முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 77: சினிமாவில் நடிப்பவர்கள் செய்யக் கூடாத விஷயம்!

என் வாழ்க்கையில், "காதலிக்க நேரமில்லை' படம் வந்த பின்னர், எல்லாமே மாறிவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

என் வாழ்க்கையில், "காதலிக்க நேரமில்லை' படம் வந்த பின்னர், எல்லாமே மாறிவிட்டது. ஆனால் எனக்குள் இருந்த குழப்பம் மட்டும் தீரவில்லை. எனக்குள் இருந்த குழப்பம், என் மனதை விட்டு அகல மறுத்தது. குழப்பம் தீர, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. 

நான் முதன் முதலாகக் கதாநாயகியாகத் திரையுலகில் நுழைந்தேன். ஒரு சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்த பின்னர், "காதலிக்க நேரமில்லை' படம் கிடைத்தது. 

இதைத் தொடர்ந்து, பல படங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது. அவை எல்லாம் நகைச்சுவை வேடங்கள். ஒப்புக்கொள்வதா, வேண்டாமா என்ற தயக்கம் ஒரு புறம், என்ன செய்வது என்று குழப்பம். எப்பொழுதும் போல, எங்கள் வீட்டு  ஹாலில், அனைவரும் கூடிப் பேசினோம். 

திரைப்பட உலகத்தில் உள்ள எல்லோரது வாழ்க்கையையும், எங்களுக்குத் தெரிந்த வகையில், அலசி ஆராய்ந்தோம். காமெடி பண்ணனும் என்றால், தொடர்ந்து படங்களில் நடிக்கலாம். அது இல்லை என்றால், நடிக்கறதுக்கே கொஞ்ச காலம் இடைவெளி விட்டுவிடலாமா என்று ஒரு நினைப்பும் வந்தது. 

தினமும் புதிய பட தயாரிப்பாளர்களிடமிருந்து கால்ஷீட் கேட்டு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இந்தப் படம் எனது தலைவிதியையே மாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் நான் பல தரப்பட்ட வேடங்களில் நடிப்பதற்கு, இது அஸ்திவாரம் போட்டது. நானும், என் குடும்பத்தாரும் பல்வேறு வழிகளில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, தேவிகா இன்னும் சொல்லப்போனால், டி.ஏ மதுரம் அம்மா கூட, கதாநாயகியாக முதலில் நடித்து விட்டு தான், பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

கே.ஏ. தங்கவேலு உடன் நடித்தவரும், பிற்காலத்தில் அவரது வாழக்கைத் துணைவியான எம். சரோஜா, எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து விட்டு தான், நகைச்சுவை வேடம் ஏற்றார் என்று எனக்குத் தெரியும். அது  மட்டுமல்லாமல், ஹிந்தி திரைப்பட உலகிலும் பலர் நகைச்சுவை வேடம் தான்  முதன் முதலில் செய்தார்கள்.   அப்புறம் தான் ஹீரோயின் ஆனார்கள்.  பிறகு பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்தார்கள். 

இறுதியில்  ஒரு முடிவுக்கு வந்தேன். நமக்கு வருவதை, எந்தக் காரணம் கொண்டும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். கதாநாயகி வேடம் என்றால், சந்தோஷமாக ஒத்துக் கொள்ள வேண்டும். நகைச்சுவை வேடம் என்றால், சிரித்துக் கொண்டே ஒத்துக் கொள்ள வேண்டும். குணச்சித்திர வேடம் என்றாலும், மறுக்காமல் நடிக்க வேண்டும். ஒரே ஒரு நடனம் ஆட அழைத்தால், ஒத்துக்கொண்டு, ஆடி விட்டு வர வேண்டும். ஆக மொத்தம், வாய்ப்பு வழங்கினால், மறுப்புச் சொல்லாமல், கொடுத்த பணியை செய்து விட்டு வர வேண்டும். 

இந்த முடிவுக்கு நாங்கள் வந்தவுடன், "காதலிக்க நேரமில்லை' படத்தின் தாக்கத்தினால், பல படங்களில் என்னையும் நாகேஷையும் ஜோடியாகப் போட்டுப் படமெடுக்கத் தயாராக இருந்தார்கள். அதுதான் எனக்காக முதலில் காத்திருந்தது. இயக்குநர் ஸ்ரீதர் சார் படம் "ஊட்டிவரை உறவு'  படத்தில் எங்கள் இருவரையும் ஒப்பந்தம் செய்தார்கள். "மோட்டார் சுந்தரம் பிள்ளை', "தேன் மழை' போன்ற பல படங்களில், நாங்கள் இருவரும் ஜோடியாக நடித்தோம். எனக்கு நேரம் போவது தெரியாமல், பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஜெய்சங்கருடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தேன். நடிகர் சிவகுமாருடன் ஒரு படத்திலும் ஹீரோயின் வேடம் கிடைத்தது. அதையும் செய்தேன்.

சினிமாவில் ஒரு இடைவெளி விட்டால் அவ்வளவு தான். திரும்பவும் போய் கேட்டால் கிடைக்காது. அதனால் இடைவெளி இல்லாமல் நான் நடித்துக் கொண்டே இருந்தேன். மேலும் சில படங்களின் படப்பிடிப்பை நடத்தி விட்டு இடையில் நிறுத்தி விட்டார்கள். அவை வெளி வந்திருந்தால் ஒரு வேளை நான் மேலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்க முடியும். நாங்கள் இருவரும் மக்கள் மிகவும் விரும்பிய ஜோடி என்றும்,  பொருத்தமான ஜோடி என்றும் புகழப்பட்டோம். காரணம், என்னிடம் இளமை,  நடனம், கவர்ச்சி,  இதைத் தவிர நடிப்பும் இருந்தது. இதுதான் சினிமாவில் மிகவும் அவசியமான தேவை. அதனால் இருவரும் புகழ் பெற்ற ஜோடி என்று கூறினார்கள். அதனால் தான், நான் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தேன்.

இந்த நிலையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன். எனது நீண்ட கால சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக இருந்ததனால், ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் நடிகை அஞ்சலிதேவி,  என்னைப் பற்றிப் பேசும் போது பல விஷயங்களைக் கூறினார். அஞ்சலிதேவி மிகவும் அனுபவப்பட்ட நடிகை. அவர்கள் பலதரப்பட்ட வேடங்களை சினிமாவில் செய்துள்ளார். என்னைப் போலவே, நகைச்சுவை வேடமும் செய்துள்ளார். கதாநாயகியாக வேடம் ஏற்றுள்ளார். வில்லியாகவும் நடித்துள்ளார். அவர்களைப் போல், நானும் வில்லியாகவும் நடித்துள்ளேன். ஆனால் ஒரே ஒரு படத்தில் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் பெயர் "பாப்பாத்தி'. ஆனால் எனக்கு என்னவோ வில்லியாக நடிப்பதில் இஷ்டமில்லை. நடிகை என்றால் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். அது எனக்கும் தெரிந்தது தான். ஆனாலும் எனக்கு ஏனோ வில்லியாக நடிப்பதில்  விருப்பமில்லை. அதற்கான காரணம் எனக்கு இதுவரையில் தெரியவில்லை. 

இந்த நிலையில் 55 ஆண்டு நான் சினிமாவில் வெற்றிகரமாக இருந்ததால், அந்த விழாவில் அஞ்சலி தேவி என்னைப் பற்றிப் பேசினார்.  அவர் என்ன பேசினார் தெரியுமா?

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.