முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மை விழியார் மனை அகல்

தேசபந்து சி.ஆர். தாஸ் ஒரு முறை வெளியூர் சென்று ஒரு வழக்கில் ஆஜராகி வெற்றி பெற்றுப் புகை வண்டியில் முதல் வகுப்பில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

தேசபந்து சி.ஆர். தாஸ் ஒரு முறை வெளியூர் சென்று ஒரு வழக்கில் ஆஜராகி வெற்றி பெற்றுப் புகை வண்டியில் முதல் வகுப்பில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அதே பெட்டியில் நவ நாகரீக நங்கை ஒருத்தியும் இருந்தாள்.

ஒரு சமயம் சில புத்தகங்கள் வாங்க பெட்டியைத் திறந்து பணம் எடுத்தார். அந்த பெட்டியில் கட்டுக் கட்டமாக பணம் இருப்பதை அந்த நங்கை பார்த்துவிட்டாள். 
தாஸிடம் பேச்சுக் கொடுத்து சிநேகமானாள்.

"தாஸ்! உங்களிடம் என் இதயத்தைப் பறி கொடுத்து விட்டேன். நாம் மணந்து கொள்ளலாமா?'  என்றாள்.

"அம்மணி நாம் தற்போது தான் ரயிலில் சந்தித்தோம். சிறிது நேரமே பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் மணந்து கொள்ள முடிவெடுப்பது பேதைமை அல்லவா' என்றார் தாஸ்.

"தாங்கள் என் ஆசையை நிராகரித்தால் அபாயச் சங்கிலியைப் பிடித்திழுத்து தாங்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தலைகுனிவு உண்டாக்குவேன்'  என்று மிரட்டினாள் அந்தப் பெண்.

தாஸ் சிறிது யோசித்தார். பிறகு "பெண்ணே! நீ அழகாகத்தான் இருக்கிறாய். உன்னை மணப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஆனால் என் அத்தை மகள் இதை நம்ப மாட்டாள். நீ ஒரு காகிதத்தில் உன் விருப்பத்தைத் தெளிவாக எழுது. இதைக் காட்டி என் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று உன்னை மணந்து கொள்கிறேன்' என்றார்.

அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியோடு தன் விருப்பத்தைக் காகிதத்தில் தெளிவாக எழுதிக் கொடுத்தாள். பெற்றுக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்திழுத்தார். ஓட முயன்ற அவளை ரயில்வே போலீஸாரிடம் கொடுத்து நடந்ததை விளக்கினார் தாஸ். 

தாஸ் சத்தம் போட்டிருந்தால் விஷயம் வேறு மாதிரி போயிருக்கும். சமயோசிதமாக செயல்பட்டதால் தான் தப்பியதோடு அவளையும் வசமாக மாட்ட வைத்தார். 

(ஆத்திசூடிக் கதையில் ஒன்று)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.