ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனம் செய்தது குறித்து...
திருச்சி: திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்காக பியூஷ் கோயல் தற்போது தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருத்தி வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற முதல் கால பூஜைகளில் ஒன்றான 'விஸ்வரூப தரிசன' நிகழ்வில் பங்கேற்று அரங்கநாதப் பெருமானை தரிசித்தார்.
Advertisement
Advertisement
கோயில் நிர்வாகத்தினரும் அதிகாரிகளும் அவரை நுழைவாயிலிலேயே வரவேற்று, அவரது தரிசனத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு, கோயில் அர்ச்சகருடன் சிறிது நேரம் கலந்துரையாடிய பியூஷ் கோயல், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகையையொட்டி கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே வேளையில், கோயிலில் நாள்தோறும் நடைபெறும் முதல் கால பூஜைகளில் ஒன்றான 'விஸ்வரூப தரிசனத்தை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற 'சாலை வல'த்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, முருகானந்தத்தை ஒரு அர்ப்பணிப்புமிக்க பொது ஊழியர் என்று புகழ்ந்ததுடன், "தன் வாழ்நாள் முழுவதையும் சமூக சேவைக்காகவே அர்ப்பணித்துள்ள, உண்மையான மண்ணின் மைந்தன்" என்றார்.
மேலும், திமுக தலைமையிலான மாநில அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பியூஷ் கோயல், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் கடினமாக உழைத்தாலும், காங்கிரஸ் - திமுக ஆட்சியில், அவா்களின் வியா்வைக் கண்ணீராக மாறியுள்ளது. மாநில அரசு போதிய அளவுக்கு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்காததால், 20 லட்சம் டன் நெல் வீணாகியது. விவசாயிகள் நலனில் திமுக தலைவா்கள் அலட்சியம் காட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்கு ஊழலையும் 'கமிஷன்' கலாசாரத்தையும் மட்டுமே கொண்டு வந்துள்ளது; மதுபான மாஃபியா, மணல் மாஃபியா, கனிம வளம் மாஃபியா மற்றும் நில மாஃபியா ஆகியவற்றுக்குத் துணை நிற்கும் அரசாகவே இது செயல்பட்டு வருகிறது," என்று அவர் குற்றம் சாட்டினார்.
இப்போது ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. எனவே, தமிழக மக்கள் திமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் எடப்பாடி பழனிசாமியை அடுத்த முதல்வராக கொண்டு வர முடிவு செய்துவிட்டனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
மேலும், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வரும். காவல் துறை நேரடியாக தோ்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும். அதிகாரிகள் இடமாற்றம் குறித்து எங்களுக்குக் கருத்து எதுவும் இல்லை. திமுக எந்தவொரு அரசியலமைப்பு அதிகாரத்தையும் மதித்ததில்லை. அவா்கள் ஆளுநா், பிரதமரை அவமதித்தது போல, தற்போது தோ்தல் ஆணையத்தையும் அவமதித்துள்ளனா் என்றாா் பியூஷ் கோயல்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் முதன்மையான போட்டி நிலவுகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' இந்தேர்தலை ஒரு மும்முனைப் போட்டியாக மாற்றும் நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளது.
Union Minister Piyush Goyal offered prayers at the Arulmigu Aranganatha Swamy Temple in Srirangam in Tamil Nadu's Tiruchirappalli during the early hours of Monday as part of the sacred Viswaroopa Darshan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.