சென்னை நேரு விளையாட்டு அரங்கம். மாலை நேரத்தில் தன்னுடைய பயிற்சிகளைப் பயிற்சியாளர் வீரமணியின் துணையுடன் ஆரம்பிக்கிறார் 26 வயதான சோலைராஜ். 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் இவருடைய ஒரு கால் அகற்றப்பட்டது. ஆனால் தன்னம்பிக்கை இழக்காமல் சாதனைப்படைத்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருபவர் இதுவரை 100மீ, 200 மீ பந்தயங்களில் கலந்து கொண்டு வெண்கலம், தங்கப் பதக்கத்தை வென்றவர்.
சோலைராஜ் கடந்த வந்த பாதை தான் என்ன? அவரே மனம் திறக்கிறார்:
""என்னுடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவிலுள்ள கே.வி.குப்பம். பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்துத் தூத்துக்குடியில் டிப்ளமோ பட்டம் பெற்றேன். ஆனால் அப்பா போன்று ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை. அதற்குப் பட்டப்படிப்புப் படித்திருக்க வேண்டும். அதனால் வேலையைவிட்டுவிட்டுப் பட்டப்படிப்பு படிக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்பாவும் என்னுடைய ஆசைக்குச் சம்மதம் தெரிவித்தார். 2012-ஆம் ஆண்டு கிழக்கு தாம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். கல்லூரி தொடங்குவதற்கு முந்தைய நாள் என்னுடைய நண்பருடன் பைக்கில் சென்றேன். அந்த நாள் என்னுடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றப் போகிறது என்பது தெரியாது.
வளைவு ஒன்றில் திரும்பும் போது ஸ்கார்பியோ கார் ஒன்று வேகமாக வந்து என் மீது மோதியது. கீழே விழுந்துவிட்டேன். உடனே இடது காலில் இருந்து ரத்தம் கொட்டியது. அனைவரும் வேடிக்கை பார்த்துச் சென்றார்கள். ஆனால் உதவ யாரும் முன் வரவில்லை. நீண்ட நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது என்னுடைய சுய நினைவை இழக்க ஆரம்பித்தேன். மூன்று நாள்களுக்குப் பிறகு கண் விழித்தேன். அப்போது என்னை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.
இரண்டு முறை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தும் முயற்சி தோல்வியடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் என்னை அனுமதித்தார்கள். மருத்துவர்கள் உயிர் பிழைக்க வேண்டுமானால் இடது காலை அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மூன்று நாள்கள் சுய நினைவை இழந்தேன். எனக்கு சுய நினைவு திரும்பிய போது என்னுடைய இடது கால் அகற்றப்பட்டு இருந்தது. கண் விழித்துப் பார்த்து கதறினேன். அப்பாவும் ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதுகொண்டே அறையைவிட்டு வெளியே போய்விட்டார். கால்கள் இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்த போது செத்துவிடலாம் என்ற எண்ணம் வந்தது.
என்னைக் காப்பாற்றிய மருத்துவர்களை அழைத்து "என்னை அப்பாவுக்குத் தெரியாமல் கொன்றுவிடுங்கள்' என்று கெஞ்சினேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். மறுநாள் மருத்துவர் ஒருவர் வந்தார். "தம்பி உனக்குப் போனது கால் மட்டும் தான் வாழ்க்கையில்லை' என்று கால்களை இழந்தவர்கள் செயற்கை காலுடன் நடப்பதை காண்பித்தார். அப்போது தான் செயற்கைகால் என்று ஒன்று இருப்பதே தெரியும். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு எதிரே இலவசமாக செயற்கைக் கால் தந்தார்கள். ஆனால் அதனைப் பொருத்தும் போது வலி வேதனை தாங்க முடியவில்லை.
2013-ஆம் ஆண்டு அண்ணாநகரிலுள்ள செயற்கை கால் மையத்தில் இரண்டு லட்சம் செலவு செய்து அப்பா செயற்கை கால் வாங்கித் தந்தார். அது மிகவும் உதவியாக இருக்கிறது இன்று வரை.
என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா. திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய அம்மா வலிப்பு நோயாளி. மாத்திரை சாப்பிடவில்லை என்றால் வலிப்பு வந்துவிடும். இன்றும் படுத்த படுக்கையாகத் தான் உள்ளார். நான் அப்பா, அக்கா சேர்ந்துதான் பார்த்து வருகிறோம். விபத்தில் என்னுடைய கால்கள் இழந்துவிட்டேன் என்பதை நீண்டநாள்களுக்குப் பிறகு தான் அம்மாவிடம் அப்பா தெரிவித்தார். உடனே மயங்கி விழுந்துவிட்டார். அவருடைய மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்தால் மீண்டு கால் பொருத்திவிடலாம் என்று சொல்லி வைத்திருக்கிறோம்.
செயற்கை கால் உதவியுடன் ஓடுவதற்கான பயிற்சி ஐதராபாத்தில் சொல்லி தருகிறார்கள் என்று தெரிந்தது. உடனே அங்கு சென்றேன். அங்குப் பயிற்சியாளர் வீரமணியைச் சந்தித்தேன்.முதலில் சாப்பிட்டாயா? என்று தான் கேட்டார். அன்றிலிருந்து இன்று வரை அவருடைய சொந்த செலவில் என்னைப் பராமரித்து வருகிறார். அவரிடம் சிறிது நாள்கள் பயிற்சி பெற்றேன்.
2014-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றேன். தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டே நேரு ஸ்டேடியத்தில் ஓட்டப்பந்தயப் பயிற்சியில் இறங்கினேன். என்னுடைய பயிற்சியாளர் வீரமணிக்கு பயிற்சியளித்த ராஜன் என்பவர் எனக்குப் பயிற்சி அளித்தார். வேலையும் செய்து கொண்டே பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. வங்கி வேலையை விட்டுவிட்டேன். 2016- ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற மாரத்தான் பேட்டியில் கலந்து கொண்டேன். அப்போது என்னுடைய பயிற்சியாளர் வீரமணியை பெங்களூருக்கு மாற்றிவிட்டார்கள். தற்போது வருமான வரித்துறை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். அப்போது அவர் என்னை அழைத்து "நீயும் பெங்களூர் வந்துவிடு' என்றார். சரி, என்று பெங்களூர் சென்றேன். தங்குவதற்கு ஹாஸ்டல் ஏற்பாடு செய்து கொடுத்துப் பயிற்சியில் ஈடுபடச் செய்தார்.
தமிழ்நாடு பாரா கமிட்டியில் இருந்து மதுரையில் போட்டிகள் நடப்பதாகச் சொன்னார்கள். அதில் கலந்து கொண்டேன். 100மீ, 200 மீ போட்டிகளில் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்றேன். தொடர்ந்து கோவையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு 100 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றேன்.அப்போது உடன் இருந்த உதவியவர் பயிற்சியாளர் வீரமணி தான். மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் தேசிய அளவில் பாரா போட்டிகள் நடைபெறயிருக்கிறது. அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் . உலகளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தர வேண்டும். அதனை என்னுடைய ஓட்டத்தால் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்''என்றார்.
பயிற்சியாளர் வீரமணியிடம் பேசினோம்: ""ஒரு கால் இல்லாமல் ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த சோலைராஜ் பெங்களூர் கச்சி பொவ்லி ஸ்டேடியத்தில் சந்தித்தேன். ஒரு ரவுண்டு ஓடு பார்ப்போம் என்றதும் ஓடினான். அவனுடைய வேகத்தில் ஒரு தன்னம்பிக்கைத் தெரிந்தது. சரியான முயற்சியில் பயிற்சி அளித்தால் ஜெயிக்கும் ஆற்றல் உள்ள நபர். நாள் ஒன்றுக்கு சோலைராஜ் 8 மணி நேரம் கட்டாயம் பயற்சி செய்ய வேண்டும். ஊனமுற்றவர்கள் கலந்து கொள்ளும் போட்டியில் தற்போது டி 63 என்ற வகை அரசால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது முட்டி வரை ஊனமானவர்கள் என்ற தகுதியை தனியே பிரித்து இருக்கிறார்கள்.
இந்தியாவிலே டி.63 தகுதி பெற்ற ஒரே நபர் இவர் தான். தற்போது சோலைராஜ் 100 மீ கடப்பதற்கு 17 விநாடிகள் எடுத்துக் கொள்கிறான். அதனை 2 விநாடிகள் குறைக்க வேண்டும். 15 விநாடிகள் வந்து விட்டால் அவன் ஏசியன் கேம்ஸில் கலந்துக் கொள்ளலாம். வரும் 2022-ஆம் ஆண்டு ஏசியன் கேம்ஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு தகுதி பெற்றுவிட்டால் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். என்னால் முடிந்த உதவி செய்து சோலைராஜை, ஏசியன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குப் பெற செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்'' என்கிறார் வீரமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.