சுருளி எனும் வெகுளி
சுருளிராஜனை நினைத்தாலே அந்த குரல்தான் டக்கென வந்து நிற்கிறது. எம்.ஆர் ராதாவுக்கு பிறகு, குரல் மூலம் ஃபேமஸ் பிரபலமானவர் சுருளிதான்.
சுருளிராஜனை நினைத்தாலே அந்த குரல்தான் டக்கென வந்து நிற்கிறது. எம்.ஆர் ராதாவுக்கு பிறகு, குரல் மூலம் ஃபேமஸ் பிரபலமானவர் சுருளிதான்.
நடிக்க சான்ஸ் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று, ஒரு விஷ பாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்தாராம். அப்போதுதான், ஒரு நாடகத்தில் நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் தட்டுத்தடுமாறி உழைப்பால் மேலே வந்தவர். "காதல் படுத்தும் பாடு' படத்தில்தான் இவருக்கு அட்வான்ஸாக 100 ரூபாய் தந்திருக்கிறார்கள். வாழ்க்கையிலேயே முழுசா 100 ரூபாயை அப்போதுதான் பார்த்தார். அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, நண்பர்களிடம் காட்டுவதற்காக பஸ் ஏறினார்.
ஆனால், டிக்கெட் எடுக்கக் கையில் வேறு காசு இல்லை. அதனால், 2 மணி நேரம் நடந்தே அறைக்கு வந்து சேர்ந்து, 100 ரூபாயை எடுத்து நண்பர்களிடம் காட்டி கண்களில் நீர் பெருக குதூகலம் அடைந்தாராம்.
நாள்கள் உருண்டது. நிலைமை மாறியது. படங்கள் குவிந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்தார். இதில், 1980-ல் மட்டும் 50 படங்கள் வெளியானது. இந்த சாதனையை இதுவரை யாருமே முறியடிக்கவில்லை.
"மாந்தோப்பு கிளியே' ஒரு முக்கியமானபடம். மொத்த படத்தின் ஆளுமையை இவர் ஒருத்தரே குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்.
இன்றுவரை அவரது அடையாளமாகவே அது நின்றுவிட்டது.
இவரது நிறைய படங்கள் அடித்தட்டு மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவையாக இருந்தன. முதன்முதலில், பொதுக் கழிவறையை சுத்தப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளி கேரக்டரை ஏற்று நடித்தது சுருளிதான்.
"மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தில், ஒரு பெண்ணை சுருளி காதலிக்க, அதற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். அதற்கு சுருளி, "மத்த ஜாதிக்காரங்க எல்லாம் சேர்ந்து நம்மை தள்ளி வெச்சாங்க... இப்போ நமக்குள்ளேயே இப்படி தாழ்ந்தவன்னு சொன்னா, மத்தவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னு?" கேட்பார். துப்புரவுத் தொழிலாளர்கள், இந்தப் படத்தை தினமும் தியேட்டருக்கு வந்து வந்து பார்த்தார்களாம்.
அன்றைய காலகட்டத்தில், பெரிதும் அங்கீகரிக்கப்படாத திருநங்கைகள் வேடத்தையும் துணிந்து ஏற்றவர். அவ்வளவு ஏன், பிணத்தைச் சுமக்கும் மார்ச்சுவரி வேன் டிரைவர், சமையல்காரர், மீன்கார செம்படவன், வெட்டியான் உட்பட விளிம்பு நிலை மக்களின் அவலங்களை அப்பட்டமாக எடுத்துச் சொல்லும் அத்தனை கேரக்டர்களையும் சுருளி நடித்ததை மறுக்க முடியாது.
சுருளிக்கு முன்பு, இந்த அளவுக்கு, அடித்தட்டு மக்களின் பாத்திரத்தில் அதிகமாக யாரும் நடிக்கவில்லை. இதனால்... ஏழை, நடுத்தர மக்களின் இதயத்தில் சுருளிக்கென்று ஒரு தனி செல்வாக்கும், மரியாதையும் உருவானது.
வாழ்வியல் நிஜங்களைச் சொல்லி, இன்றைய எதார்த்த காமெடிக்கு, அழுத்தமான பாதை போட்டுக் கொடுத்த முன்னோடி, சுருளி என்பதை மறக்க முடியாது.