "கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ்' ஆவார்.
இவரை எழுத்தாளராக மாற்றிய சம்பவமே ஒரு மைக்ரோ கதைக்கு கருவாக அமையும்...
1912-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தனுக்கு என்ற கிராமத்தில் ஏழை குமாஸ்தாவின் கடைசி மகனாக பிறந்தவர் லட்சுமி நரசிம்ம ராவ். அன்றைய இன்டர்மீடியட் வரை படித்தவர்.
விடுமுறைக்காக சகோதரியின் பொடூரு கிராமத்திற்குச் சென்றார். இயற்கையிலேயே புத்தகங்களைப் படிப்பதில் நாட்டமுள்ள அவர் அருகிலிருந்த வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த வீட்டின் சிறுகுழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென சிறுநீரும் மலமும் கழித்தது. அங்கே வந்த குழந்தையின் தாயான அந்த வீட்டு எஜமானி அருகே இருந்த பெரிய பக்தி நூலிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதை ஒரு பேப்பர் நேப்கின் போல உபயோகித்து குழந்தையைச் சுத்தப்படுத்தி தாளை வெளியே எறிந்து விட்டு வந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இளைஞரான ராவ்.
""புத்தகத்தைக் கிழித்து இப்படி உபயோகப்படுத்தலாமா..?'' என ஆத்திரத்துடன் கேட்டார். அமைதியாக அந்தப் பெண் சொன்ன பதில் அந்த இளைஞரின் தலையில் சம்மட்டியாக இறங்கியது.
அவள் சொன்னாள் ""எனக்கும் படிக்கத் தெரியும். ரொம்ப நாளாக வீட்டில் இருக்கிறதே படிப்போம் என நானும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒன்றும் புரியவில்லை. பெரிய புத்தகமாக இருந்தாலென்ன? படித்தால் புரியாத புத்தகத்தால் என்ன பயன்? வேறு எப்படித்தான் பயன்படுத்த முடியும்?''
அந்த நொடி தான் தெலுங்கு எழுத்தாளராக கொவ்வாலி லட்சுமி நரசிம்ம ராவ் அவதாரம் எடுத்த நேரம்.
படித்தால் புரியவேண்டும். படிப்பவர் யார்? அவர் படிக்க விரும்பும் விஷயங்கள் என்ன? இதை முதலில் அறிய வேண்டும் என அந்த இளம் உள்ளம் முடிவெடுத்தது. இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி இளைஞர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநிலம் முழுவதும் ஓராண்டு சுற்றித்திரிந்தார். அப்போது அவர் பசியையும் பட்டினியையும் மட்டும் சந்திக்கவில்லை; நட்பையும் துரோகத்தையும், நல்லவர்களையும் கெட்டவர்களையும், குழந்தைகளையும் பெரியவர்களையும், ஆண்களையும் பெண்களையும் என சமுதாயத்தின் பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்தார். பேருந்து நிலையங்களிலும், ரயில்வே பிளாட்பாரங்களிலும் பசியுடன் படுத்துத் தூங்கினார். பின்னாளில் அவர் படுத்துக் கிடந்த பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மட்டுமல்ல; எங்கெல்லாம் தெலுங்கு மொழி ஒலித்ததோ அங்கெல்லாம் அவர் எழுதிக் குவித்த புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. இன்றும் விற்றுக் கொண்டிருக்கின்றன.
தாயை இழந்த மகனை காணாமல் தந்தை ஊரெல்லாம் தேடியும் பலனில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ராஜமுந்திரியில் தந்தையைத் தேடி தனையன் வந்தார். மனமும் மூளையும் அவர் பெற்ற அனுபவங்களால் நிரம்பி வழிந்தது. கைகள் பரபரத்தன. எழுத ஆரம்பித்தார். தெலுங்கு பேசும் அன்பர்கள் அனைவரும் "கொவ்வாலி' எனக் கொண்டாடும் அந்த எழுத்தாளர் 1935-இல் எழுத ஆரம்பித்தார். "கிராமத்து தேவதை' என்ற பெயரில் அவருடைய முதல் புத்தகம் வெளிவந்த போது அவருக்கு வயது 23.
அவருடைய ஜனரஞ்சகமான சரளமான எழுத்து நடை, எளிமையான வார்த்தைகள், ஆழமான கருத்துப் பிரயோகங்கள் என்று எல்லாம் சமகாலத்து விவகாரங்களைப் பேச ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக அவருடைய புதினங்கள் தெலுங்கு வாசகர்களைக் கட்டிப் போட்டது. எளிமையான வார்த்தைகளில் சமுதாயச் சீர்கேடுகளை தீயெனச் சாடினார். பெண்களின் பிரச்னைகள் குறிப்பாக பால்ய விவாகம், விதவைகளின் அவலம், மறுமணம், ஜாதிக் கொடுமைகள், ஏழைகள் படும் பாடு, பணக்கார பண்ணையார்களின் திமிர் ஆட்டம் என 1940-களிலேயே அவர் எழுத ஆரம்பித்து விட்டார்.
நாம் தெலுங்கு டப்பிங் படங்களில் பார்க்கும் வில்லனைப் போல இருந்த ஒரு ராஜமுந்திரி பெரிய மனிதரின் (!) ஆட்டங்களை ஒரு நாவலில் எழுத... புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போட்டது.
வெகுண்ட பண்ணையார் எழுத்தாளரைக் கொல்ல ரௌடிகளை ஏவினார். சரஸ்வதி கடாட்சமும், வாசகர்களின் அன்பும் எழுத்தாளரைக் காக்க... பொறுமிச் செத்தார் பண்ணையார். மீண்டும் "வாள் முனையை விட பேனா முனையே வலிமையானது' என நிரூபிக்கப்படது.
ஆண்டுக்கு சுமார்30 நாவல் என்ற கணக்கில் அவர் எழுதிய கதைகள் சமுதாயப் பிரச்னைகளோடு நின்றுவிடவில்லை. இழையோடிய நகைச்சுவையுடன் அரசியலையும், வரலாறு மற்றும் பக்திப் படைப்புகளையும், குழந்தைகளைக் கவரும் ஃபேண்டஸி கற்பனைகள் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.
தன்னுடைய புத்தகங்கள் அனைவரையும் சென்றடைய குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ராயல்டியை குறைத்துக்கொண்டார். தெலுங்கர்களும் அவர் விரும்பியபடியே அவர் புத்தகங்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் படித்தனர்.
எதனால் அவர் "தெலுங்கு எழுத்தாளர்களின் பிதாமகர்' என்றும் "பாக்கெட் நாவல்களின் தந்தை' எனவும் அழைக்கப்படுகிறார்...?
படப்பிடிப்புக்காக ரயிலில் சென்று கொண்டிருந்த "சகலகலாவல்லி' என்று பாராட்டப் பெற்ற நடிகை பி.பானுமதி. ரயில் பயணத்தில் கொவ்வாலியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த சுவாரசியத்தில் இறங்கவேண்டிய ஸ்டேஷனை கோட்டைவிட்டார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸியில் படப்பிடிப்புக்குப் போனதாக எழுத்தாளரிடமே சொல்லி சிரித்து இருக்கிறார்.
இத்தனை பிரபல எழுத்தாளரை தெலுங்கு சினிமாவுலகம் விட்டு வைக்குமா என்ன...? அன்றைய நடிகை கண்ணாம்பா, தான் ஆரம்பித்த ராஜேஸ்வரி பிச்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படத்தின் கதையை எழுதும் வாய்ப்பை இவருக்குத் தந்தார். அதனால் அவர் தன் ஜாகையை சென்னைக்கு மாற்றினார்.
இப்படி தொடர்ந்து 10 படங்களுக்கு பணியாற்றிய எழுத்தாளர் கொவ்வாலி லட்சுமி நரசிம்மராவுக்கு திரையுலகின் படாடோபமும், கட்டுப்பாடுகளும், விதியில்லாத விதிகளும் பிடிக்காமல் மீண்டும் தன் எழுத்து மேஜைக்கு திரும்பினார்.
இவருடைய கற்பனா விலாசத்தைப் பாராட்டி சென்னை பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத் தெலுங்குத் துறைகள் விழா எடுத்துச் சிறப்பித்தன.
இவரின் ஆயிரமாவது புத்தகத்தின் தலைப்பு "மந்திராலயா' என்கிற மாயாஜாலக் கதை. ஆயிரத்து ஓராவது கடைசி புத்தகம் "கவி வேமண்ணா' என்ற கவிஞரின் வாழ்க்கை வரலாறு ஆகும். இவருடைய எழுத்துக்களால் தெலுங்கு புதினங்கள் புத்துயிர் பெற்றன.