முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இங்கே போயிருக்கிறீர்களா?: வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்கம்!

தூரத்தில் வரும் கப்பல்களுக்குக் கரையைக் காட்டுவதே கலங்கரை விளக்கங்களின் வேலை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:


தூரத்தில் வரும் கப்பல்களுக்குக் கரையைக் காட்டுவதே கலங்கரை விளக்கங்களின் வேலை. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கம் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். இந்தியாவிலேயே நகரத்தின் எல்லைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும் ஒரே கலங்கரை விளக்கம் இதுவே.

பொதுவாக கலங்கரை விளக்கங்களை உருளை வடிவிலோ அல்லது சதுர வடிவிலோதான் கட்டுவார்கள். ஆனால், சென்னை கலங்கரை விளக்கத்தின்அடிப்பாகம் உருளை வடிவிலும் அதற்கு மேலேயுள்ள கோபுரம் முக்கோண வடிவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஓர் வித்தியாசமான வடிவமைப்பு. இந்த முக்கோண கோபுரத்தின் வங்காள விரிகுடாவை நோக்கியிருக்கும் பகுதியில் லைட் ஹவுஸ் என்பதை அடையாளப்படுத்தும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பட்டைகள் குறுக்குவசத்தில் அடிக்கப்பட்டுள்ளன. இது பகல் நேரத்தில் கடல் வழியாக வருபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பதற்கான அடையாளம்.

1970-ஆம் ஆண்டு புதிதாக ஒரு கலங்கரை விளக்கம் அமைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரே உருவாக்க நினைத்தார்கள். அங்கு கட்டுவதற்கு மாநில அரசு அனுமதியளிக்க மறுத்து விட்டதால் தற்போது இருக்கும் இடத்தில் கலங்கரை விளக்கத்தை அமைத்திருக்கிறார்கள். இது சென்னையில் அமைக்கப்பட்ட நான்காவது கலங்கரை விளக்கம் ஆகும்.

1977-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் நாள் இது திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த கலங்கரை விளக்கத்தைப் பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் தடை விதித்தார்கள். அதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2013-ஆம் ஆண்டு முதல் கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது.

மெரினா கடற்கரை இருக்கும் இந்த லைட் ஹவுஸ் மொத்தம் 150 அடி உயரம் கொண்ட 10 மாடி கட்டடம். அதிவேக நவீன லிப்ட் வெறும் 23 விநாடிகளில் 9-வது மாடியில் கொண்டு போய் நம்மை இறக்கி விட்டுவிடுகிறது. 9-வது மாடியில் இறங்கியபின் 25 படிக்கட்டுகள் ஏறி 10-வது மாடியை அடையலாம்.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் பத்தாவது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் பத்தாம் தளத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருபத்து எட்டு கடல் மைல்கள் வரை இதன் ஒளி தெரியும். மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் மூலம் 100 கி.மீ வரை கடலில் உள்ள படகுகள் கப்பல்களை கண்டறிய முடியும்.

கலங்கரை விளக்கத்தின் உச்சியில் அதிசக்தி வாய்ந்த வெண்சுடர் விளக்கு ஒன்று சுழன்று கொண்டே இருக்கிறது. இது 440 வோல்ட் 3000 வாட்ஸ் பவர் கொண்டது. இரவு நேரத்தில் இந்த ஒளியில் வெண்மை, சிவப்பு மற்றும் பச்சை நிறம் மாறி மாறி ஒளிரும். 10 விநாடிகளுக்கு ஒருமுறை இரண்டு தடவை ஃபிளிக்கரிங் ஆவதுபோல் சுழல்கிறது. தூரத்திற்கு ஏற்ப நிறம் வித்தியாசமாகத் தெரியும். இது கடலில் 52 கி.மீ. தொலைவு வரை கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் தரை தளத்தில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் காட்டும் கருவிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதே போன்று சென்னையிலுள்ள கலங்கரை விளக்கங்களின் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய், காமிராவுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேவையில்லாத பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைவதை தடுக்க மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

150 அடி உயரத்திலிருந்து பறவை பார்வையில் சென்னையைப் பார்ப்பதே வித்தியாசமாகத் தெரிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும் போது பேருந்துகளும் கார்களும் பொம்மையாக மாறுகின்றன. மனிதர்கள் சிறு புள்ளிகளாக நகர்கிறார்கள். இதுவொரு வித்தியாசமான அனுபவம். மெரினா கடற்கரையின் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் இந்த உயரத்திற்குச் சென்று காண வேண்டும். கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மெரினாவை பார்த்தால்தான் மெரினா சுற்றுலா முழுமை பெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →