முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 75: பட விழாவில் திடீர் பதற்றம் - குமாரி சச்சு

ஆரம்ப நாளில் இருந்தே, மக்களுக்கு "காதலிக்க நேரமில்லை' படம் பிடித்துப் போய் விட்டது. எங்களுக்கு என்று தனியாக ஒரு காட்சியை போட்டுக் காண்பித்தார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

ஆரம்ப நாளில் இருந்தே, மக்களுக்கு "காதலிக்க நேரமில்லை' படம் பிடித்துப் போய் விட்டது. எங்களுக்கு என்று தனியாக ஒரு காட்சியை போட்டுக் காண்பித்தார்கள். நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து,  "காதலிக்க நேரமில்லை' படத்தைப் பார்த்தோம். 

பெரிய திருப்பங்களுடன், உள்ள கதை இல்லை, சாதாரண காதல் கதைதான். ஆனால், அதை இயக்குநர் ஸ்ரீதர் எடுத்த முறை, சிறப்பாக இருந்தது. இதில் நடித்த ஒவ்வொரு கதாநாயகியும் அழகாகத் தெரிந்தார்கள். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நடிகரும், நம்மைக் கவர்ந்து விட்டார்கள். அதற்கு எல்லாம் காரணம் இந்த வண்ணம் தான். காமிராமேன் வின்சென்ட் சார், எல்லோருடைய காட்சியையும், ஒரு ஓவியம் போல் எடுத்திருந்தார். 

அவருடன் இருந்த பி.என்.சுந்தரம், பின்னாளில்,  தனி ஒளிப்பதிவாளராக மாறி, பல படங்களை ஒளிப்பதிவு செய்தார். அவருடைய ஒளிப்பதிவும் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், வின்சென்ட் - சுந்தரம் என்று இருவரது பெயரும் ஒன்றாகப் போடும் அளவிற்கு, பெயர் பெற்றவர் சுந்தரம். "காதலிக்க நேரமில்லை'  படத்திலும் அவர் தான் ஆபரேட்டிவ் காமிராமேன். வின்சென்ட் ஒளிப்பதிவு இயக்குநர். இருவரது சிறப்பும் ஒன்று சேர, இந்தப் படம் மக்களைக் கவர்ந்த படங்களில் ஒன்றாகிவிட்டது. ஒளிப்பதிவு இயக்குநராக இருந்த வின்சென்ட், படங்களை இயக்க ஆரம்பித்த பிறகு, அவரது இயக்கத்திலும் நான் நடித்தேன். 

"காதலிக்க நேரமில்லை' படத்தை மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதனால் சென்னை, மவுண்ட் ரோட்டில் உள்ள காசினோ திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்க விரும்பினேன். எங்கள் குடும்பம் மற்றும் எங்கள் அண்ணன் குடும்பம், என்று சுமார் பத்து பேர் படத்தைப் பார்க்கச் சென்றோம். படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள் மிகவும் ரசித்து, ஆரவாரமாகக் கைத்தட்டி, விசிலடித்து, மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். 

நான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, ரசிகர்களுக்கு நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்து விட்டது. நான் காசினோ தியேட்டரின் மேல் மாடியில் உட்கார்ந்து தான் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் முடிந்தவுடன் மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். காரில் ஏற மிகவும் சிரமப்பட்டேன். ஒருவர் படத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்.  ஒருவர் என்னுடைய ஆட்டோகிராப்  கேட்கிறார். இப்படி நூறு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டதால், மிகவும் கஷ்டப்பட்டு, காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். இந்தப் படத்திற்குப் பிறகு நாகேஷ்-சச்சு ஜோடி  பிரபல ஜோடியாக மாறியது.

"காதலிக்க நேரமில்லை' வெள்ளி விழா படமாக வெற்றிப் பெற்றது, எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஒரு தமிழ்ப் படத்திற்கு வேறு மாநிலத்தில் விழா எடுத்ததாக, அந்த நாள் வரை எனக்குத் தெரிந்ததில்லை. ஆமாம், "காதலிக்க நேரமில்லை' படத்திற்கு முதன் முறையாக பெங்களூருவில் வெற்றி விழா எடுக்க முடிவாகியது. கன்னடர்கள் இந்தப் படத்தை வெகுவாக ரசித்தார்கள். எங்கள் படத்தின் விநியோகஸ்தர், அந்த ஊரில் மிகப் பெரிய மனிதர்.  இந்தப் படத்தின் வெள்ளி விழாவை, எங்கள் திரையரங்கில் தான் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். இயக்குநர் ஸ்ரீதரும், அவர் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினார். எங்கள் எல்லோருக்கும் இந்த விழா பெங்களூருவில் நடப்பது சந்தோஷமே.

அந்தக் காலத்தில் திரைப்பட வெற்றி விழாக்களை, நாங்கள் நடித்த ஸ்டூடியோவில் கொண்டாடியிருக்கோம். பெரும்பாலும், அந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில், பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது  படத்தின் இடைவேளையின் போதோ, அல்லது திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று நிறுத்தி, நாங்கள் மேடையில் ஏறி, ரசிகர்களுடன் பேசி விட்டு, இறங்கி விடுவோம். இப்படிப் பல திரையரங்கங்களுக்குச் சென்று, ரசிகர்களுடன் நேருக்கு நேர் பேசி, மகிழ்ந்த நாள்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர்  நடித்த "மதுரை  வீரன்' வெற்றி விழாவில், இப்படித் திரையரங்குகளில், மக்களிடம் சென்று நாங்கள் சந்தோஷப்பட்டு இருக்கிறோம். இன்றைய தேதியில், இது எல்லாம் நடக்குமா என்று  தெரியவில்லை. 

சென்னையில் காசினோ, ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பல்வேறு திரையரங்குகளில், இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடினோம். எல்லா நட்சத்திரங்களும் வந்தார்கள். ஆனால், படத்தின் வெற்றி விழா முதலில்  நடந்தது, பெங்களூருவில் தான்.

திரையரங்கில், விழா நடந்த பிறகு, அடுத்த நாளைக்கு பெங்களூரு, லால்பாகில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஒரு பெரிய விழா நடைபெற்றது. லால்பாக் என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா. இந்தியாவின் முதல் தாவரவியல் பூங்கா என்று கூட இதைச் சொல்லலாம். இந்தப் பூங்கா,  அந்தக் காலத்தில் வாழ்ந்த மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி காலத்தில் நிறுவப்பட்டது. இங்குப் புகழ்மிக்கக் கண்ணாடி மாளிகை ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் இங்குப் பல பேர் வந்து பார்த்து விட்டுச் செல்வார்கள். இந்த மாளிகை 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஹைதர் அலி காலத்துக்குப் பிறகு, அவரது மகன் திப்பு சுல்தான் இதைப் பராமரித்து வந்தார்.

இதில் தான் ஆண்டு தோறும், இரண்டு முறை மலர் கண்காட்சிகள் நடைபெறும். ஒன்று சுதந்திர தினத்தின் போதும், மற்றொன்று குடியரசு தினத்தின் போதும் நடைபெறும். இதில் உள்ள கண்ணாடி மாளிகை, லண்டலில் உள்ள கிரிஸ்டல் மாளிகை போன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி மாளிகைக்கு அடிக்கல் நாட்டியது இளவரசர் ஆல்பர்ட் விக்டர். இது நடந்தது 1889-ஆம் ஆண்டு. இந்த இடத்தில் தான், எங்கள் வெற்றி விழாவும் நடைபெற்றது. அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி என்று போட்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் கண்ணாடி மாளிகையில் கூடிவிட்டோம். ராஜஸ்ரீயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று அங்கே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ஏன், எதற்கு என்று தெரியவில்லை. நான் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராஜஸ்ரீயை பார்க்கத் திரும்பினேன். அங்கு ராஜஸ்ரீ இல்லை. எங்கு சென்றார்?  

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.