முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த சகோதரர்கள்

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சகோதரர், குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வு சென்னையில் நடந்தது.

Updated On : 9 மே, 2021 at 4:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சகோதரர், குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வு சென்னையில் நடந்தது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அச்சேய்லால்- மோதிலால். இருவரும் சகோதரர்கள். இதில் மோதிலாலுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் மனைவி தொடர்ந்து சண்டை போட்டதால் மன நலம் பாதிக்கப்பட்டு மத்திய பிரதேசத்திலுள்ள மன நல காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மன நல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.
இந்த சம்பவம் 1998-ஆம் ஆண்டு நடந்தது. உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மோதிலாலின் சகோதரர் அச்சேய்லால். ஆனால் போலீசார் பல இடங்களில் தேடியும் மோதிலாலை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் ஆனதால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை கூட குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் உதவும் கரங்கள் அமைப்பின் தீவிர முயற்சியால் மோதிலால் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் அவர் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
எப்படி இந்த நிகழ்வு சாத்தியமானது. இணைப்புக்கு காரணமான சமூக ஆர்வலர் சீனிவாசராவ் சொல்கிறார்:
""கேரளாவிலுள்ள "மரிய சாதனம்' என்ற மறுவாழ்வு மையத்தில் சிகிக்சை பெற்று வந்த மோதிலாலை கவனிப்பதற்கு அங்கு போதிய வசதி இல்லாததால் உதவும் கரங்களின் கோவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிலிருந்து அவர் சென்னை உதவும் கரங்கள் மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு பழைய நினைவுகள் மீண்டு வந்தது. தான் மத்திய பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வந்த விஷயத்தைச் சொன்னார். ஆனால் அவர் சிகிச்சை பெற்று வந்த மையத்தின் பெயரை கேட்டால் சொல்ல தெரியவில்லை. ஆனால் அவருடைய உள்ளூர் காவல் நிலையத்தில் பெயரை சரியாக சொன்னார்.
அந்த காவல்நிலையத்துக்கு நேரில் சென்றோம். மோதிலாலின் புகைப்படத்தை காட்டினோம். உள்ளூரில் பல இடங்களில் தேடுதலில் இறங்கிய போது தான் அவருடைய சகோதரர் அச்சேய்லாலை சந்திக்க நேர்ந்தது.அவர் தன்னுடைய சகோதரர் காணாமல் போன விவரத்தை தேதியுடன் சரியாக சொன்னார்.
இரு சகோதரர்களை சந்திக்க வைப்பதற்கு முடிவு செய்தோம். சென்னையில் கடந்த வாரம் அவர்களுடைய சந்திப்பு நடந்தது. 22 ஆண்டுகளுக்கு சந்தித்த தனது சகோதரன் மோதிலாலை கட்டியணைத்து கண்கலங்கினார் அச்சேய்லால்'' என்றார்
மோதிலால் காணாமல் போகும் போது அவருடைய மகன் சஞ்சய் பட்டேலுக்கு வயது 3. இப்போது சஞ்சய்க்கு அப்பா மோதிலால் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
"எங்கள் குடும்பத்துடன் அப்பா இணைவார் என்று எதிர்பார்க்கவில்லை' என்கிறார் மகன் சஞ்சய் பட்டேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.