முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

எளிமையான பொருளாதார நிபுணர்

தமிழ்நாட்டில் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருப்பவர் பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ்.

Updated On : 4 ஜூலை, 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM


தமிழ்நாட்டில் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருப்பவர் பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ். இவரின் பின்புலமும் வாழ்க்கையும் சற்று வித்தியாசமானது.  தற்போது இவர் சாலையில் ஏழைகளுடன் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .மிகவும் எளிமையான இவர் இந்தியாவிற்காக பல்வேறு சேவைகள் செய்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் 1959 -ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஜாக்குவஸ் டிரைஸூம் பொருளாதார மேதைதான். ஜீன் ட்ரெஸ் 20 -ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்தார். 1979 -ஆம் ஆண்டு முதல் இவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
தில்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணி செய்தார். பின்னர் ஜி.பி. பந்த் அறிவியல் பள்ளியில் வருகை தரும் பேராசிரியராகப் பணி செய்தார். இந்திய அரசின் திட்டக்குழுவில் திட்டம் மற்றும் வளர்ச்சிப் பிரிவில் மதிப்புறு பேராசிரியராகவும்  இருந்தார். 
பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். பசி, பிணி, பஞ்சம், கல்வி, பாலின வேறுபாடுகள், குழந்தைகள் நலம், வேலை வாய்ப்புகள், பள்ளி குழந்தைகளுக்கான உணவுத் திட்டம் போன்ற பல சிக்கல்களை ஆராய்ந்து தம் நூல்களிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்தினார். இவரது புத்தகங்களை படித்தால் பொருளாதாரத்தில் ஆர்வம் உள்ளவர்களும் புரிந்து கொள்வர். 
குறிப்பாக சம உரிமை, கல்வி, இந்தியாவில் ஆண்கள், பெண்களுக்கான உரிமை, வறுமை, பெண்களின் பிரச்னைகள், குழந்தைகளின் ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
பொருளாதார மேதை நோபல் பரிசு பெற்ற அமார்தியா சென்னுடன் இணைந்து பொருளாதாரம் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார். 150 -க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். 
இவர் 2002-  ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றார். இவர் தில்லியில் பிஹெச்டி படித்தார். கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கெளரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெல்லா பாட்டியாவும் சமூக செயற்பாட்டாளர். 

பல்கலைக்கழகங்களுக்கு சைக்கிளில் சென்றுதான் பாடம் நடத்தும் எளிமையாளர் ஜீன் ட்ரெஸ். தில்லியில் இவர்  சைக்கிளில் வலம் வருவதை அதிகம் பார்க்க முடிகிறது. காங்
கிரஸ் ஆட்சியில் காலத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயார் செய்தவர். இவர் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவர். 
தில்லி ஜந்தர் மந்தரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுடனான போராட்டத்தில் மக்களுடன் மக்களாக ஜீன் ட்ரெஸ் கலந்து கொண்டார். அப்போது குருத்வாராவில் இருந்து காரில் இருந்து போராட்டக்காரர்களுக்கு உணவு பொட்டலங்கள் வந்தன. ஒவ்வொருவருக்காக உணவு வழங்கி கொண்டிருந்த தன்னார்வலர்கள் அடையாளம் கொண்டு கொண்டனர்
அவருக்கு கூடுதலாக சப்பாத்தியை வைக்க முயன்றனர். அதற்கு ஜீன் ட்ரெஸ், "இங்கு போராட்டம் நடத்தும் மக்கள் அனைவரும் இரு சாப்பாத்திகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். எனக்கும் அதுவே போதும்' என்று 
தன்னார்வலர்களை வியக்க வைத்தார். 
ஜீன் ட்ரெஸ் மற்றும் அவருடைய மனைவி இருவருமே சமூகநீதி கொள்கையில் உறுதியாய் இருப்பவர்கள். ஆய்வுப்பட்டக் கல்வி பயிலும்போதும் அதன் பின்னரும் எளிய வாழ்க்கையை தம் விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டார். வீடுகளற்ற ஏழை மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச் செய்த பெருமைக்குரியவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.