சென்னை மாதவரத்தை அடுத்த மணலி - சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல்.
தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்தவர் . கரோனா காலத்தில் ஆள் குறைப்புக் காரணமாக வேலையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. ஊரடங்கு மனிதர்களுக்குத் தானே தவிர மனதிற்கு இல்லை என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட அவர்.. மண்ணுக்கும், மனிதர்களுக்கும் சேதம் விளைவிக்காத வகையில்.. "இயற்கை தமிழ் குடில்' என்ற நெகிழி இல்லாத தற்சார்பு வாழ்க்கை முறையை நினைவூட்டும் வகையில் ஒரு சிறிய குடிசை வீட்டோடு இணைந்திருக்கும் தோட்டத்தை அமைத்தார்..
அதில் நெகிழி இல்லாமலும் நமக்குத் தேவையான பொருள்களை நாமே தயாரிக்கும் வண்ணம் வீடு முழுவதும் கிட்டத்தட்ட 80% தன்னால் முடிந்தவரை தான் தயாரித்த பொருளாகவே இருக்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டார்...
முதலில் மரபு மாறாத இயற்கை விதைகளை விதைக்கத் துவங்கி அதற்குத் தேவையான உரங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவரிடம் பேசினோம்:
""பொது முடக்கம் என்பது பலருக்கும் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. அந்த வகையில் எனது நண்பர் ஒருவர் சிரட்டை மூலம் சில கலைப்பொருள்களை உருவாக்கியிருந்தார். அதைப் பார்த்த போது இயற்கைக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத இந்தக் கழிவிலிருந்து கலைப்பொருள்களை நாமும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சிரட்டையைப் பொருத்தவரை பல நன்மைகள் உள்ளன. தேங்காய் சிரட்டைகளை அதிகம் அடுப்பு எரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தற்போது அவை காப்பிக் கோப்பைகளாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகுப் பொருள்களாகத் தயாரிக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் செய்கிறார்கள் என்பதை இணையம் மூலம் தெரிந்து கொண்டு முழுமையாக இந்த வேலையில் இறங்கினேன். இதற்கு நமது தென் இந்தியா மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதலில் சிரட்டையிலிருந்து தேநீர் குவளையை உருவாக்கிறேன். 9 வகையான குவளையை உருவாக்கினேன். அதாவது ரசம், சூப் போன்ற பல வகை உணவு பொருள்களுக்காகப் பயன்படுத்துமாறு வடிவமைத்தேன். சமையலுக்கு உதவும் தேவையான அகப்பை, கரண்டி என 100-க்கும் அதிகமான பொருள்களைச் சிரட்டையில் செய்தேன். ஏன் இதனை விற்பனை செய்யக்கூடாது என என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் விற்பனை செய்யவில்லை. காட்சி பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.
மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் 90 சதவிகிதம் இயற்கையான பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டவை. இதில் நெகிழி கிடையாது. முதலில் இயந்திரம் மூலம் இந்த சிரட்டை மென்மையாக்குவேன். தேவைபட்டால் துளையிடுவதற்குத் தனி இயந்திரம் வைத்துள்ளேன். ஒவ்வொரு பொருளையும் வடிவமைக்கக் கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக மாடு, சேவல் போன்ற உருவங்களைச் சிரட்டையால் செய்வது கடினம். ஆனால் என்னுடைய முயற்சியை விடாமல் செய்து வருகிறேன். சிரட்டையால் மட்டுமல்ல வில்வக்காயை தேநீர் குவளை ஆக்கியிருக்கிறேன். என் தோட்டத்தில் விளைந்த சுரக்காயை வைத்து தொலைபேசி தயார் செய்தேன்.
பனை மரத்திலிருந்து பல படைப்புகள்
பனை மரத்திலிருந்தும் பல பொருள்களை உருவாக்கியிருக்கிறேன். பனை மர வீடு, பனை மர ஒலையிலிருந்து தோரணம், சிறு சிறு கலை வண்ணப் பொருள்களை உருவாக்கினேன். சீட்டுக்குருவிகளுக்காக மூங்கிலில் வீடு செய்து எனது தோட்டத்தில் வைத்துள்னேன். விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் கழிவு பொருள்களிலிருந்து டிராக்டரை உருவாக்கினேன்.
என் வீட்டின் பின்புறத்தில் 300 சதுர அடி இடத்தில் சிறு தோட்டம் ஒன்றை வைத்துள்னேன். அதில் சாரணை கீரை, பருப்பு கீரை, பசலைக்கீரை, தவசி கீரை போன்றவற்றை பயிரிட்டேன். மேலும் வெள்ளை சங்கு பூ, பிரண்டை, சுண்டைக்காய் செடி, செம்பருத்தி, நாட்டுத்தக்காளி, மல்லிகைப்பூ, கற்பூரவள்ளி போன்ற பல செடிகளை வைத்து பராமரித்து வருகிறேன். இந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் பொருள்களை வைத்து சூப் கடை ஒன்றை நடத்தி வருகிறேன்.
தற்போது தேங்காய் நார் கழிவில் இருந்து மண் இல்லாத விவசாயத்தையும் முயற்சித்து வருகிறேன். பனை மரத் துண்டுகளைக் கொண்டு மட்டை பாத்தி முறையில் மரம்,பூச் செடிகளை வளர்த்து வருகிறேன்.
பல முயற்சிகளுக்குப் பிறகு சாண கழிவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து உயிரியல் வாயு எனப்படும் பயோகேஸ் உருவாக்கி சமையலுக்குப் பயன்படும் எரிவாயு மற்றும் தோட்டத்திற்குத் தேவையான உரம் பயன்படுத்தி வருகிறேன்...
இயற்கையையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் இளைய சமுதாயம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். நமக்குத் தேவையான பொருள்களை நாமே உற்பத்தி செய்யக் கற்றுக் கொள்வது அவசியம்'' என்கிறார் கமல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.